"முஸ்லிம் அரசியல் தலைமைகள், ஒன்றுபட்டுச் செயற்படுவதன் அவசியம்"
(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன் கருதி முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் அவசியம் என்றுமில்லாதளவிற்கு இப்போது வலியுறுத்தப்படுகின்றது. நாட்டில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் உள்ளடக்கப்படவேண்டுமாயின் முஸ்லிம் குரல்கள் பிரிந்து ஒலிப்பதனால் விமோசனம் கிடைக்கப் போவதில்லை.
அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் பிரிந்து செயற்படுகின்ற போதும் பொதுவிடயங்களில் இணங்கிச் செயற்படவேண்டும் என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த போதும் அது சாத்தியமாகவில்லை.
ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் தன் கட்சிக்கு முக்கியத்துவமளிக்க முற்படுவதினால் இவ்வாறு ஒன்றுபட்டுச் செயற்படுவது இலகுவான காரியமல்ல.
இன்றுள்ள சூழ்நிலையில் எந்த விலை கொடுத்தேனும் அது செய்யப்பட வேண்டும். முஸ்லிம் சமுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவற்றுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பும், கடமையுமுள்ளது.
நல்லாட்சி அரசினை உருவாக்குவதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் பங்களிப்புச் செதனர். முஸ்லிம்களில் 95 சதவீதத்துக்கு மேற்பட்டோர் புதிய அரசினை ஆட்சிபீடமேற்றுவதற்கு பங்களிப்புச் செதனர். அப்படியிருந்தும் நல்லாட்சி அரசில் முஸ்லிம்களது தேவைகள் குறித்து அக்கறை காட்டப்படுவதில்லை என்ற கவலை முஸ்லிம் சமூகத்துக்குள்ளே காணப்படுகின்றது.
இன்று யார் பேசினாலும் அதனையே சுட்டிக்காட்டுகிறார்கள். எங்களை கறிவேப்பிலை போன்று பயன்படுத்துகிறார்கள் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சி இன்று ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. மலையக மக்களிடையே இன்று இ.தொ.கா. மற்றது மலையக முற்போக்கு அணி என இரு அணிகளே உள்ளன. மலையக மக்களது விடயங்களை வென்றெடுப்பதற்கு இந்த ஒற்றுமை சக்தியாகவுள்ளது.
இந்த நிலைமையை முஸ்லிம் சமூகத்தில் காண முடியாதுள்ளது. பிரிந்து செயற்படுவதன் காரணாக முஸ்லிம் சமூகத்தின் பெறுமானத்தை அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ உணர முடியாதுள்ளது.
இதற்குச் சிறந்த உதாரணம் தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செத் ஹுஸைனின் இலங்கை விஜயம். இவரது விஜயத்தின்போது இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் எதனையும் சந்திக்கவில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு இடம்பெற்ற பிரதான மனித உரிமை மீறலான வடபகுதி முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து அம்மக்கள் ஆர்ப்பாட்டம் செது தம் பிரச்சினையை ஐ.நா. ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் பலமான கூட்டாக இருந்திருந்தால் ஐ.நா. ஆணையாளர் போன்ற வெளிநாட்டுப் பிரமுகர்கள் இவர்களைக் கேட்டு சந்திப்புக்களை நடாத்தியிருப்பார்கள். இனியாவது நடந்த தவறுகளிலிருந்து பாடம் படித்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றுபடுவது அவசியமாகும். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி கலாசாரத் தேவைகளை வென்றெடுப்பதற்கு ஒருமித்த செயற்பாடு மிக அவசியமாகவுள்ளது.
இதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை பலப்படுத்துவது சகலரதும் பொறுப்பாகும். குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பு உள்ளது என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
தயவு செய்து இந்த கூட்டமைப்பை பற்றி எழுதும் ஆர்வலர்கள் அதன் கட்டமைப்பும், தொழிற்பாடும் எப்படி இருக்கும் என்பதையும் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்.
ReplyDelete"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்பதில் எமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ஸ்ரீ லங்காவில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் ( ஹகீம், ரிசாத், அதாவுல்லா, பேரியல், பெளசி,...etc.) என்று கூறும் இவர்களின் ராஜபக்ச அன் கோ ஆட்சியில் எப்படியான அரசியல் முன்னெடுப்புக்கள் இருந்தன என்பதை இந்த உலகமே அறியும். அந்த நேரத்தில் பதவிகளையும், வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த இவர்கள் எல்லாம் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் கரும்புள்ளிகளாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட இவர்களை ஒன்று சேர்த்து ( ஒருத்தரிடமும் உருப்படியான அரசியல் சித்தாந்தமும் இல்லை. அது தெரியுமோ என்பது எங்களுக்கு புரியாமல் உள்ளது. ) எப்படி இந்த கூட்டமைப்பு முன்னகர்ந்து செல்லும் என்பது, கொஞ்சம் கூட நடைமுறை சாத்தியமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.
"கூட்டாக இருந்திருந்தால் இவர்களை கேட்டு சந்திப்புக்களை நடத்தி இருப்பார்கள்" என்ற அனுமானம் எல்லாம் கொஞ்சம் அதிகப்படியானது ( எந்த ஒரு விடயத்துக்கும் ஒரு முயற்சியும் அந்த விடயம் சம்பந்தமான அறிவும் வேண்டும்) என்றே நாம் கருதுகிறோம்.