பிரேசிலில் பிறக்கும் விநோத தலை குழந்தைகளுக்கு, பூச்சிக்கொல்லி மருந்தும் காரணமா..?
ஜிகா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஜிகா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பிரேசில் நாடு. பிரேசிலில் கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தலை மட்டும் சிறியதாக, விநோதமாக இருக்கிறது. விநோதத் தலையுடன் பிறக்கும் குழந்தைகளால் தாய்மார்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இதனால் குழந்தை பெற்றுக்கொள்வதை ஐந்தாண்டுகளுக்கு தள்ளிப்போடுங்கள் என்றெல்லாம் அந்நாட்டு மக்களிடையே சிலர் பிரச்சாரம் செய்யத் துவங்கியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் இந்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், இதற்காக கிட்டத்தட்ட லட்சக்கணக்கான கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜிகா வைரஸ் விஷயம் இப்போது பூதாகரமாகி இருக்கிறது.
ஜிகா வைரஸ், ஏடிஸ் எஜிப்டி என்னும் கொசு மூலமாகத்தான் பரவுகிறது என மருத்துவ அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிரேசிலில் குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் விநோத தலையுடன் (மைக்ரொசிபெலி), வளர்ச்சி இன்றி குழந்தைகள் பிறக்கிறார்கள். இது திடீரென இன்று நேற்று நடக்கவில்லை, பல வருடங்களாக இது போன்ற குழந்தைகள் அங்கே பிறந்து வருகின்றன. எனினும் இப்போது மைக்ரோசிபெலி டைப் குழந்தைகள் பிறப்பது அப்பகுதியில் அதிமாகியிருக்கிறது. இதற்கு ஜிகா வைரஸ்தான் காரணம் என நம்பினார்கள்.
ஏடிஸ் எஜெப்டி கொசு நல்ல தண்ணீரில்தான் நன்றாக வளரும். ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் எனில் கொசுக்களை ஒழிக்க வேண்டும். எனவே கொசுக்களை ஒழிப்பதற்காக பிரேசில் அரசே, கடந்த 2014 -ம் ஆண்டு முதல், தண்ணீரில் வளரும் கொசுக்களை கட்டுப்படுத்த பைரிப்ராக்ஸிஃபின் என்ற மருந்தை மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரில் கலந்தார்கள். இந்த பைரிப்ராக்ஸிஃபின் மருந்தை, சுமிலார்வ் என்ற பெயரில் தயாரிப்பதே மான்சாண்டோ எனும் பூச்சிக்கொல்லி நிறுவனம்தான். மான்சாண்டோ நிறுவன பூச்சிக்கொல்லிகள் மீது உலகம் முழுவதும் எக்கச்சக்க சர்ச்சைகள் உண்டு.
இந்நிலையில் ஜிகா வைரஸ் மற்றும் மைக்ரோசிபெலி குழந்தைகளுக்கு இடையேயான தொடர்பை இன்னும் மருத்துவ அறிஞர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜிகா வைரஸ் பரவாத நாடுகளிலும் மைக்ரோசிபெலி வகை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதும், ஜிகா வைரஸ் பரவிய மற்ற ஊர்களில் மைக்ரோசிபெலி வகை குழந்தைகள் அதிகம் பிறக்காததாலும் குழப்பமடைந்திருக்கின்றார்கள். எனவே மைக்ரோசிபெலி வகை குழந்தைகள் பிறப்பதற்கு ஜிகா வைரஸ்தான் காரணம் என அறிஞர்களால் இப்போதைக்கு உறுதியாக சொல்லமுடியவில்லை.
மான்சாண்டோ நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி என்பதால் பைரிப்ராக்ஸிஃபின் மீது சந்தேகம் அதிகரிக்க, இந்த பூச்சிக்கொல்லியே ஒருவேளை மைக்ரோசிபெலி பிரச்னை அதிகமானதற்கு காரணமாக இருக்குமோ என்ற ரீதியிலும் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆனால் தண்ணீரில் கொசுக்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்படும் பைரிப்ராக்ஸிஃபின் பூச்சிக்கொல்லி மருந்தை, உலக சுகாதார நிறுவனமே பல முறை ஆய்வு செய்து அங்கீகரித்திருக்கிறது, பிரேசில் நாடும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே இந்த மருந்தை அனுமதித்திருக்கிறது என்கிறார் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்.
பைரிப்ராக்ஸிஃபின் மருந்தின் மேல் சந்தேகம் வர காரணம் என்ன ?
பைரிப்ராக்ஸிஃபின் தண்ணீரில் வளரும் கொசுக்களை ஒடுக்குகிறது. ஏடிஸ் எஜிப்டி கொசு முட்டைகள் நல்ல தண்ணீரில் இருக்கும். முட்டையில் இருந்து முழு கொசுவாக வளர்வதை இந்த மருந்து தடுக்கிறது. தண்ணீரில் இருக்கும் இந்த மருந்துகள், கொசுக்கள் வளரும்போது, அதன் உடலை தாக்கி, கொசுக்களின் உடலில் ஹார்மோன்களை சமச்சீரின்மை செய்து, அந்த கொசு முழுமையாக வளருவதையே தடுத்துவிடுகின்றன. இதன் மூலம் ஏடிஸ் எஜிப்டி கொசு உருவாவதை தடுக்க முடிகிறது. இந்த பைரிப்ராக்ஸிஃபின் மருந்து கலக்கப்பட்ட குடிதண்ணீரை குடிப்பதால்தான், அங்குள்ள கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் விநோதமாக பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பது அந்த நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்களின் சந்தேகம்.
ஜிகா வைரஸ் பரவினால் உடலில் என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை இதுவரை தெளிவாக அறியமுடிவதில்லை என்பதால், மைக்ரோசிபெலி வகை குழந்தைகள் பிறப்பதற்கு ஜிகா வைரஸ்தான் காரணமா என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை. இதனால் மருத்துவ அறிஞர்களே குழப்பமடைந்திருப்பதால்தான் பிரச்னை திசைதிருப்பபடுகிறதோ எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
- பு.விவேக் ஆனந்த்-
Post a Comment