Header Ads



‘நீண்டநேர வெந்நீர் குளியல், ஆண்களை மலடாக்கும்’ - அதிர்ச்சித் தகவல்

ஆறு, ஏரி, குளங்களில் களைப்பு தீர, அனுபவித்து மணிக்கணக்கில் குளித்த காலம் மலையேறிவிட்டது. வாழ்வியல் மாற்றங்களால் ‘நிதானமான காலை நேரக் குளியல்’ என்பது சாத்தியமற்றதாகி விட்டது. இயந்திர ஷவருக்கு அடியில் அவசரக் குளியல் போட்டுவிட்டுச் செல்லும் நமக்கு, ‘காலையில் மட்டுமல்ல... மாலையிலும் மிதமான வெந்நீர் குளியல் அவசியம்’ என்கிறார் உடல் இயங்கியல் துறை பொதுநல மருத்துவர்  அர்ச்சனா பி.குமார். ‘நீண்ட நேர வெந்நீர் குளியல் ஆண்களை மலடாக்கும்’ என்கிற அதிர்ச்சித் தகவலோடு வெந்நீர் குளியல் குறித்து நம்மிடையே பேசுகிறார்.

“அனைவருக்குமே மழைக்காலம், குளிர்காலத்தோடு, ஆண்டின் 365 நாட்களிலுமே சுடுநீர் குளியல் அவசியம். தொடர் சுடுநீர் குளியலை  அவரவர் உடலின் சுடுதன்மையைத் தாங்கும் ஆற்றலைப் பொறுத்து தொடரலாம். குழந்தை பிறந்ததிலிருந்து தொடர்ந்து 100 நாட்கள் வரை வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி கூடும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைப்பதால் கிருமிகள் அழிந்துவிடும். இதனால் நோய்த்தொற்று ஏற்படாது. குழந்தைகள் ஆரோக்கியத்துடன்  வளர்வார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உடலில் கை, கால்களில்  புழுதிக்காற்று மூலமாக கிருமிகள் பரவும். அதனால், அவர்களை காலை, மாலை என இரு வேளையும் வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது. 

வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபடும். குளிர்காலங்களில் வேலை செய்வதற்கான முனைப்பு குறைந்து ஒருவித சோம்பல் ஏற்படுவது இயல்பு. வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் இரண்டு வேளை வெந்நீரில் குளிப்பது நல்லது. சோப்பின் நறுமணம், நீரின் சூடு களைப்பை போக்கி, உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். 

சுடுநீரில் குளிப்பதால் நன்மைகள் இருந்தாலும் கெடுதல்களும் உண்டு. பொதுவாக அளவுக்கு அதிகமாக தண்ணீரை கொதிக்க வைத்து குளிப்பதால், இயற்கையாக சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, அவை வறண்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வயதான தோற்றம் வரலாம். அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படும். ஆண்கள் பாத்டப்பில் நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பதால் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளித்து விட வேண்டும். பெண்கள் சுடுதண்ணீரில் குளிப்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை. 

நோயாளி எனில், அனைத்து தேவைகளுக்குமே சுடுதண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சிலர் நோயாளிகளுக்கு வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள். அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும். அவர்களும் வெந்நீரில் குளிப்பது நல்லது. இதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சோரியாசிஸ் போன்ற சரும நோயாளிகளுக்கு இயற்கையாகவே சருமத்தில் எரிச்சல் மற்றும் வறட்சி காணப்படும். இவர்கள் வெந்நீரில் குளிப்பதால் நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும். பொடுகு பிரச்னை உள்ளவர்கள் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

சர்க்கரை நோய் முற்றிய நிலையில், சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருப்பதால் இவர்களுக்கு கொதிக்கும் நீராக இருந்தாலும், சூடு குறைவாகவே தெரியும். உடன் இருப்பவர்களின் உதவியுடன் தண்ணீரின் வெப்ப அளவை தெரிந்து கொண்டு குளிப்பது நல்லது. இல்லையெனில், அதிக சூடான நீரை மேலே ஊற்றிக் கொள்ளும்போது உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும். 

தொடர்ந்து சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் சரும வறட்சி, முடியில் ஈரப்பதம் குறைதல், கால்கள் மற்றும் உதடுகள் வெடிப்பதைத் தவிர்க்க வெண்ணெய், தேங்காய் எண்ணெய், கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மிதமான வெந்நீரில் குளிப்பது சருமம் மற்றும் நரம்பைப் பாதிக்காது. அதனால், ஆண்டு முழுவதுமே காலை, மாலை இருவேளைகளிலும் மிதமான வெந்நீரில் குளிப்பது நல்லது.’’

No comments

Powered by Blogger.