"கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு, முன்னவதானம் தேவை"
-மர்லின் மரிக்கார்-
அறிவியலின் அபரிமித முன்னேற்றத்தின் விளைவாக உலகமே பூகோளக் கிராமமாக மாறியுள்ளது. அதிலும் தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியானது உலகத்தையே கையடக்கத் தொலைபேசிக்குள் அடக்கி இருக்கின்றது.
இதன் பயனாக ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருப்பவரோடும் நினைத்த உடன் தொடர்பு கொள்ள கூடிய வசதியும், பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடக்கின்ற நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறான வசதி வாய்ப்பை முன்னொரு போதுமே மனித சமூகம் பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் மனிதனின் முயற்சிகளின் பயனாக உலகம் அடைந்துள்ள முன்னேற்றங்களை மெச்சிப் பாராட்டத் தான் வேண்டும்
அந்தவகையில் தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் விளைவாக மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடலும் நெருக்கமும் அதிகரித்துள்ளது .இது பெரிதும் வரவேற்கக் கூடிய நிலையாகும். குறிப்பாக கையடக்கத் தொலைபேசிகள் மனிதனுக்கு நேரடியாக அளிக்கின்ற நன்மைகள் அபரிமிதமானவை. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதன் பயனாக கையடக்கத் தொலைபேசிகள் உலக சனத்தொகையையே விஞ்சி விடக் கூடியளவுக்கு நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. அதிலும் இரண்டு கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் கூட 22 மில்லியன் மக்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். இது இந்நாட்டின் சனத்தொகையை விடவும் அதிகமாகும்.
இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் கையடக்கத் தொலைபேசி பாவிப்பவர்கள் அல்லர். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிப்பவர்கள் இந்நாட்டில் அதிகம் உள்ளனர். இதனைக் கருத்தில் கொள்வது மிகவும் அவசியமானது. அதனால் தான் இந்நாட்டில் கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை இந்நாட்டு சனத்தொகையை விடவும் அதிகரித்து காணப்படுகின்றது.
கையடக்கத் தொலைபேசிகள் அதிகரித்து காணப்படுவதுவதும் அவை மக்களுக்கு அளிக்கும் நன்மைகளும் மிக அதிகம் தான். ஆனால் இத்தொலைபேசிகள் பலவிதமான திடீர் விபத்துக்களை ஏற்படுத்தக் கூடியனவாகவும் உள்ளன. அந்த விபத்துக்கள் காயங்களாகவும். ஊணங்களாகவும் மாத்திரமல்லாமல் உயிரிழப்புக்களாகவும் கூட அமைந்து விடுகின்றன.
இந்தக் கையடக்கத் தொலைபேசிகள் மூலமான விபத்துகள் வீதியில் ஏற்படுகின்றன. ரயில் பாதையில் நிகழுகின்றன. ஏன் அதனை நீண்ட நேரம் சார்ஜ்ஜில் போட்டு வைத்திருக்கும் நிலையில் அதில் வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது கூட விபத்து இடம்பெறுகின்றது. கையடக்கத் தொலைபேசியை சார்ஜ்ஜில் போட்ட படி அதிலுள்ள விளையாட்டுக்களை விளையாடும் போதும், அதிலுள்ள பாடல்களை செவியேற்கும் போதும் வீடியோ படங்களைப் பார்க்கும் போதும் கூட திடீர் விபத்துக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன..
இவை அனைத்துக்கும் நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன.. நேற்று காலையில் அளுத்கமையில் இளைஞர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிய படி ரயில் பாதையருகே ரயில் நிலையம் நோக்கி சென்ற கொண்டிருந்தார். அவர் ரயில் வருவதைப் பொருட்படுத்தத் தவறியதால் ரயிலில் மோதுண்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதேபோன்று அண்மையில் தென் பகுதிக்கான கடுகதி ரயில் ஒன்று மாலை வேளையில் வேகமாக வந்து கொண்டிருப்பதையும் கருத்தில் கொள்ளாது கொழும்பு வெள்ளவத்தையில் நபர் ஒருவர் ரயில் பாதையருகிகே கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். ஆனால் கண் சிமிட்டி மறைவதற்குள் அவர் ரயில் மோதுண்டு படுகாயமடைந்தார்.
