Header Ads



"முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, காலத்தின் கட்டாயம்"

- ஏ.எல்.நிப்றாஸ்-

முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் 'ஒற்றுமை' அல்லது 'ஒன்றுதிரண்ட' பலம் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி பேசப்படுகின்றது. மக்களை எல்லா அடிப்படைகளிலும் பிரித்துப் பிரித்து அரசியல் செய்வதால் அரசியல்வாதிகளும் தலைவர்களும் வளர்கின்றார்களே அன்றி, மக்களுக்கு ஆன பயன் ஒன்றும் கிடையாது என்ற உள்மன உணர்வு ஏற்படத் தொடங்கிய போதே முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பிரக்ஞை உருவாகி விட்டது. முஸ்லிம்களுக்கு ஒரு தனி அரசியல் கட்சி தேவை என்ற வேட்கை உருவாகி முப்பது வருடங்களுக்குள்ளேயே ஏகப்பட்ட முஸ்லிம் கட்சிகள் உருவாகி, அவற்றுக்கிடையே இணக்கப்பாட்டையும் கொண்டுவர வேண்டிய காலத்தின் கடப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபடுதல் என்ற கருத்திட்டம் மூன்று விதமாக நோக்கப்படுகின்றது. ஒன்று, தேர்தல்கால நலன்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் கட்சிகள் சில விட்டுக் கொடுப்புக்களுடன் கைகோர்த்துக் கொள்வது. இரண்டாவது, வேறு வேறு கட்சிகளில் இருந்து அரசியல் செய்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது எல்லோரும் பேதங்கள் மறந்து அதற்காக ஒருமித்து குரல் கொடுப்பது. மூன்றாவது, முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அரசியல் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி ஒரு குடையின் கீழ் அணிதிரள்வது ஆகும். 

முஸ்லிம் அரசியல்வாதிகளை, திருமண வீடுகளில் அன்றி வேறு எந்த ஒரு விடயத்திற்காகவும் சந்திக்க வைக்க முடியாத ஒரு துரதிர்ஷ்டமான நிலைமை காணப்படும் இன்றைய காலகட்டத்தில், மேற்சொன்ன ஒன்றுசேர்த்தல் வழிமுறைகளில் முதலாவது அடிப்படை மட்டுமே சாத்தியமாகும். ஆயினும் மூன்றாவது வகையான ஒற்றுமைப்படுதல் தொடர்பில் விசாலமான, ஆழமான கலந்துரையாடல்களை நடாத்த வேண்டியிருக்கின்றது. 

ஆனால், கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்று கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினால் ஆட்களை சம்பளத்திற்குத்தான் பிடித்து வர வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் கூட போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு வாகனத்தில் ஏறிவிடுவார்கள். அது பரவாயில்லை. காத்தான்குடியில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டால் கல்முனையில் கடைகள் திறந்திருக்கும். கல்முனையில் ஹர்த்தால் என்றால் அக்கரைப்பற்றில் இயல்புநிலை காணப்படும். இதுவே யதார்த்தம். மக்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் இப்படியேதான். இதற்கு காரணம், பிளவுகளும் உப்புச்சப்பில்லா முரண்பாடுகளும் ஆகும். 

யாருடைய தவறு?
முஸ்லிம் கட்சிகளை ஒருநிலைப்படுத்துவது சாத்தியமற்றுப் போய்க் கொண்டிருப்பதற்கு அரசியல் தலைமைகள் மட்டுமே காரணமல்ல என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகின்றேன். யார் என்னவாவது செய்யட்டும் என்று இருக்கின்ற பிராந்திய அரசியல்வாதிகள், முஸ்லிம் புத்திஜீவிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் சாதாரண பொதுமக்களுக்கும், தலைமைகள் செய்து கொண்டிருக்கின்ற இந்த சுயநல, பிரித்தாளும் அரசியலில் பங்கிருக்கின்றது. அவர்களைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்தியிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. ஆதலால், இந்நிலைமையை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கும் உள்ளது. 

