Header Ads



சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அமைதியாக வாழ்கின்றன - ஹுசேனிடம் சொன்ன மகாநாயக்க தேரர்

உள்ளக பொறிமுறைகளின் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அனைத்துலகப் பொறிமுறைகள் தேவையில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், மல்வத்தை பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று கண்டிக்குச் சென்று தலதா மாளிகையில் வழிபாடு செய்ததுடன், மல்வத்த பீட மகாநாயக்க தேரரையும் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம்,  நாட்டில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்த தற்போதைய அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஏதாவது கவலைகள் உள்ளனவா என்று, மல்வத்த பீட மகாநாயக்க தேரர் கேள்வி எழுப்பினார்.

“தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கின்ற அளவுக்கு எமது நாட்டு அதிபர் சென்றிருக்கிறார்.

சிறிலங்கா அதிபரும், பிரதமரும் நியாயமான முறையில் நடந்து கொள்வர் என்று மக்கள் நம்புகின்றனர்.

சிறிலங்கா அதிபரும், பிரதமரும் வடபகுதி மக்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அவர்கள் தமது கடமைகளை நன்றாக செய்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு ஐ.நா முழு உதவியையும் வழங்க வேண்டும்.

எமது சொந்த பொறிமுறையின் மூலம், கலந்துரையாடல்களை நடத்தி எல்லாவற்றுக்கும் தீர்வு காண முடியும்.

நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள், அமைதியாக வாழ்ந்து வருகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.