கடந்த வருடம் (2015) தென் பகுதியில் கடும் இடி மின்னலுடன் ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது அம்மழையில் நனையாது பாதுகாப்பு பெறுவதற்காக நான்கு தொழிலாளர்கள் அருகிலுள்ள ஒலைக் கொட்டில் ஒன்றில் ஒதுங்கினர். அச்சமயம் அங்கிருந்த தொழிலாளர் ஒருவரின் கையிலிருந்த கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்கு அவர் பதிலளிக்க முயற்சித்தது தான் தாமதம் மறுகணமே அவர் உட்பட இருவர் அதே இடத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
அண்மையில் தென்னிந்தியாவிலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சார்ஜ்ஜில் போடப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியில் வந்த அழைப்புக்கு பதிலளிக்க முற்பட்ட போது அக்கையடக்கத் தொலைபேசி வெடித்து சிதறியது. அதனால் அச்சிறுவனின் இரு கண்களும் நிரந்தரமாகவே பார்வையை இழந்து விட்டன. இச்சிறுவனை நேரில் சென்று பார்வையிட்ட தமிழகத்தின் முன்னணி அரசியல்வாதியொருவர் கையடக்கத் தொலைபேசிகளைச் சார்ஜ்ஜில் போட்ட படி பாவிக்க வேண்டாமென மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கையடக்கத் தொலைபேசியில் பிறந்த குழ்ந்தைகளைப் படம் எடுக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது. அவ்வாறு படம் எடுக்கப்பட்ட குழந்தையொன்றின் கண்ணில் திடீரென ஏற்பட்ட உபாதை தொடர்பாக கண் மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சை பெற்ற போது இக்குழந்தையின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு அக்குழந்தையை அதிசக்தி மிக்க லென்ஸ் கொண்ட கையடக்கத் தொலைபேசியில் படம் எடுக்கப்பட்டதே காரணம் என்றும் மருத்துவ நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் மற்றொரு சந்தர்ப்பத்தில் நீண்ட நேரம் சார்ஜ்ஜில் போட்டு வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியொன்று வெடித்து தீப்பற்றியதால் அக்கையடக்கத் தொலைபேசி சார்ஜ்ஜில் போடப்பட்டிருந்த அறையில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
மேலும் கையடக்கத் தொலைபேசியைச் சார்ஜ்ஜில் போட்ட படி நபர் ஒருவர் அண்மையில் உரையாடிக் கொண்டிருந்த போது அக்கையடக்கத் தொலைபேசி திடீரென வெடித்து சிதறியது. அதனால் அந்நபரின் கன்னங்கள் படுகாயமடைந்ததோடு அவரும் உயிரிழந்தார்.
இவை இவ்வாறிருக்க, கையடக்கத் தொலைபேசிகளைத் தொடராகப் பாவிப்போருக்கு தலைவலி, காது வலி ஏற்படுவதும், சில வகைக் கையடக்கத் தொலைபேசிகளை காற்சட்டைப் பையில் தொடராக வைத்திருப்பதால் தொடைப் பகுதியில் விறைப்பு தன்மை ஏற்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கையடக்கத் தொலைபேசியில் இருந்து வெளியாகும் கதிர்கள் ஆண்மையைப் பாதிப்பதுடன் மலட்டுதன்மைக்கும் துணைபுரிவதாகவும் கருதப்படுகின்றது.
கையடக்கத் தொலைபேசிகளால். இவ்வாறான நேரடிப் பாதிப்புக்கள் ஏற்படுகின்ற அதேநேரம் கையடக்கத் தொலைபேசிகளை உணர்வற்ற நிலையில் பாவிக்கும் போது பலவித திடீர் விபத்துக்களும் ஏற்படுகின்றன. சில வாகன விபத்துக்கள் ஏற்பட சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகளில் பொறுப்பற்ற முறையில் உரையாடியபடியும், குருஞ் செய்திகளைப் பாதித்தபடியும் வாகனங்களைச் செலுத்துவதே காரணம் என்று போக்குவரத்து பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மோட்டார் பைசிகிலிலும், துவிச்சக்கர வண்டிகளிலும் வீதிகளில் பயணிப்பவர்களில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடியும் குருஞ் செய்திகளைப் பாரத்தபடியும் அவற்றுக்கு பதிலளித்தபடியும் பயணிப்பவர்களும் உள்ளனர். இவர்கள் தம் எதிரே வரும் வாகனங்கள் குறித்து சிறிதளவேனும் கவனம் செலுத்தாமலேயே இவ்வாறு நடக்கின்றனர். ஆனால் அவை உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளாகும்.
அத்தோடு கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடியும் குருஞ் செய்திகளைப் பார்த்த படியும் வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளும் இருக்கின்றனர்.. அனேகர் வீதிகளிலும், ரயில் பாதையிலும் முன்னவதானமின்றி கையடக்கத் தொலைபேசியுடன் நடந்து கொள்ளுகின்றனர். ஆனால் இவர்கள் தம் செயற்பாடுகளின் பாரதூரத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் கையடக்கத் தொலைபேசிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களைத் தவிர்க்க்க் கூடியதாக இருக்கும்.
கையடக்கத் தொலைபேசிகளால் பலவிதத் திடீர் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதனால் கையடக்கத் தொலைபேசிகளைச் சார்ஜ்ஜில் போட்டபடி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையும் அதனை ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொறுப்புணர்வோடு அவற்றைப் பயன்படுத்துமாறும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிப்பவர்கள் மத்தியில் அவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்பட வேண்டும். அப்போது அவற்றால் ஏற்படும் திடீர் விபத்துக்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
Post a Comment