Header Ads



மைத்திரி - மஹிந்த கடும் போர்

-நஜீப் பின் கபூர்-

சில தனிப்பட்ட காரணங்களினால் பல வாரங்களாக நமது வாசகர்களைச் சந்திக்க முடியாமல் போயிருந்தது. நாடு 68வது சுதந்திர தினத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொழும்பு காலி முகத்திடலில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் கொண்டாடியது.

இன்னும் சிலர் ஹோமாகமையில் அன்றைய தினம் போட்டிக் கூட்டம் போட்டதுடன், அங்கு சர்ச்சைக்குரிய மாற்றுக் கொடிகளையும் காட்சிப்படுத்தி இருக்கின்றார்கள். இது அன்று வடக்கில் பிரபாகரன் பறக்கவிட்ட புலிக் கொடிக்குச் சமமான ஒரு செயல். ஆனால் இந்த விடயத்தை ஒரு அதிர்ச்சியான சமிக்ஞையாக சிங்கள சமூகமோ ஊடகங்களோ எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

கடைசி நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவும் இந்த எதிரணியின் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் துவங்கினார். தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் விழாவில் தானும் பங்கேற்க மாட்டேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்தது மட்டுமல்லாது, ஆளும் தரப்பில் இணைந்து கொண்டுள்ள பலரிடம் தமது நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்குமாறு ஆள் வைத்து அவர் வேலை பார்த்தார் என்ற தகவல்கள் பற்றி நிறையவே எங்களுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

ஜனாதிபதி மைத்திபால சிரிசேனா மக்களுக்குத் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை நோக்கி நகர நிறையவே நாட்டங்கள் இருந்தாலும். கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த அடாவடித்தனங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கின்ற நேரத்தில் நிறையவே சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. இது அவருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதிக்கத்தை தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற விடயம்! வயிற்றுக்காக தம்பி கயிற்றிலாடுகின்றான் என்ற நிலைதான் என்பது கட்டுரையாளனின் கருத்து.
  
இந்தப் பின்னணியில் மைத்திரி சுதந்திரக் கட்சியில் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளும் நோக்கில் மென்போக்கு நிலையில் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். இப்படி நடந்து கொண்டால் இந்த நல்லரசு மக்களின் கடும் கோபப் பார்வைக்கு இலக்காக வேண்டி வரும் என்று இவர்களை பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் நேரடியாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தனது அழுத்தங்களைக் கொடுக்கத்துவங்கினர். 

இது தொடர்பான உத்தியோக பூர்வமான சந்திப்பொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நடைபெற்றது. மைத்திரியை பதவிக்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றிய வெகுஜன இயக்கங்களும் தேர்தல் கால வாக்குறுதிகளை நினைவு படுத்தி நச்சரிக்க குற்றவாளிகள் மீது நடவடிக்கை என்று வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மஹிந்தவை விரட்டியடிப்பதில் முக்கிய பங்கு தாரர்களாக இருந்த ஜேவிபி இந்த மைத்திரி - ரணில் மென்போக்கு குறித்து தமது கடுமையான குற்றச்சாட்டை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு மத்தியில் என்னதான் நடவடிக்கை விசாரணைகள் என்று கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் சட்டத்துறையும், பொலிசும் மந்த கெதியில் நடந்து கொள்கின்றது என்று சாக்குப் போக்குச் சொல்லப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் அமைச்சர் கபீர் ஹசிம் வார்த்தைகளில் கட்டுரையாளன் இந்த விடயத்தைக் கூறுவதானால், நாம் என்ன தான் கட்டளைகள் போட்டாலும் அதிகாரிகள் இன்னும் மஹிந்த விசுவாசிகளாகவே நடந்து கொள்கின்றார்கள் என்று குற்றம் சுமத்திக் கொண்டிருக்கின்றார். 

சு.கட்சிக்குள் தொடர்ந்தும் தனது இருப்பை மைத்திரி தக்க வைத்துக் கொள்வதில் மிகுந்த நெருக்கடிகளை எதிர் நோக்கி வருகின்றார் என்பது பகிரங்க விவகாரம். தனது ஆட்சி காலத்தில் நடந்த மோசடிகள், தவறுகள் குற்றங்கள் தொடர்ப்பில் விட்டுக்கொடுப்பிற்கு மஹிந்த மைத்திரியை நேரடியாகவும் மறைமுகமாகவும் நாடிப் பார்த்த போது உறுதியான எந்தப் பிடியையும் மைத்திரியால் கொடுக்க முடியாமல் இருந்தது. 

