மைத்திரி - ரணில் சந்திப்பு, மஹிந்த அணி தலைவர்களுக்கு அங்கீகாரம், எதிர்ப்பையும் கைவிட்டனர்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி (மஹிந்த அணி) யிலுள்ள கட்சித் தலைவர்களை பாராளுமன்றத்திலும் கட்சித் தலைவர்களாக அங்கீகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கமைய 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கேள்வி எழுப்பவும், கட்சித் தலைவர் கூட்டம் அடங்கலான முக்கிய குழுக் கூட்டங்களில் பங்கெடுக்கவும் இவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் தங்களது எதிர்ப்பு போராட்டத்தை கைவிட முடிவு செய்திருப்பதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்க் கட்சியில் உள்ள ஐ.ம.சு.மு உறுப்பினர்களை சுயாதீனக் குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற அவசர சந்திப்பிலேயே இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் மாற்று எதிர்க்கட்சியை சுயாதீனக் குழுவாக அங்கீகரிக்கும் கோரிக்கைக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
ஏனைய அனைத்துக் கோரிக்கைகளுக்கும் பிரதமர் இணக்கம் தெரிவித்திருப்பதால் தங்களது தொடர்போராட்டத்தை கைவிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இணக்கப்பாட்டின் பிரகாரம் ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்த்தன (மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர்), விமல் வீரவன்ச (தேசிய சுதந்திர முன்னணி தலைவர்), வாசுதேவ நாணயக்கார (ஜனநாயக இடதுசாரி தலைவர்), உதய கம்மன்பில (பிவித்துரு ஹெல உறுமய தலைவர்), சந்திரசிறி கஜதீர (சமசமாஜக் கட்சி) ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் அங்கீகாரம் வழங்கப்படவிருப்பதாகத் தெ அறியவருகிறது.
ஐ.ம.சு.முவை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை சுயாதீனக் குழுவாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்க வேண்டும் என இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் குரல்கொடுத்து வந்தனர். அது மாத்திரமன்றி பாராளுமன்ற அமர்வுகளுக்கும் இடையூறு விளைவித்து வந்தனர். கடந்த வாரம் சபை நடுவில் ஒன்றுதிரண்டு சபை நடவடிக்கைகளை குழப்பியிருந்தனர்.
இவர்களின் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் தீர்ப்பு வழங்கியிருந்த போதும் அதனை ஏற்காமல் மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதியுடன் இதுவிடயம் பற்றி பேச்சுநடத்தி இந்த வாரம் தீர்வொன்றை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். இதன்படி நேற்றுமுன்தினம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இது தவிர பிரதமருக்கும் ஐ.ம.சு.மு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்ததாக தினேஷ் குணவர்த்தன எம்பி தெரிவித்தார். ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அரச நிறுவனங்கள் தொடர்பான பொதுக் குழு (கோப்), அரச கணக்குக் குழு என்பவற்றுக்கான உறுப்பினர் தொகையை தலா ஐந்தினால் அதிகரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் தலா இருவரை மாற்று அணி சார்பில் நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தவிர பாராளுமன்ற விவாதங்களின் போது நியாயமான நேரம் ஒதுக்குவதற்கும், ஒத்திவைப்பு பிரேரணைகளை முன்வைக்க அவகாசம் வழங்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு சார்பில் 96 உறுப்பினர்கள் தெரிவானதோடு ஐ.தே.கவுடன் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதையடுத்து 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தரப்பில் அமர்ந்து தனியாக செயற்பட ஆரம்பித்தனர். இதில் சுமார் 12 பேரே சு.க தவிர்ந்த ஐ.ம.சு.மு அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சி உறுப்பினர்களாகும். இருந்த போதும் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு உறுப்பினரும் கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்படவில்லையென அறியவருகிறது.
Post a Comment