ஆண்களை மலடாக்கும், செல்போன்கள் - ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்
தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வருவதால் ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய இளைய தலைமுறையிடையே செல்போன் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு காலத்தில் செல்போன் பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டது. ஆனால், தற்போது அதன் பயன்பாடுகள் பற்றி சொல்லவே தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்து எது தேவையானாலும், அதனை பெறும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் செல்போன்களில் தற்போது கிடைக்கிறது. ஆனால், செல்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால், ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வருவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இஸ்ரேலை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று, இந்த ஆய்வை நடத்தியது.
இதுகுறித்து மருந்து நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இளைய தலைமுறையினர் செல்போனில் தொடர்ந்து பேசி வருகின்றனர். படுக்கையை விட்டு எழுவதில் இருந்து கையில் செல்லுடன்தான் காட்சியளிக்கின்றனர். அவர்களது பேன்ட் பாக்கெட்டுகளில் செல்போன்கள் எப்போதும் குடியிருக்கின்றன. இதனால் அவர்களது உயிரணுவில் குறைபாடு ஏற்படுகிறது. இது அவர்களின் குழந்தை பேறை கேள்விக்குரியதாக மாற்றுகிறது. ஒரு நபர், நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் தொடர்ந்து செல்போனில் பேசினாலே, கண்டிப்பாக அவர்களது உயிரணுவில் குறைபாடு ஏற்படுகிறது. அவர்களது உயிரணுக்களை பரிசோதித்து பார்த்ததில், செல்போன் பயன்படுத்தாத மற்றவர்களின் உயிரணுக்களை விட மிக குறைவாகதான் இருக்கிறது. ஆனாலும் ஆய்வு நடத்தப்பட்ட ஒரு சிலருக்கு இந்த குறைபாடு ஏற்படவில்லை.
எனவே இளையோர் தங்களது பேன்ட் பாக்கெட்டுகளில் இருந்து முடிந்தளவில் செல்போனை தொலைவில் வைத்திருக்க வேண்டும். செல்போனில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள், ஆண்களின் உயிரணுக்களை அழித்து விடுகின்றன. இதனால் அவர்களுக்கு குழந்தை பேறு தடைபடுகிறது. செல்போனுக்கு சார்ஜ் போடும்போது, சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். மேலும், பேன்ட் பாக்கெட்டுகளில் இருந்து கூடியவரை தள்ளி இருக்கும்படி செய்து வருவதன் மூலம் இந்த குறையை தீர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment