நீதிபதி பரிக்டீனின் கவலை
(JM.HAFEEZ)
நூல் நிலையங்கள் இன்னும் சிலகாலத்தில் நூதன சாலைகளாக மாறிவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக வலப்பனை நீதவான் மன்ற நீதிபதி எம்.எச்.பரிக்டீன் தெரிவித்தார்.
கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஒரு வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். மலையகத்தில் தோன்றிய அருள் வரம் பெற்ற புலவரான 'அருள் வாக்கி' அப்துல் காதர் அவர்களின் 150 வது நினைவு தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மலையக கலைகலாசார சங்கம், இரத்தின தீபம் அமைப்பு பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய தமிழ் இலக்கிய மன்றம், மற்றும் கண்டி மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் போன்ற பலர் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது-
நாம் சிறுவர்களாக இருந்த போது நிறைய நூல்களை வாசித்தோம். அப்பழக்கம் இன்றும் எம்மை வாசிக்கத் தூண்டியுள்ளது. ஆனால் புதிய தலை முறையினர் இன்று பேஷ்புக், இன்டர்நெட், ஈமெயில், வட்ஷ்சப் என்ற ஒரு புதுமோகத்தால் கவரப்பட்டு தமது பொன்னான காலங்களை இழந்து வருகின்றனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வாசிக்கத் தூண்ட வேண்டும்.
'அருள் வாக்கி' என்று போற்றப்படும் வரம் பெற்ற ஒரு கவிஞரான அப்துல் காதர் அவர்களது நினைவு தினத்தில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் அருள் வாக்கி பிறந்த மண்ணிலேதான் நானும் பிறந்தேன். அதே நேரம் நான் மாணவனாக இருந்த காலத்தில் இலக்கிய ஆர்வத்தின் காரணமாக தலாத்துஓயா கனேஷ் என்பவரை சந்திக்கச் சென்ற போது அவர் எனக்கு அருள் வாக்கி பற்றிச் சொன்னார். இதனால் அருள் வாக்கியின் விடயங்களைத் தேடிப்படிப்பதில் ஆர்வம் கொண்டேன். அந்தவகையில் சிறுவயதில் ஆர்வம் கொண்ட ஒருவரது நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அருள் வாக்கி அப்துல் காதர் அவர்கள் தமிழ் மொழி மீது கொண்ட பற்றுக் காரணமாக அவர் மறைந்த பின்பும் அவருக்கு இன்று நாம் விழா எடுக்கின்றோம். அவர் தமிழுக்கு முக்கிய மான ஒரு தொண்றாற்றியவர். இந்தியாவில் அபுல் கலாம் போன்று இலங்கையில் அருள் வாக்கி அப்துல் காதர் போற்றப்பட வேண்டியவர்.
இவ்வைபவத்தில் சிறப்புரையாற்றிய கண்டி கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும் புலவரின் ஊரைச் சேர்ந்தவருமான ஐ.எம். நிஸாம் தெரிவித்ததாவது-
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, இந்தியாவின் திருப்புத்தூரைச் சேர்ந்த ஆதம்பிள்ளை ராவுத்தர் என்பவர் தெல்தோட்டைப் பிரதேசத்தில் ஒரு கோப்பித் தோட்ட உரிமையாளராக இருந்தார். அவர் கண்டிய அரசனுக்கு ஒரு வைத்தியராகவும் இருந்தார். அக்காலத்தில் கண்டி வாவியை அமைக்கும் பணியில் முன்னின்ற மாமு நெய்னார் என்பவருக்கு அரசன் அன்பளிப்புச் செய்த பிரதேசமே இன்று தெல்தோட்டையாகி உள்ளதாகவும் கூறினார். அக்காலைத்தில் மேற்படி ராவுத்தர் என்பவருக்கும் அவ்வா உம்மா என்பவருக்கும் பிறந்தவரே அருள் வாக்கி அப்துல் காதர் புலவர் என்றார். இவர் 150 வருடங்களுக்கு முன் 1866 ல் பிறந்தவர்
அப்துல் காதர் புலவர் சிறுவயதிலே நினைவாற்றல் மிக்கவராகவும் ஏதோ ஒரு புதுவித ஞானத்தால் உந்தப்பட்டவராகவும் இருந்துள்ளார். அக்காலத்தில் கண்டியில் இருந்த குயின்ஸ் எக்கடமி என்ற பள்ளியில் கல்வி கற்கும் போது ஒருநாள் இவர் மூர்சையுற்று விழுந்துள்ளார். அவரை மீட்டு எழுப்பிய போது அவர் அடுக்கு மொழியில் பேசத் துவங்கியுள்ளார். இதுவே புலவரின் ஆரம்பப் பயணமாக இருந்தது. அதன் பின் அவர் பல்வேறு வைபவங்களிலும் பாடல்களை இயற்றிப் பாடுவதில் வள்ளவராக இருந்துள்ளார்.