தனது காலத்தில் நடந்த தவறுகளுக்கு மைத்திரியிடமிருந்து எந்த பாதுகாப்பான உத்தரவாதமும் இல்லாத நிலை. தற்போது ஆளும் தரப்பிலும் அதற்கு வெளியேயும் உள்ள ஊழலுக்கு எதிரானவர்களின் கரங்கள் மேலோங்கி இருப்பதால் ராஜபக்ஷக்களுக்கும் அவர்களின் ஊழல் பேர்வலிகளுக்கும் பலத்த நெருக்கடி நிலை. இதிலிருந்து வெளியே வருவதற்கு தற்போது இவர்களுக்குள்ள ஒரே வழி சுதந்திரக் கட்சியை மைத்திரியின் பிடியில் இருந்து விடுவிப்பது. அத்துடன் நல்லாட்சிக்குள் குழறுபடிகளை தோற்றுவிப்பது. 

கடந்த காலக் குற்றங்களில் இருந்து தனக்கும் தனது குடும்பத்திருக்கும் மைத்திரியிடமிருந்து சலுகை-பாதுகாப்புக் கிடையாது என்பதால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட ஒரு போராட்டத்தில் மஹிந்த விரும்பியோ விரும்பாமலே இறங்க வேண்டிய நிலை. 

அமைச்சரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் படியே விஷேட பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த காலங்களில் நிதி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுப்பது நோக்கமாகும். அண்மையில் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பொன்றில் சில சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் குறிப்பாக நிமல்சிரிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க போன்றவர்கள் இந்த பொலிஸ் பிரிவு விடயத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன் இதனைக் கலைத்துவிடுவது பற்றியும் ஜனாதிபதியிடத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

இவர்களின் இந்த நடவடிக்கை ஜனாதிபதிக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அவர்களைப் பார்த்து இப்படியெல்லாம் பேசாதீர்கள் இது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் அத்துடன் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் பிள்ளைகள் புரிந்திருக்கின்ற குற்றங்கள் மிகவும் மோசமானவை இவர்களுக்குப் பிணை கொடுப்பது கூட சிரமமாக இருக்கும் என்று எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரி கூற, பிரதமர் ரணில் 50 பேருக்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே பொலிசார் யோசித்தவைக் கைது செய்திருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டியபோது ராஜபக்ஷவுக்காக பேசியவர்கள் மௌனித்துப்போனார்கள். சுதந்திரக் கட்சியில் மைத்திரி தனது பிடியை செல்வாக்கை இழக்கின்ற ஒரு நிலை வந்தால் இவர்கள் எல்லோரும் எப்படித் தீர்மானங்களை எடுப்பார்கள் என்று கூற முடியாது. 

ஆளும் தரப்பில் உள்ள பல முக்கியஸ்தர்கள் பணத்துக்காக மஹிந்த விசுவாசிகளாகச் செயலாற்றியது கடந்த காலங்களில் ஞாபகமிருக்கலாம். இப்படி இரட்டை வேடம் போடும் ஐ.தே.க., சு.கட்சியைச் சேர்ந்த  அரசியல்வாதிகள் பலர் இன்னும் இந்த நல்லாட்சியில் இருக்கின்றார்கள்.; மைத்தரி-மஹிந்த அரசியல் பலப்பரீட்சையில் மாற்றம் நிகழ்கின்ற போது இவர்கள் மைத்திரியின் காலை வாரி விட நிறையவே வாய்ப்புக்கள் இருந்து வருகின்றது.

எமது அவதானங்களின் படி மைத்திரிக்கும்-மஹிந்தவுக்குமிடையே தீர்க்கமான பலப்பரீட்சை துவங்கி இருக்கின்றது. இந்த நேரத்தில் நடக்கின்ற சில காரியங்கள் மைத்திரிக்கு மேலும் நெருக்கடியைத் தோற்றுவித்து வருகின்றது. அவ்வாறான சில சம்பவங்களை இப்;போது பார்ப்போம்.

