கால்டன் என்பது மஹிந்த குடும்பத்தின், அடையாளக் குறியீடாகும் - அனுரகுமார
கால்டன் அலைவரிசைக்கு மக்களின் பணமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்தபோது கால்டன் அலைவரிசை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது,
கால்டன் பாலர் பாடசாலை ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு சொந்தமானது.
தங்காலையிலுள்ள கால்டன் இல்லம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு சொந்தமானது.
கால்டன் ரக்பி போட்டி நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது.
கால்டன் தொலைக்காட்சி யாருடையது?
எனவே, நாம் இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றா கூறுகின்றீர்கள்?
கால்டன் என்பது மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் அடையாளக் குறியீடாகும். இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்காக 2340 இலட்சம் ரூபா ஆரம்ப செலவாக செலவிடப்பட்டிருக்கின்றது. அது தொடர்பிலேயே நாங்கள் வினவுகின்றோம். அந்த 2340 இலட்சம் ரூபா எவ்வாறு திரட்டப்பட்டது? அது அருங்காட்சியகத்தில் இருந்த பணம் அல்லது திறைசேரிக்கு வழங்க வேண்டிய பணம். கால்டன் தொலைக்காட்சி அலைவரிசைக்காக அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 25 ரூபாவுக்கு அதிகமான அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்தக் குற்றத்திற்காக பிணை வழங்க முடியாது. இதுவொரு தெளிவான குற்றச்சாட்டு. பொது மக்களின் சொத்துக்கள் மோசமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதெனில், அவ்வாறு பெற்றுக்கொண்ட சொத்துக்களை மக்களுக்கு மீள வழங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் முன்நின்று செயற்படும் என்பதை நாம் உறுதியாகக் கூறுகின்றோம்.
Post a Comment