"ஞானசாரவும், நீதிபதி ரங்கதிஸாநாயகவும்" - விக்டர் ஐவன்
இலங்கை நீதித்துறை சமகாலத்தில் மக்களின் நம்பிக்கையையும் கௌரவத்தையும் இழந்த நிலையிலேயே செயற்பட்டுவருகிறது என கருத முடியும். சர்வதேசரீதியிலும் கூட கடும் கண்டனத்துக்கும் விசனத்துக்கும் உட்பட்ட நிலையிலேயே இலங்கை நீதித்துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
படுமோசமான ஊழல்வாதியான தலைமைநீதியரசரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதன் மூலம் மட்டும் நிலைமையை சுமூகமானதாக மாற்றலாம் என கருத முடியாது.
நீதித்துறையில் நிகழ்ந்துள்ள படுமோசமான தவறுகள் என்னவென்று ஆராயப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சுயாதீனமான, நீதியான முறையில் செயற்படும் வகையில் நீதித்துறையை புணர்நிர்மாணம் செய்யும் வகையில் நீதித்துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.
மறுசீரமைப்புகள் மூலம் மாத்திரம் நீதித்துறை இழந்துள்ள கௌரவத்தை மீள கட்டியெழுப்ப முடியாது. அதற்காக நீதித்துறை அதிகாரிகள் தமது செயற்பாடுகளாலும் பாடுபட்டு உழைப்பது கட்டாயம்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக அவர்கள் செய்தது நீதித் துறைசார்ந்தோர் அனைவருக்கும் முன்ணுதாரணமான, நீதிமன்றம் மீதான நம்பிக்கையும் கௌரவத்தையும் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தும் ஒரு அதீததைரியமான செயல்.
ஊடகவியலாளர் எக்னலிகொட தொடர்பான வழக்கு நாட்டில் பெரும் பரபரப்பையும் சூடான விவாதங்களையும் ஏற்படுத்திய ஒரு வழக்கு என கருதலாம். இவ்வழக்கில் பிரதிவாதிகளாக நிற்போர் இலங்கை புலனாய்வுப் பிரிவை சேர்ந்த சிலரே.
சிங்கள இனவாதிகளின் மிக பிரபலமான வாதமாக அமைந்திருப்பது இந்த வழக்கு விசாரணை நடாத்தி செல்லப்படுவது இலங்கை புலனாய்வுப் பிரிவினரை அழித்தொழிக்கவே என்பதாகும்.
இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடாத்தப்பட்டு முன்னெடுக்கப்படும் இவ்வழக்கிற்கு இராணுவத்தின் சில முக்கிய புள்ளியினரும் தடைக்கற்களாகவே நிற்கின்றனர்.
மக்களால் தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் இவ்வழக்கின் பிரதிவாதிகளை பகிரங்கமாக பாதுகாக்கும் அதேவேளை இவர்கள் வழக்கு நடைபெறும் நாட்களில் நேரடியாக சென்று பிரதிவாதிகளுக்கு தமது பகிரங்கமாக ஆதரவை தெரிவிப்பதனையும் காண முடிகிறது.
பொதுபலசேனாவின் தலைவராக செயற்படும் ஞானசாரஹிமி 26ஆம் திகதி நீதிமன்றத்துக்குள் நடாத்திய நாடகம் நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகளை குழப்பியடிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்பது மிகத் தெளிவு.
நீதிபதி மற்றும் வாதாடும் அரசதரப்பு நீதிபதி மற்றும் விசாரணைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மற்றும் குற்றம் சுமத்தியவரையும் பயமுறுத்தி இவ்வழக்கை முன்னெடுத்துச் செல்லப்படுவதனை நிறுத்துவதே ஞானசார தேரரின் தந்திரமாக இருந்ததனை காண முடிந்தது.
தவறியாவது நீதிபதி ஞானசார தேரரின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து அடங்கிப் போயிருந்தால் இந்த வழக்கை நடாத்தி முன்னெடுத்து செல்ல முடியாமல் பெரும் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கும்.
அன்றைய தினம் ஞானசார தேரரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் அவரை கைது செய்யுமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
ஞானசார தேரர் பொலிஸில் சரணடைந்து அடுத்த தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினமன்று பெரிய தீவிரவாத சிங்கள இனவாதக் குழுவொன்று நீதிமன்றத்தில் புகுந்து குண்டர்களாக செயற்பட்டு நீதிமன்றத்தை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் தாம் தீக்குழிக்கப் போவதாக கூறி ஒரு பிக்குவும் பொலிஸாரை அச்சுறுத்தினார்.
நீதிபதி இவ்வச்சுறுத்தல்களுக்கு, இந்த ரவுடி கும்பலுக்கு அஞ்சாமல் ஞானசார தேரருக்கு பிணை வழங்கு முடியாதென தீர்ப்பு வழங்கியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவித்த அனைவரையும் கைது செய்யுமாறு அதற்கடுத்த தினம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் தைரியத்துடன் வீரியமாக நடந்து கொண்ட விதம் மிகவும் அரிதாக நிகழும் மிகவும் பாராட்டக்கூடிய செயல்.
நீதிமன்றங்கள் நீதிபதிகள் இழந்துள்ள கௌரவத்தை மரியாதையை மீளக் கொண்டுவரும் ஒரு தைரியமான செயல். இச்செயலின் பெறுமானத்தை அளவிடுவது மிக சிரமம் அத்தனை பெறுமதியான அபாரமான செயல் அது.
ஏதாவது காரணங்களுக்காக நீதிபதி ரங்க திஸாநாயக அக்குண்டர்களுக்கு பயந்து தனது தீர்மானத்திலிருந்து பின்வாங்கியிருந்தால் அது அவரின் வாழ்கைக்கு, அவரின் தொழிலுக்க ஏற்பட்ட அழிக்க முடியாத மிகப் பெரும் கரும்புள்ளியாகவே அது மாறியிருக்கும்.
அதே போல் அப்படியானதொரு குணடர்களுக்கு அடங்கிப் போகும் ஒரு முடிவால் நீதித்துறைக்கு ஏற்பட இருந்த கலங்கம், சேதம் மிகப் பாரியதாக இருந்திருக்கும். இதிலிருந்து தெரியவருவதாவது எந்த நிறுவனத்துடைய கௌரவமும் பலவந்தமாக பெற்றுக்கொள்ளப்படுவதல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கௌரவமான செயல்களாலேயே அது பெறப்படுகிறது.
நாட்டிற்கு அவசியமாகவிருப்பது ஆளும் கட்சிக்கு அல்லது எதிர்கட்சிக்கு பக்கசார்பாக இயங்கும் நீதிமன்றம் அல்ல. மக்களின் உரிமைகளை பாதுகாக்கும், சட்டத்துக்கமைவாக சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தும், சுயாதீனமாக ஒரு நீதிமன்ற கட்டமைப்பே.
இந்த மாற்றம் வரவேண்டியது வெளியிலிருந்து அல்ல அம்மாற்றம் உள்ளிருந்தே வரவேண்டும். நீதிமன்றங்கள் இழந்திருக்கும் கௌரவத்தை மறுபடி மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ள மிக தைரியமாக முன்னின்று செயல்பட வேண்டியவர்கள் நீதிபதிகளே.
நீதிமன்றங்களின் சுயாதீனத்துக்காக, கௌரவத்தை பாதுகாப்பதற்காக, தேவைப்படும் மறுசீரமைப்புக்களை கொண்டு வருவதற்கும் முன்நின்று செயற்பட வேண்டியவர்களும் நீதிபதிகளே.
(ராவய )
Post a Comment