தனது காணியை அரச தேவைக்காக மெகா பொலிஸ் திட்டத்திற்காக அரசு கையேற்க  குழப்பமடைந்த அமைச்சர் தயா கமகே நேற்று வந்தவன் ஐக்கிய தேசியக் கட்சிக்காரனான என்மீது கைவைத்து விட்டான் இப்படியெல்லாம் இவர்களை அரசியல் பண்ண இடம் கொடுக்க முடியாது என்று ஒரு வம்பை இழுத்து மெகா அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களைச் சீண்டி இருக்கின்றார். அத்துடன் சம்பிக்க இந்த அரசாங்கத்தில் உள்ள ஒரு கோட்டாபே ராஜபக்ஷ என்று அவர் இந்த விவகாரத்தில் கோட்டா பெயரை இழுக்க, கோட்டாவும் எங்களது அரசாங்கத்தில் அதிகமான அபிவிருத்தி வேலைகளை கொந்தரத்து எடுத்துப் பிழைத்தவர்தான் இன்று என்னைத் திட்ட வந்திருக்கின்றார் என்று  கமகேயின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றார்.

இந்த அரசாங்கத்iதாப் பதவியில் கொண்டு வந்து நிறுத்திய முக்கிய சாகாக்களாக நின்று வேலை பார்த்த ஜாதிக ஹெல உறுமய சம்பிக்க ரணவக்கவும் - அதுருலியே ரத்தன தேரரும் இன்று ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டு மைத்திரிக்குத் தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நடக்கின்ற சில விவகாரங்களைப் பார்க்கின்ற போது ஜனாதிபதி மைத்திரி  மற்றும் பிரதமர் ரணில் சில தீர்மானங்களில் சஞ்சலப்படுவதையும்  திக்கு முக்காடிப்போய் நிற்பதையும் காண முடிகின்றது. எமக்கு உறுதியாக் கிடைத்த ஒரு தகவலை இதற்கு ஒரு உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும். நாம் முன்பு சொன்ன யோசித்த கைது விவகாரம் பேசப்பட்ட போது எமக்கு பொலிஸ் நடவடிக்கைகளிலோ சட்டத்திலே தலையிட முடியாது என்றாலும் நானும் ஜனாதிபதியும் யோசித்த முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதால் விளக்க மறியலில் அவருக்கு சில வசதிகளை வழங்க ஏற்பாடு பண்ணி இருக்கின்றோம் என்று பிரதமர் அங்கு பேசி இருக்கின்றார். 

அத்துடன் சிரந்தி ஒரு பெண் என்பதாலும் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி என்பதாலும்  அவரைக் கைது செய்வதைக் கொள்கை ரீதியில் நாம் தவிர்த்திருக்கின்றோம் என்று நியாயம் கூறுகின்றார் நமது நல்லாட்சித் தலைவர்கள். எனவே இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமனில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த விவகாரங்களை ஊடகங்கள் அடுத்து வரும் நாட்களில் பேசக்கூடும். 

சுதந்திரக் கட்சியின் ஆதிக்கத்தை தொடர்ந்தும் மைத்திரி தக்கவைத்துக் கொள்வதில் நிறையவே சவால்கள் தற்போது தோன்றி வருகின்றது. மறுபுறத்தில் தன்னைப் பதவிக்குக் கொண்டு வந்த ஐ.தே.க. ஜேவிபி, இதர அரசியல் அமைப்புக்கள் மற்றும் வெகுஜன இயக்கங்களுக்குத் தேர்தல் காலத்தில் கொடுத்த உறுதி மொழி என்பவற்றிற்கிடையில் தற்போது மைத்திரி சிக்கித் தவிக்கின்றார். அவரது இக்கட்டான நிலயையும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதே. இதற்கிடையில் ஆளும் தரப்பில் உள்ள ஐ.தே.க. மற்றும் சுதந்திக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் ஆரம்பம் முதல் இந்த நேரம்வரை ராஜபக்ஷக்களுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது சுதந்திரக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதில் நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முன்னாள் ஜனாதிபதிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அதில் மஹிந்த தனது பலத்தை காட்டக்கூடும். இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மைத்திரியின் எதிர்கால அரசியல் பாதையில் திருப்பங்களை கொண்டு வருவதற்கு நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது. பிந்திய தகவல்களின்படி 2016ல் உள்ளுராட்சி மன்றத் தேர்லுக்கு தற்போது ஆப்பு வைக்கப்பட்டிருக்கின்றது என்று ஒரு செய்தி! 

No comments

Powered by Blogger.