எனவே உடனடியாக முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது அனைவரதும் தார்மீகக் கடமையாகும். முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்று வரும்போது, சில முன்யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை தளமாகக் கொண்டியங்கும் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை முதன்மையாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட வேண்டுமென்றும் பின்னர் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவும் கூறப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளும் அதற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வேறுபட்டது என்ற அடிப்படையில் இந்த யோசனை நியாயமானதே. 

ஆனால், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் அதிகமான எம்.பி.க்கள் உள்ளனர். தனித்தனியான பிரச்சினைகள் போன்றே, அரசியலமைப்பு உருவாக்கம், எல்லை மீள்நிர்ணயம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் எல்லா பிராந்திய மக்களுக்கும் பொதுவானவையாக காணப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டும், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது இன்னுமொரு பிளவு ஏற்படுவதை தடுப்பதை கருத்திற் கொண்டும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை பின்னர் உள்வாங்குவது குறித்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கலாம். 

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாகும் பட்சத்தில் தலைவர், சின்னம் பற்றிய இரு முக்கிய பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதில் முரண்பாடுகள் ஏற்படும் என்று தெரிந்தால், சுழற்சி முறையான தலைமைத்துவத்தை நியமிக்கலாம். அதேபோல் ஏதேனும் ஒரு கட்சியின் சின்னத்தை பொதுவான சின்னமாக ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தால், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்து சின்னமொன்றை பெறலாம். இவ்வாறான நிலை ஏற்படுமாயின் கூட்டமைப்பில் உள்ளடங்கும் முஸ்லிம் கட்சிகள் அழிந்து போக மாட்டாது. மாறாக, அவர்களது கட்சியும் சின்னமும் இருக்கும். தேர்தல்களின் போது தத்தமது கட்சி சார்பாக, கூட்டமைப்பு ஊடாக வேட்பாளர்களையும் நிறுத்த முடியும். 

இக் கூட்டமைப்புக்கு சமூகத்திலும் அரசியல் களரியிலும் பரவலான ஆதரவுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. மு.கா. செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி, அக்கட்சியின் ஸ்தாபக தவிசாளர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் உள்ளிட்ட பலர் இதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். முன்னமே, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். 

மிக முக்கியமான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இதற்கு இன்னும் ஆதரவை தெரிவிக்கவில்லை. ஹக்கீமின் தனிப்பட்ட அரசியல், மலைநாட்டை மையமாக வைத்துக் கொண்டு சூழல்வதாகும். இந்நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவானால், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாண அலகு போன்ற சர்ச்சைக்குரிய கோரிக்கைகளை அக் கூட்டமைப்பு முன்வைக்கும். அவ்வாறான கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டு ஹக்கீமினால் அங்கு அரசியல் செய்ய முடியாது. எனவே, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை அவர் பெரிதும் விரும்ப மாட்டார் என்று கட்சிக்குள் இருப்பவர்களே பேசிக் கொள்கின்றனர். 

ஆனால், வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் யாவரும் கூட்டமைப்புக்குள் இணைந்து விட்டால் ஹக்கீமினால் அதற்கு வெளியில் இருக்க முடியாது. அதன் பின் முஸ்லிம்களின் அரசியல் என்பது இக் கூட்டமைப்பை மையமாகக் கொண்டதாகவே இருக்கும். எனவே பஸ் புறப்படுகின்ற நேரத்திலாவது ஹக்கீம் தலைமையிலான மு.கா., மிதிபதகையில் தொற்றிக் கொண்டேயாக வேண்டும். அந்த வகையில், மு.கா.வை மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இதற்குள் கொண்டுவந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை நிறுவுவதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். இவ் வேலைத் திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சி என்பதால் புத்திஜீவிகள், படித்தோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இதில் 'அழுத்தக் குழு'வாக செயற்பட வேண்டியுள்ளது. 

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாகும் என்றால், அது ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். அதில் இணைந்து கொள்ள விரும்பாத கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் சுயநலவாதிகள் என்றும் சமூகத் துரோகிகள் என்றும் அவ் வரலாறு எழுதி வைக்கும்.

No comments

Powered by Blogger.