இவருடைய கவிதைகளில் தமிழ் மணம் பரப்புவது மட்டுமல்ல கவிதையில் சொல்லும் விடயங்கள் அட்புதமாக நடந்துள்ளன. இதனால் இவரை ஒரு வரம் பெற்ற கவியாகப் பலர் போற்றினர். இவரது கவிதையுடன் தொடர்புடைய சம்பவங்கள் பல உள்ளன.
ஒருநாள் தண்ணீர் தாகம் காரணமாக தனது சித்தப்பா வீட்டில் (சாச்சா வீட்டில் இளநி பறித்ததையும் அதனால் சாச்சா கோபப்பட்டதையும் அதற்கு ஒரு கவிதை வடித்துப் பாடிய பின் அந்த இளநி மரம் காய்க்காமல் போன வரலாற்றையும் நினைவு படுத்தினர்.(ஆச்சப்பா சாச்சப்பா, என்ன நீ ஏச்சப்பா, என்று நீ காச்சப்போ, என்றும் குச்சப்பா என்ற வாறு ஒரு பாடலைப்பாடிபின் அன்று முதல் இன்று வரை அம்மரம் காய்ப்பதில்லை என்பதையும் தெரிவித்தார்.
அதேபோல் இவருக்குப் பங்குள்ள ஒரு காணியை பக்கத்து தோட்டத்து கங்கானி பிடித்துக் கொண்டதன் காரணமாக கோபமுற்று (கங்கானி கங்கானி, உன்காணி என்காணி, நான்தான் பங்காளி, உன்காணி அதுவாயின், அது என்றும் வென்காணி) பாடியவரிகளால் இன்றும் அக்காணியில் எந்தப் பயிரும் வளராது வெறுமையான காணியாக உள்ளதாகக் கூறினார். அப்பிரதேசத்தை இன்றும் புலவர் மலை என்று அழைகப்பட்டு வருவதாகவும் அதில் எந்தப் பயிரும் வளராமல் வெற்றுக்காணியாக இருப்தை அவதானிக்க முடியும் என்றும் கூறினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு கவியரங்கம் இடம் பெற்றதாகவும் அந்த அவையிலே யாழ்பாணத்தைச் சேர்ந்த புலவர் பொன்னம்பலக் கவிராயர் அமர்ந்திருந்ததாகவும் அங்கு இடம் பெற்ற ஒரு அதிசயம் பற்றி அவர் கூறினார். ஒரு குத்து விளக்கைப் பார்த்து எரி.. எரி.. என்று அடுக்கு மொழியில் கவிதை பாடி எரிய வைத்ததையும் பின்னர் சபையோர் ஆச்சரியப்பட்டு அதனை கவிதையால் அனைக்கும்படியும் கேட்டுக் கொண்டதாகவும் சற்று நேரம் மௌனமாக இருந்து ஏதோ ஒரு பிராத்தனையில் ஈடுபட்டு மீண்டும் நின்றனை... நின்றனை.. என்ற அடுக்கு மொழிப்hடலைப்பாட அது ஒவ்வொரு திரயாக அனைந்ததாகவும் அப்துல் காதர் புலவர் பற்றி நூலில் காணப்படவதாகவும் தெரிவித்தார். இதனால் அந்த மேடையில் வைத்து அவருக்கு தீப சித்தி என்ற பட்டம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Post a Comment