நிதி மோசடி விசாரணை பிரிவை, கலைக்கப்போவதில்லை - மைத்திரி திட்டவட்டம்
யோசித்த ராஜபக்சவின் கைது நடவடிக்கையை தொடர்ந்தும் நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவை கலைத்துவிட வேண்டும் என்ற கோசம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனினும் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடந்த வாரம், குறித்த பொலிஸ் பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தமை தொடர்பில் அமைச்சர் சாகல ரட்நாயக்க, தமது விமர்சனத்தை வெளியிட்டார்.
அமைச்சரவை பொறுப்புக்கூறலுக்கு எதிரான வகையில் நிமால் சிறிபால டி சில்வாவின் செயல் அமைந்திருந்தாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் சாகல ரட்நாயக்கவின் கருத்தை ஆமோதித்து பேசினார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
யோசித்தவின் கைதை தொடர்ந்து கருத்துரைத்திருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நிதிமோசடி விசாரணைப்பிரிவுக்கு எதிராக சவால் விடுக்க சட்டமாஅதிபர் திணைக்களம் தயாராகவிருப்பதாக குறிப்பிட்டிருந்தமையை சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபர் திணைக்களமே யோசித்தவை, கைதுசெய்ய பரிந்துரை செய்திருந்தமையை அமைச்சர் சுசில் அறிந்திருக்கவில்லை என்று அவர் வேடிக்கையாக கூறினார்.
இந்தநிலையில் குறித்த விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளை விமர்சிப்போர் தமது அமைச்சு பதவிகளை விட்டு விலகலாம் என்றும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையி;ல் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையின் தீர்மான அடிப்படையிலேயே நிதி மோசடி விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே அதனை கலைக்க முடியாது என்று குறிப்பிட்டார். இந்த பிரிவினால் பல விடயங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment