வீணாய் போன 'செல்பி'
பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற மாணவி பலி, ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்றபோது தண்ணீர் அடித்து சென்று கல்லூரி மாணவர்கள் பலி, மும்பையில் ரயில் பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்று கை தூக்கும்போது உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு உயிரிழந்த ஒன்பதாவது வகுப்பு மாணவன் பலி என எத்தனையோ வகையான செல்ஃபி மரணங்களை கேள்விப்படுகிறோம்.
இந்த லிஸ்டில் சமீபத்திய சேர்க்கை, அர்ஜெண்டினாவின் கடற்கரை பகுதியில் கரைக்கு வந்த ‘லா பிளேட்டா’ என்ற அரிய வகை டால்பின் குட்டி ஒன்றை, கையில் பிடித்து செல்ஃபி எடுக்க சுற்றுலா பயணிகள் முயன்றபோது, வெப்பம் தாங்க முடியாமல் குட்டி டால்ஃபின் உயிரிழந்த பரிதாபம்.
அன்றாடம் சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும், சுற்றுலா தலங்களிலும் நடந்து சென்றுகொண்டிருப்பவர்கள், ‘மச்சான் ஒரு செல்ஃபி’ என சொல்லிக்கொண்டு வாகனங்கள், சாலைகளில் நடந்து வரும் மனிதர்கள் என எதையும் பொருட்படுத்தாமல் திடீரென திரும்பி நின்று, கைகளை உயர்த்தி செல்ஃபி எடுத்துக்கொள்வதை எத்தனை முறை பார்த்திருப்போம். இறந்து போன சித்தப்பாவோடு செல்ஃபி எடுத்து, அதை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, ‘சித்தப்பா டெட்,, பீலிங் சேட்’ என ஸ்டேட்டஸ் போடுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். கொடிய தொற்று நோய் போல டிஜிட்டல் உலக நெட்டிசன்களிடையே பரவி கிடக்கிறது செல்ஃபி மோகம். தாங்கள் எடுக்கும் செல்ஃபிக்களையும், க்ரூப்பிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதனால் கிடைக்கும் போலி போதைக்கு பலரும் அடிமையாக தொடங்கிவிட்டனர் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
போனில் ‘பில்ட்டர்’ போட்டு ‘க்ளோஸ் அப்’பில் ‘டக் லிப்ஸ்’, ‘கியூட் போஸ்’ செல்ஃபி எடுத்து, பருக்களை நீக்கி, பற்களை வெள்ளையாக்கி, கண்களை பெருசாக்கி போலியான அழகை உருவகித்து, செல்ஃபிக்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து மகிழ்வது பெண்கள் மட்டுமல்ல. தங்கள் சிக்ஸ் பேக் உடலை, பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு பைசெப்களோடு செல்பி எடுத்துப் போடும் ஆண்களும் இதில் அடக்கம். இவ்வாறு எடுக்கப்படும் எத்தனை நூறு செல்ஃபிக்களை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அன்றாடம் தரிசிக்கிறோம் நாம். சும்மா ஃபேஸ்புக்கில் ‘செல்ஃபி’ என்ற ஹாஷ் டாகை தட்டி பார்த்தால், குப்பை போல வந்து கொட்டுகிறது செல்ஃபிக்கள்.
மில்லினியல்ஸ் தலைமுறையினர்தான் கல்லூரிகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் செல்ஃபி எடுத்துகொண்டு ‘அட்டேன்ஷன் சீக்கர்ஸ்’ ஆக இருக்கிறார்கள் என நினைத்தால், வயதானவர்களும் சளைத்தவர்கள் அல்ல. ஒவ்வொரு நொடியும் நடப்பவற்றை சுட்டுத் தள்ளி செல்ஃபிக்களாக பதித்து இவர்களும் ‘லெட்ஸ் டேக் எ செல்ஃபி’ எனதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த அதீத செல்ஃபி மோகம் ஒன்று ஒருவகையான போலி மிதப்பை தந்து விடும், இல்லையேல் காழ்ப்புணர்ச்சி தந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மனோவியல் நிபுணர்கள்.
வெகுஜன மக்களிளிடம் மட்டுமில்லாமல் பிரபலங்களையும் இந்த செல்ஃபி மோகம் விட்டு வைக்கவில்லை. எல்லன் டீஜெனரசின் ஆஸ்கர் செல்ஃபி தொடங்கி தமிழ்நாட்டின் மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி வரை வைரலாக பரவும் செல்ஃபிக்கள்தான் எத்தனை எத்தனை? புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியின் 2013-ம் ஆண்டின் பிரபலமாக, அதிகம் பயன்படுத்திய வார்த்தையாக குறிப்பிடும் அளவுக்கு ‘செல்ஃபி’ பிரபலமாக உள்ளது என்பது சிந்தனைக்குரியது.
எது எப்படியோ.. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின் வரும் சந்ததியினர், 'இது வீணாய் போன செல்ஃபி ஜெனரேஷன்’ என்று சொல்லிவிடுவார்களோ என்றுதான் சற்று பயமாக இருக்கிறது.
-கோ. இராகவிஜயா
Post a Comment