Header Ads



சமூக ஆர்வலர் முஹ்சி அரசியல் யாப்பு சீர்திருத்தக் குழுவிடம், முன்வைத்துள்ள யோசனைகள்

 புத்தளத்தில் இன்று அரசியலமைப்புக்கு மக்களின் யோசனைகளை பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர் முஹ்சி அரசியல் யாப்பு சீர்திருத்தக் குழுவிடம், முன்வைத்துள்ள யோசனைகள்

கௌரவ தலைவர்
அரசியல் யாப்பு சீர்திருத்தக் குழு

அரசியல் யாப்பில் உள்வாங்குவதற்கான சில முன்மொழிவுகள்..!

1. தேசிய ரீதியாக பொதுவாக நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் அபிலாஷைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன. ஆகவே அம்மக்கள் திருப்திபடும் வகையில் உரிய ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக அவை பயனுறுதி மற்றும் வினைத்திறன் மிக்கதாக இருத்தல் வேண்டும்.

2. புத்தளம் மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வரும் பல்வேறு அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய மாகாண மாவட்ட மற்றும் பிரதேச ரீதியான அதிகாரம் பொருந்திய பொறிமுறையொன்று அவசியமாக தேவைப்படுகிறது. எனவே இது குறித்து அரசியல் யாப்பில் சில விஷேட சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் 20% உள்ளனர். யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இம்மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே புத்தளம் மாவட்டம் என்பது இன்னுமொரு மாவட்ட மக்களையும் சுமந்து கொண்டுள்ள மாவட்டமாகும் என்பது விசேடமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் இருந்த வளங்கள் சகல துறைகளிளும் பகிரப்பட்டுள்ளன என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதன் மூலம் பல்வேறு இழப்புக்கள் புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிகழ்ந்துள்ளன என்பது யதார்த்தமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் சகல இழப்பீடுகள் வழங்கப்படுதவதற்கான ஏற்பாடுகள் சட்ட யாப்பின் வடிவில் உறுதி செய்யப்பட வேண்டும்

4. புத்தளம் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் நிர்வாகம் மக்கள் பிரதிநிதித்துவம் அபிவிருத்தி காணிப் பகிர்வு கல்வி உயர் கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு பொருளாதார மொழி அமுலாக்கல் அடிப்படை வசதிகள் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. இழைக்கப்பட்டும் வருகின்றன. இது எதிர்காலத்திலும் தொடரும் என்ற நியாயமான அச்சம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. எனவே அவற்றை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் அதிகாரம் பொருந்திய சுயாதீனமான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அவசியமாகின்றன. அதற்காக கொழும்பை மாத்திரம் மையப்படுத்தி இந்த ஆணைக்குழு அமைக்கப்படாமல் அவை மாகாண மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் செயற்படுவதற்கான பொறிமுறையை அரசியல் அமைப்பில் முறையாக உள்வாங்க வேண்டும்.

5. சகல மாவட்டங்களிலும் உள்ள மூவின மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் விசாரித்து ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைத்து அமுல்படுத்துவதற்கான மாவட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படுவதை அரசியல் அமைப்பில் உள்வாங்க வேண்டும்.

6. மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக மக்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் இவற்றினது செயற்பாடுகள் வீரியமுள்ளதாவும் அதிகார பரவலாக்கம் கொண்டதாவும் அமைவதை உறுதி செய்ய வேண்டும்.

7. இனவாத மதவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைத்து இனங்கள் மதங்கள் மத்தியில் பிரிவினைகள் குரோதங்கள் என்பவற்றை ஏற்படுத்தி மக்களின் அமைதி சகவாழ்வு ஒற்றுமை தேசத்தின் முன்னேற்றம் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வு சுபீட்சம் என்பவற்றை சீர்குழைக்கும் அனைத்து தீவிரவாத பயங்கரவாத செயற்பாடுகளையும் முளையிலேய கிள்ளி எரியும் வகையில் சட்ட ஏற்பாடுகள் அரசியல் யாப்பில் உள்வாங்கப்படவேண்டும்.

No comments

Powered by Blogger.