"உடும்பின் பொந்துக்குள், நாம் நுழைகிற போது.."
-முஹம்மது ராஜி
செங்கடல் பிளந்து அவர்கள் காப்பற்றப்பட்டு நிறைய நேரம் சென்றிருக்காது. தம் கண்ணுக்கு முன்னால் இறைவனின் அதிசயங்களை கண்டு வந்த பனூ இஸ்ராயீல் பெரும் கூட்டம் அது. வரும் வழியில் விக்கிரகங்களை ஆராதனை செய்யும், வணங்கும், வழிபடும் கூட்டம் ஒன்றைக்கண் முன்னால் காண்கிறார்கள். அவர்களுக்கு அருகே சென்று என்ன அவர்கள் செய்கிறார்கள் என விசாரித்த பின்னர் திரும்பி வருகிறார்கள் .
"மூஸாவே அவர்கள் வணங்குவது போல எங்களுக்கும் கடவுளை உருவாக்கும்.. அல்லது கொண்டு வாரும்" அந்த பனூ இஸ்ராயீல் கூட்டத்தினர் மூஸா நபி (அலை ) அவர்களிடம் கேட்கிறார்கள் .
அதிர்ச்சி அடைகிறார் மூஸா. ஆத்திரம் கொண்ட அவரின் முகம் நிறம் மாறுகிறது "நீங்கள் அறிவில்லாத மக்களாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். இதுபோன்ற மக்கள் செய்வது தவறானது . நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது; இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே. அல்லாஹ்வை விட வேறு கடவுளையா கேட்கிறீர்கள் ? அல்லாஹ் உங்களை அகிலத்தார்களை விட மேலாக தெரிவு செய்துள்ளான் "
அது அல் குர் ஆணில் அல்லாஹ் நமக்கு கற்றுத்தரும் படிப்பினை கொண்ட ஒரு உண்மை க் கதை .
பலம், செல்வாக்கு கூடிய சமூகத்தை பலம், செல்வாக்கு குறைந்த சமுகம் பின்பற்றும் என இந்த சம்பவத்துக்கு விரிவுரை வழங்கிய இப்ன் கதீர் (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள் .
அவர்களது கருத்தில்தான் எத்தனை உண்மைகள் உள்ளன .. .
அடக்குமுறைக்கு உள்ளான பலம் குறைந்த ,செல்வாக்கு குறைந்த சமுகம் தம்மை கீழானவர்கள் என்றும் தாம் பின்பற்றும் பலமான சமுகத்தை மேலானவர்கள் என்றும் மதிப்பீடு செய்கிறது .
இதை சிலுவை யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று உறுதிப்படுத்துகிறது .
"அன்புள்ள பாப்பரசருக்கு ..
முஸ்லீம் படைகளை முறியடிப்பதற்காக அனுப்பப்பட்ட நம் முண்ணனி கிருஷ்தவ படை வீரர்கள் அரபுகள் போல உடையணிகிறார்கள், அவர்களை போல அரபு மொழி படித்து பேச முனைகிறார்கள். அரபுக்களை விட அழகாக கவிதை எழுதுகிறார்கள். இது கடும் கவலை அளிக்கிறது "
இது அப்போதைய பாப்பரசருக்கு இத்தாலியில் உள்ள கிருஷ்தவ பாதிரியார் ஒருவர் எழுதிய கடிதம். அந்த நேரத்தில் இஸ்லாம் பலமானதாக இருந்தது . பிறர் அவர்களை பின்பற்றும் நிலைக்கு காணப்பட்டது .
ஒரு சமுகம் தன்னை பிற சமுகத்தை விட கீழானதாக எண்ணும் போது அதன் தனித்துவம் இழக்கின்றது.
"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்........."
என்று புனித அல் குர் ஆணில் (அல்குர்ஆன் : 3:110) அல்லாஹ் தெளிவாக கூறியுள்ள போதும் நாம் ஏனைய சமூகத்தவர்களின் பழக்க வழக்கங்களை பண்பாடுகளை பின்பற்றிக்கொண்டு இருக்கிறோம் .
'ஹப்பி பேத் டே 'என்று படித்து, பிறந்த தினம் கொண்டாடுகிறோம். புது ஆடைகள் அணிந்து ,வரவேற்று வாழ்த்துக்கள் சொல்லி புதுவருடம் கொண்டாடுகிறோம். ஏன்.. நம்மில் சிலர் நத்தார் மரங்களை சோடித்து கிறிஸ்மஸ் கூட கொண்டாடுகிறோம். ஏனையோர்களை போல ஆடை அணிய முற்படுகிறோம் . ஏனையவர்களை போல அதே பாணியில் மொழியை பேச முற்படுகிறோம் .அரபை விடுத்து 'ஆக்சனோடு ' ஆங்கிலம் கதைப்பது நாகரிகம் என்று கருதுகிறோம் . மணப்பெண்ணுக்கும் வெள்ளை வெளீரென ஆடை அணிவித்து மண மகனுக்கு 'கோர்ட்டு சூட்டு ' அணிவித்தது கிருஸ்தவ கலாசாரத்தை பின்பற்றுகிறோம் . பிறரின் கலாசாரத்தை பின்பற்றி திருமணத்தில் மோதிரம் மாற்றுகிறோம் ,திருமணத்தை கண்காட்சி ஆக்கி விடுகிறோம்.
அத்துடன் முடிந்து போய் விடவில்லை ..
நமக்கு சொந்தமான விரல்களை வைத்திக்கொண்டு அடுத்தவன் சாப்பிட்ட கரண்டிகளை வைத்துக்கொண்டு நாகரிகம் என்ற பேரில் நக்கிக்கொண்டு கண்மூடித்தனமாக பிற மத கலாசாரங்களை பின் பற்றிக்கொண்டு இருக்கிறோம் . உண்ட பின் விரல்களை சூப்பும் நபிகளாரின் சுன்னாக்களை நாகரீகம் அற்றதாக எடை போட்டுக்கொண்டு இருக்கிறோம் .
கண்மணி நாயகம் ( ஸல் )சொன்ன ஹதீஸ் இது :-
உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456
நமக்கு , நம் உம்மாவுக்கு அல்லாஹு த ஆலா அளித்துள்ள விசேட அந்தஸ்தை மறந்து எப்படி பிற மதத்தவரை நாம் கணமூடித்தனமாக பின்பற்றுகிறோம் ? பனூ இஸ்ராயில்களின் தம்மை தாமே கீழாக எண்ணியது போன்ற நிலைக்கு நாமும் தள்ளப்பட்டு உள்ளோமா... ?
Post a Comment