பிக்குமார் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் - பெங்கமுவே நாலக தேரர்
பிக்குமார் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து கவலையடைவதாகவும் மேற்குலக நாடுகளை மகிழ்விக்கவே இது மேற்கொள்ளப்படுவதாகவும் படையினரை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -21- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிக்குமாருக்கு நடக்கும் இந்த கொடுமைகள் பற்றி மாநாயக்க தேரர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும். நீதிமன்றமும் தற்போது அரசாங்கத்தின் நிலைமைக்கு மாறியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஹூசைன் படையினருக்கு பிரச்சினை இல்லை என்று கூறிய போதிலும் ரணில் - சிறிசேன கூட்டு படையினருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க தேவையான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் படையினரை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் செயலாளருமான ஜயந்த சமரவீர, பிரகீத் எக்நேலியகொட என்பவர் சிங்கள புலி எனக் கூறியுள்ளார்.
எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் கடந்த 6 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிணை பெற்றுக்கொள்ள முடியாதபடிக்கு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் போது, மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.
தன்னை கொலை செய்ய வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் மன்னிப்பு வழங்கினார்.
ஜனாதிபதி அமைச்சராக இருக்கும் போது அவரை கொலை செய்வதற்காக மன்னம்பிட்டி பாலத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டை லெப்டினட் கேர்ணல் ஷம்தி கருணாரத்னவே கண்டுபிடித்தார்.
ஷம்மி கருணாரத்னவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதே அரசாங்கத்தின் புதிய திட்டம் எனவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment