முஸ்லிம்கள் தொடர்பில் தப்பபிப்பிராயத்தை தோற்றுவிக்க, பகிரப்பட்டுவரும் வீடியோ உரை
இந்துக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் தப்பபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் நோக்கில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ உரை குறித்து கவனம் செலுத்துமாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஊடாக, இந்து சமய அலுவல்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமை நேற்று சந்தித்த வை.எம்.எம்.ஏ. அமைப்பின் பிரதிநிதிகள் இந்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மூலமாக இதனைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொது பல சேனா அமைப்புடன் இணைந்து செயற்படும் இந்து சம்மேளனம் எனும் அமைப்பின் தலைவர் அருண்காந்த் என்பவர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட உரையொன்றை அண்மையில் ஆற்றியுள்ளார்.
இந்த உரை வீடியோ வடிவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது.
இது இந்து மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தை தோற்றுவிப்பதுடன் இனங்களுக்கிடையே முறுகலைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளது.
எனவேதான் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வை.எம்.எம்.ஏ பிரதிநிதிகள் அமைச்சர் ஹலீமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் வை.எம்.எம்.ஏ, கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் ஆர்.ஆர்.ரி. அமைப்பு என்பன இந்து சமய மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை நேரில் சந்தித்து முறையிடவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹலீம் உறுதியளித்துள்ளார்.
விரைவில் முஸ்லிம் சமய விவகார அமைச்சருடன் இணைந்து இந்து சமய அலுவல்கள் அமைச்சரை சந்திக்கவுள்ள மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள் குறித்த வீடியோ உரை அடங்கிய இறுவட்டுடன் கூடிய எழுத்து மூல முறைப்பாட்டை கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment