Header Ads



கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான ஒன்றுகூடல்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கத்தாரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த உலமாக்களுக்கான மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வொன்ரு எதிர்வரும் 26ம் திகதி வெள்ளிக்கிழமை கத்தார் இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அப்துல்லாஹ் பின் ஸைத் ஆல் மஹ்மூத் அரங்கில்(பனாரில்) நடைபெறவுள்ளது.

இலங்கையிலுள்ள அரபுக் கல்லூரிகளில் ஆலிம்களாக பட்டம் பெற்று தொழில் நிமித்தம் கத்தாரில் வசித்து வரும் உலமாக்களை  ஒன்றினைக்கும் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான பாரிய வேலைத்திட்டமொன்று கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வேறுபட்ட இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அப்பால் ஆலிம்களை ஒரே நிழலில் ஒன்றினைப்பதனூடாக சமூகம் மற்றும் தேசம் சார்ந்த பல்வேறு பரப்புக்களில் பங்களிப்பு செலுத்தவும், கத்தாரிலுள்ள ஆலிம்களுக்கான தொழில் வழிகாட்டல்களை வழங்கவும் ஆன்மீகம் மற்றும் தஃவா சார் பணிகளில் அனைத்து உலமாக்களையும் ஈடுபடுத்திக்கொள்ளவும் கத்தார் வாழ் இலங்கை உலமாக்களுக்கான அமைப்பு ஒன்றை நிறுவுவது காலத்தின் தேவையாக கருதி குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகளின் பழைய மாணவர் அமைப்புகள் மற்றும் ஏனைய ஆலிம்களுக்கான ஒன்றுகூடல்கள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று கருத்துக்கள் பெறப்பட்டு வருவதோடு ஆலிம்களின் விபரங்களும்  திரட்டப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாகவே எதிர் வரும் 26 பெப்ரவரி வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையின் பின் 7.30 முதல் 9.30 வரை அப்துல்லாஹ் பின் ஸைத் ஆல் மஹ்மூத் இஸ்லாமிய கலாசார நிலையத்தில் (பனார்)  உலமாக்களுக்கான மாபெரும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராப்போசனத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வுக்கு கத்தார் இஸ்லாமிய கலாசார நிலையத்தின் (பனாரின்) பணிப்பாளர்; அஷ்ஷெய்க் அபூ உபைதா அல் ஜப்ராவி பிரதம அதிதியாகவும்,கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்விற்கு கத்தாரில் வசிக்கும் இலங்கை உலமாக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாரு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.