எனது அரசியல் பயணத்தில் இனவாதம் பேசியது கிடையாது, மதவாதமும் என்னிடமில்லை - ரெஜினோல்ட்
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று வடமாகாணத்துக்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் தமிழ்க் கட்சிகளுடனும் இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவதே தனது இலக்காகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதன்பின்னர், தான் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்தும், தனது வேலைத்திட்டங்கள் பற்றியும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அரசியல் பயணத்தின்போது ஒருபோதும் இனவாதம் பேசியது கிடையாது. மதவாதமும் என்னிடமில்லை. இவற்றுக்கு எதிராக குரல் எழுப்பியவன் நான். இதற்காக பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தேன். என்னை ஒடுக்குவதற்கு முற்பட்டனர். வீடு தாக்கப்பட்டது. இப்படி பல நெருக்கடிகளை சந்தித்திருந்தாலும் கொள்கை மாறாது செயற்பட்டேன். இதன் காரணமாகத்தான் இன்று எனக்கு முக்கிய பதவியொன்று ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. ஓர் ஆளுநர் என்ற அடிப்படையில் அதற்குரிய முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவேன்.
வடக்கு மக்களையும் இணைத்துக்கொண்டு நல்லிணக்கப் பயணத்தை சிறப்பாக ஆரம்பிப்பதே எனது நோக்கமாகும். அத்துடன் மேல்மாகாண முதலமைச்சராக பணியாற்றிய எனக்கு, மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணவேண்டும் என்பது தெரியும்.
எனவே, வடக்கு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்குப் பாடுபடுவேன். சுகல தமிழ்ப் பிரதிநிதிகளுடனும் இணைந்து செயற்படுவேன். எதற்காக இந்தப் பதவிக்கு ஜனாதிபதி என்னைத் தெரிவு செய்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
All the best minister
ReplyDelete