மஞ்சந்தொடுவாய் அல்-ஹூஸைனியா வித்தியாலயத்திற்கு, உதவுவதாக அப்துர் ரஹ்மான் உறுதி
மட்டக்களப்பு மஞ்சந் தொடுவாய் அல்-ஹூஸைனியா வித்தியாலயத்தின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்கான விஜயம் ஒன்றினை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டார். மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் NK றம்ளான் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.இவ்விஜயத்தின் போது NFGG யின் செயற்குழு உறுப்பினர் அலாவுதீன் அவர்களும் பங்குபற்றியிருந்தார்.
அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல்வேறு பிரச்சினைகளுடன் இயங்கிவரும் இப்பாடசாலையின் நிலவரங்களை நேரில் கண்டறிந்து முடியுமான உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமுகமாகவே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது காத்தான்குடியின் வடக்கு எல்லைக் கிராமமான மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா பகுதியில் வாழும் மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். எனினும், இனப்பிரச்சினை மற்றும் யுத்த சூழ்நிலை காரணமாக ஏனைய பாடசாலைகளைப் போன்று இப்பாடசாலையினால் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை.
இப்பிரதேச மாணவர்களுக்கான ஆரம்பப்பாடசாலை ஒன்றின் தேவை வருடாவருடம் அதிகரித்துச் செல்லுகின்ற போதிலும் இப்பாடசாலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான வீழ்ச்சியை கண்டுவருவது கவலைக்கிடமான விடயமாகும். குறிப்பாக, கடந்த ஜனவரி மாதத்தில் ஆண்டு 1 இல் கல்வி கற்பதற்கு எந்தவொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை இப்பாடசாலையில் சேர்ப்பதற்கு முன்வந்திருக்கவில்லை. இப்பாடசாலை ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு மாணவரும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதும் இப்பாடசாலையின் கல்வி நிலைமையினை குறித்துக் காட்டுகின்றது.
பாடசாலையின் தொடர்ச்சியான இந்த வீழ்ச்சி நிலைமையினை நிறுத்தி இதனை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்லும் பொருட்டு இவ்வருடத்திலிருந்து புதிய அதிபர் ஒருவரும் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
இந்தப் பின்னணியில்தான் இப்பாடசாலையின் கல்வி நிலையினை முன்னேற்று முகமாக சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறது.
அந்த வகையில் NFGGயின் நிதியுதவியோடு இப்பாடசாலையின் வகுப்பறைகளை சீரமைப்பதற்கும், மின்சார இணைப்பை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன.
அத்தோடு தரம் 3,4 மற்றும் 5இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு விசேடமான பயிற்சிகளை வழங்கி 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
Post a Comment