கிழக்கு மாகாண முஸ்லிம்கள், ஏகமனதாக நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள்
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலோ, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலோ கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாடாமல் எந்தவொரு தீர்வையும் முஸ்லிம் கட்சிகள் முன்வைக்கக் கூடாது என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட் கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான மாகாணம் தழுவிய மாநாட்டின் போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சம்மேளனத்தின் தலைவர் றஊப் ஏ மஜீத் தலைமையில் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஸ்ஸஹீத் அகமது லெவ்வை மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், உலமாக்கள், அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஸ்ஸெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.
இம் மாநாட்டில் ஏகமனாதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. இந்த நாடு ஒற்றையாட்சி நாடாக இருக்க வேண்டும். அதே நேரம் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அதி உச்சத்துடன் வழங்கப்பட வேண்டும்.
2. முஸ்லிம்கள் எப்போதும் தனித்துவமான இனமாகும்.
3. மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக காணப்படல் வேண்டும். எந்தவொரு மாகாணத்தையும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறக் கூடாது.
4. இந்த நாட்டின் ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனாதிபதியாக இருக்கின்ற அதே நேரம் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
5. ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் அதே நேரம் பாராளுமன்றத்தினால் அல்லது தேர்தலின் மூலம் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த இரண்டு உப ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
6. அரச நியமனங்களின் போது மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும்.
7. சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வமொழியாக இருக்கின்ற அதே நேரம் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும்.
8. இந்த நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களும் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படல் வேண்டும். இதில் அவர்களின் மதம் கலாசாரம் சார்ந்த அனைத்து உரிமைகளும் உள்ளடக்கப்படல் வேண்டும்.
9. அதே போன்று மாகாணங்களின் ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.
10. மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் மாகாண முதலமைச்சருக்கும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படல் வேண்டும்.
11. அரச காணிகள் நிலங்கள் பகிரப்படும் போது முஸ்லிம்களுக்குரிய விகிதாசாரத்திற்கேற்ப முஸ்லிம்களுக்கு பகிரப்படல் வேண்டும்.
12. உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்துவதற்காக உள்ளுராட்சி மன்றங்களுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும்.
13. அரசியல் யாப்பில் ஏற்படும் முரண்பாடுகளை நீக்குவதற்காக அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவது அவசியமாகும்.
14. மாகாணங்களுக்குரிய பூரண அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். அவ்வாறான அதிகாரங்களில் யாரும் தலையிடக் கூடாது.
15. பாராளுமன்றத்தில் கீழ் சபை மற்றும் மக்களால் தெரிவு செய்யப்படும் செனட் சபை ஆகிய இரண்டு சபைகள் உருவாக்கப்படல் வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டன.
- எம்.எஸ்.எம்.நூர்தீன் -
Post a Comment