Header Ads



பௌத்த விகாரையை மகிந்தவின் 'அரசியலுக்கு' பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான நாராஹேன்பிட்டியில் உள்ள அபயாராம பௌத்த விகாரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கிருலப்பனை பூர்வாராம விகாரையின் விகாராதிபதி பத்பேரிய விமலஞான தேரர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

அபயாராம விகாரை தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுதந்திரமாக தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள விமலஞான தேரர், அச்சம் காரணமாக இது தொடர்பில் முறையிடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த முறைப்பாட்டை இன்று ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிபதி, மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

விசாரணைகளை எதிர்வரும் 15-ம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இது சம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறும் பிரதிவாதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, பாரதூரமான ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜரானார். bbc

2 comments:

  1. நியாயமான கோரிக்கைதான். குறித்த விஹாரை மஹிந்தவின் அரசியல் அலுவலகமாகவே மாறிவிட்டது. அரசியல் நோக்கங்களுக்காக மதஸ்தலங்கள் பாவிக்கப்படுவது முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. நல்லாட்சி செய்வதெல்லாமே தவறு என்று கூறித்திரிபவர் தான் ஏற்கனவே செய்ததவறுகளையும் தற்போது இவ்வாறு செய்துகொண்டிருக்கும் தவறுகளையும் ஏன் மறைத்து பேசித்திரிகின்ராறோ..புரியவில்லை

    ReplyDelete

Powered by Blogger.