Header Ads



மகிந்தவுக்கு அடிபணிய மறுத்த சிராணி, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளும் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டன.

2010, 2011, 2012ஆம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்று சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இன்று இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அரசதரப்பு சட்டவாளர், டிலான் ரத்நாயக்க, இந்த வழக்குகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்குகளில் இருந்து சிராணி பண்டாரநாயக்க விடுவிக்கப்படுவதாகவும், வெளிநாடு செல்வதற்கு அவருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும், கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலபிட்டிய அறிவித்தார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்துக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதால், சிராணி பண்டாரநாயக்க பழிவாங்கப்பட்டு, பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் பிரதம நீதியரசராக ஒருநாள் பணியாற்றிய பின்னர், ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.