Header Ads



திருட்டு தேங்காய் அடிக்க, இந்துக் கடவுள் வேண்டுமென்பது மஹிந்தவின் கோமாளி கொள்கை - மனோ

தமிழ் மொழி வேண்டாம் ஆனால் திருட்டு தேங்காய் அடிக்க தமிழ் இந்துக் கடவுள்களான விஷ்ணுவும், காளியம்மனும் வேண்டும் என்பதுதான் மஹிந்த ராஜபக்ஷவின் கோமாளி கொள்கை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசகரும மொழி ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று காலை நடத்தப்பட்ட அரசகரும மொழிக் கொள்கை தொடர்பான அறிவுறுத்தல் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

தேசிய மொழி பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது கையில் உள்ள குருவியாகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது மரத்தில் உள்ள குருவியாகும். எனது கையில் மூன்று குருவிகள் உள்ளன. ஒன்று, அரசகரும மொழி ஆணைக்குழு. இரண்டாவது அரச கரும மொழி திணைக்களம். மூன்றாவது தேசிய மொழி பயிலகம். இந்த மூன்றும் என் கையில் உள்ள மூன்று குருவிகள் ஆகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான குருவி மரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி இன்னமும் தெளிவில்லை.

ஆகவே முதலில் கையில் இருக்கும் குருவியை பயன்படுத்துவோம். அதை பயன்படுத்த முடியாவிட்டால் மரத்தில் இருப்பதாக சொல்லப்படும் குருவியை பற்றி பேசிப்பயனில்லை. அதாவது மொழியுரிமை கொள்கையை அமுல் செய்து தமிழ் மொழி பேசும் மகளின் இதயங்களை வெல்ல வேண்டும்.

ஐந்து மாதங்களுக்கு முன் எனக்கு இந்த அமைச்சு கிடைத்த போது இந்த அமைச்சு ஒரு செயற்படாத அமைச்சாகத்தான் கிடைத்தது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்த அமைச்சுக்கு ஒரு அமைச்சர் இருக்கவில்லை. நான் இங்கே வந்து இப்போது மெதுவாக இந்த அமைச்சை உருமாற்றிக்கொண்டு இருக்கின்றேன். இதன் பலாபலன்கள் விரைவில் தெரிய வரும்.

கடந்த காலங்களில் தமிழ் பிரதேச மேடைகளில் ஏறி சில வசனங்களை தமிழ் மொழியில் பேசியவர்கள் இன்று தமிழ் மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தை எதிர்க்கிறார்கள். அதாவது தமிழ் மொழி பாவனையை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் இந்து கடவுள்களான விஷ்ணுவையும், காளியம்மனையும் தேடிச்சென்று தேங்காய் அடிக்கிறார்கள். அதுவும் திருட்டு தேங்காய் உடைக்கிறார்கள். அதாவது தமிழ் மொழி வேண்டாம், தமிழ் கடவுளர்கள் வேண்டும் என்பது இவர்களது கொள்கை. என்ன, கோமாளி கொள்கையோ, அந்த விஷ்ணுவுக்கும், காளியம்மனுக்கும்தான் வெளிச்சம்.

இந்த நாட்டில் இப்போது, இந்த கொழும்பு பிரதேச செயலக பிரிவு உட்பட 41 உதவி பிரதேச செயலக பிரிவுகள், இருமொழி பிரதேச செயலக பிரிவுகளாக சட்டப்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை விரைவில் 72 ஆக உயர்த்த உள்ளேன். இந்த பிரிவுகளில் பணி புரிய எதிர்காலத்தில் நியமனம் பெரும் அனைத்து அரச பணியாளர்களும் இரு மொழி தகைமை இருந்தால் மட்டுமே வேலைக்கு அமர்தப்பட வேண்டும் என்ற ஒரு அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்பிக்க உள்ளேன்.

அதன்பிறகு ஒரு மொழி அறிவு கொண்டவர்களை விட, இருமொழி கற்றவர்களுக்கு இந்த பிரதேச செயலக பிரிவுகளில் அரசு பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும். எனது அமைச்சின் கீழ் வரும் தேசிய மொழி பயிலகத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் பற்றுவிக்கும் ஒரு தேசிய மொழி கல்லூரியாக தரமுயர்த்த முடிவு செய்துள்ளேன்.

இந்த பிரதேச செயலக பிரிவுகளில் நியமனம் பெரும் சிங்களம் பேசுவோர் தமிழையும், தமிழ் பேசுவோர் சிங்களத்தையும் கற்று இருக்க வேண்டும். இப்போது இருப்பது போல் அரச பணிக்கு வந்த பிறகு இரண்டாம் மொழி கற்கும் விளையாட்டு வேண்டாம். அரச பணி நியமனம் கிடைத்து விட்டால் அப்புறம் மொழியை படிப்பதில் இந்த அரச பணியாளர்கள் பெரும் அக்கறை காட்டுவதில்லை. இதை நான் இப்போது தேடியறிந்துள்ளேன்.

No comments

Powered by Blogger.