பெரும்பான்மை ஆதரவுடன் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருப்பதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் 13ஆவது திருத்தம், 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என்பவற்றின் அடிப்படையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு யோசனையையும் உள்ளடக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரேரணை கடந்த ஜனவரி 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு எதிர்த்தரப்பும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியும் திருத்தங்களை முன்வைத்திருந்தன. இதில் சுதந்திரக்கட்சியின் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த ஜயம்பதி விக்ரமரத்ன எம்.பி. பெரும்பான்மையானவர்கள் உடன்படக்கூடிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவூட்டும் கருத்தரங்கு நேற்று ‘விசும்பாய’வில் நடைபெற்றது. ஊடக அமைச்சும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
1972, 1978 யாப்புகள் முழுமையாக மக்கள் கருத்துப் பெறப்பட்டு நிறைவேற்றப்படவில்லை அவற்றில் குறைபாடுகள் இருந்தன. 13ஆவது திருத்தத்தினூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட போதும் கடந்த அரசுகள் அந்த அதிகாரங்களை மீளப்பெற்றன.
அரசியல் கட்சிகளின் அதிகார மாற்றத்திற்கேற்பவே அரசியலமைப்புகள் தயாரிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினையை ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன ஏற்றுக்கொண்டதோடு 5/6 பெரும்பான்மை பலம் கிடைத்த பின்னர் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசியலமைப்பை திருத்துவதற்கு பொன்னான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 1972 யாப்பு திருத்தத்தின் போது மாவட்ட சபைகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரம் வழங்குமாறு தர்மலிங்கம் யோசனை முன்வைத்தார். அது கவனத்தில் கொள்ளப்படவில்லை இதனை ஏற்று செயற்படுத்தியிருந்தால் பின்னர் தேசிய பிரச்சினை எழுந்திருக்காது. அன்று பொலிஸ், காணி அதிகாரங்கள் கோரப்படவில்லை. என்று இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்காதற்கு சகரும் பொறுப்புகூற வேண்டும்.
1978 யாப்பிற்கு முரணாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முடியாது எனினும் 1978 யாப்பில் புதிய அரசியலமைப்பு அமைக்க சில சரத்துக்களில் இடமளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பொன்று இல்லாமல் ஒரு செக்கன் கூட இருக்க முடியாது உத்தேச சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சர்வஜன வாக்கெடுப்பிற்காக சமர்ப்பிக்கப்படும். இதற்காக சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்த தேவையில்லை.
நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். விருப்பு வாக்கு முறையை மாற்றவும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் உடன்பாடு காணப்படுகிறது.
மனித உரிமை தொடர்பில் புதிய சரத்துகள் உள்ளடக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது சமூக, பொருளாதார, கலாசார, மகளிர், சிறுவர் உரிமைகளையும் யாப்பில் உள்ளடக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு பிரேரணையை தயாரிக்க காலம் பிடிக்காது அதற்கு உடன்பாடு ஏற்படுத்தி நிறைவேற்றுவதே பிரதானமானது.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரத்தை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் கூடுதல் நம்பிக்கை இருக்கும் நபர் பிரதமராக தெரிவு செய்யப்படுவார்.
ஒவ்வொரு மதத்திற்கும் இருக்கும் தனிப்பட்ட சட்டங்களில் தலையீடு செய்வது தொடர்பில் இருவேறு கருத்துகள் உள்ளன. புத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏனைய மதங்களுக்கு பாதிப்பு எழாது. மதங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் மதத் தலைவர்களுடன் பேசி முடிவு எடுக்க முடியும் என்றார்.
இதன்போது ஊடகவியலாளர்களும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு யோசனைகளை முன்வைத்தனர்.
Post a Comment