Header Ads



மார்ச் முதலாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில், ஆஜராகுமாறு ஞானசாரருக்கு உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு பத்தரமுல்ல – தலாஹேன பிரதேச மத வழிபாட்டு மத்திய நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மீதான வழக்கு விசாரணைக்காகவே இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதியரசர்களான மாலனீ குணரத்ன மற்றும் தேவிகா தென்னகோன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னதாக இடம்பெற்று வழக்கில் ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் நிரபராதியாக கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும் சட்டமா அதிபர் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சம்பவத்துடன் தொடர்புடைய 12 பிரதிவாதிகள் நீதிமன்றில் ஆஜரானபோதும் ஞானசார தேரர் ஆஜராகவில்லை.

பிறிதொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலே அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மனு மீதான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது ஞானசார தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.