சிறுநீரக நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்க, ஜனாதிபதி அறிவுறுத்தல்
சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களை எவ்விதத் தட்டுப்பாடுகளும் இன்றி வைத்தியசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாவது தருவித்து வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையானதும் தற்போது தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்களை வெளிநாடுகளில் இருந்து உடனடியாகத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபால நேற்று தெரிவித்தார். இதற்கேற்ப சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான தட்டுபாடு நிலவும் மருந்துப் பொருட்கள் நாளை செவ்வாய்க்கிழமைக்குள் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபால அனுராதபுரம் வைத்தியசாலையின் சிறுநீரக ஆராய்ச்சி நிலையத்திற்கு நேற்று முன்தினம் நேரில் சென்று அங்குள்ள தேவைகளைக் கேட்டறிந்தார்.
தற்போது நாட்டில் அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 21 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாகவும் டொக்டர் பாலித மஹீபால கூறினார்.
மர்லின் மரிக்கார்
Post a Comment