Header Ads



ஞானசாரரின் கடிதம், தொடர்பில் விசாரணை

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஊடகவியலாளரின் மனைவியை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தேரரினால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடிதத்தில், தான் 14 நாட்கள் அல்லது 14 வருடங்கள் என்றாலும் சிறையில் இருப்பதற்கு தயார் என குறிப்பிட்டிருந்தார். பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் வன்முறையை கடைப்பிடித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த கடிதம் தேரரை விளக்க மறியலில் வைக்க முன்னர் எழுதப்பட்டது என தற்போது தெரிய வந்துள்ளது. அவர் விளக்கமிறயலில் வைக்கப்பட்டதன் பின்னர் இந்த கடிதம் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் சிறைச்சாலை சிறப்பு விசாரணைகள் பிரிவு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அந்த கடிதம் தன்னால் எழுதப்பட்டதாகவும், அதனை விளக்கமறியலுக்கு வரும் முதல் தான் எழுதியதாக சிறைச்சாலை சிறப்பு விசாரணைகள் பிரிவிடம் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தான் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக அறிந்து கொண்டமையால், தான் இந்த கடிதத்தை எழுத திட்டமிட்டதாக ஞானசார தேரர் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.

பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி வெளியாகிய இந்த கடிதம் தொடர்பில் சிறைச்சாலை சிறப்பு விசாரணை பிரிவு, ஞானசார தேரரிடம் வினவிய போது தனது ஆதரவாளர்கள் இதனை ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமறியலில் இருக்கும் போது அவசியமின்றி இவ்வாறு ஒரு கடிதம் எழுதப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

ஞானசார தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தண்டனை காலம் வரையில், புதிதாக யாரும் அவரை சந்திப்பதனை தடை செய்ய வாய்ப்புள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.