Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களைப் பற்றி, தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய நேரம்

-லத்தீஃப் பாரூக்-

“நமோ நமோ மாதா” நாட்டின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது 1952ல். அது பிரபல தமிழ் கவிஞர் எம்.நல்லதம்பி அவர்களால் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. நமோ நமோ மாதா என்கிற வார்த்தைகள் ஸ்ரீலங்கா மாதா என மாற்றப்பட்டது 1961ல். தமிழர்கள் பொதுவாக தேசிய கீதத்தை தமிழில் பாடும்போது தங்கள் உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிக்காட்டுவார்கள். எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கண்ணீர் விட்டார்கள். பத்தி எழுத்தாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் பாடசாலை மாணவர்கள் தேசிய கீதத்தை தமிழில் பாடியதை பார்த்தபோது தான் கண்கலங்கி அழுததாகச் சொன்னார். சுதந்திர தின நிகழ்வுகளை பார்த்த பின்னர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  நேராக யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று புத்த பகவானுக்கு தாமரை மலர்களை வைத்து வணங்கி எண்ணெய் தீபமும் ஏற்றினாராம். அங்குவைத்து அவர் சிங்களவர்கள் ஒரு அடி முன்னோக்கி வைத்தால் தமிழர்கள் பத்து அடி எடுத்து வைக்க தயாராக உள்ளார்கள் என்று சொன்னார். ஜனாதிபதி சிறிசேன தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பை பாடுவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் நல்லிணக்கத்தை நோக்கிய நீண்ட கடினமான பயணத்திற்கான பாதையில் அடி எடுத்து வைத்துள்ளார்.

தீவிரவாத நிலைப்பாடு அழிவையும் மற்றும் துயரத்தையும் மட்டுமே கொண்டுவரும் என்பதால் அவரது முயற்சிக்கு அனைத்து சமூகத்தவர்களும் ஆதரவு வழங்கவேண்டும். உதாரணமாக சிங்களவர்கள் மத்தியில் உள்ள தீவிரவாதிகள் தாங்கள்தான் முதலில் இந்த நாட்டுக்கு வந்ததால் இந்த நாடு முற்று முழுதாக சிங்களவர்களுக்கே சொந்தமானது என நினைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையின் கீழ் கிட்டத்தட்ட சனத்தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் சிங்களவர்கள் அல்லாமல் இருப்பதால், இந்த சிந்தனை யதார்த்தமற்றதும் மற்றும் பேரழிவானதும் ஆகும். இதற்கிடையில் தமிழர்கள் நாடு முழுவதிலும் வசித்தாலும், சில தமிழர்கள் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் பிரத்தியேகமாக தங்களது தாயகம் என இன்னமும் கருதுகிறார்கள். இந்தப் போக்கும் பேரழிவுக்குச் சமமானது. எனினும் அதிகம் பெரும்பான்மையான மக்கள் சமூகத்தின் பன்மைத் தன்மையை ஏற்றுக்கொண்டு மற்றும் பரஸ்பரம் ஒவ்வொருவரின் கலாச்சாரத்தையும் மற்றும் மதத்தையும் மதித்து ஐக்கிய ஸ்ரீலங்காவுக்குள் வாழ்வதையே விரும்புகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சிங்கள கல்விமான்கள், தொழில் நிபுணர்கள், ஆர்வலர்கள் மற்றும் பௌத்த பிக்குகளும் கூட இணைந்த ஒரு குழுவினர் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் மூவின சமூகங்களையும் சோந்தவர்களைக் கொண்ட ஒரு மன்றம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள். இந்த முன்முயற்சி அரசியல் ஆய்வாளரும் முன்னாள் டெய்லி நியுஸ் ஆசிரியருமான ஜயதிலகா டி சில்வா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டம் கொழும்பு மகாவலி மையத்தில் 14 டிசம்பர், 2015 ல் நடைபெற்றது.

முதலில் பேச வந்தவர் ஒரு மூத்த சிங்கள சட்டத்தரணி, அவர் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி சுருக்கமாக விளக்கினார். அடுத்ததாக வட மாகாணசபை உறுப்பினராகவும் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் உள்ள ஒருவர் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் தாயகம் மற்றும் அங்கு அவர்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு நீண்ட சொற்பொழிவை ஆற்றினார். அவரது பேச்சு முழுவதிலும் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அங்குள்ள மொத்த சனத்தொகையில் 40 விகிதத்தை உள்ளடக்கியிருந்த போதிலும் முஸ்லிம்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை. மேலும் அவர் விளங்கிக் கொள்ளத் தவறியது கிழக்கு என்பது தமிழர்கள், முஸ்லிம்கள், மற்றும் சிங்களவர்கள் ஆகிய மூவின மக்களும் வாழும் ஒரு பிராந்தியம் என்பதை. இந்த நிமிடம் அவசியமாக உள்ளது அனைத்துப் பகுதியிலுமுள்ள நெகிழ்வுத் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டியதே ஆகும், மாறியுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் பேரழிவு இனவாத சக்திகளின் தோற்றம் என்பன இந்த நாட்டை ஒரு கொலைக்களமாக மாற்றுவதற்கு வேண்டிய அனைத்து சாத்தியங்களையும் கொண்டுள்ளன.

அவரது பேச்சு 1970 களில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஏ.அமிர்தலிங்கம் அவர்கள் அடிக்கடி பேசும் ‘ஒருமுறை அரசாண்ட தமிழர்கள் மீண்டும் அரசாள வேண்டும்’  என்கிற பேச்சைத்தான் எனக்கு நினைவு படுத்தியது. அத்தகைய பேச்சுக்கள் தமிழ் இளைஞர்களின் தீவிரவாதத்துக்கும் மற்றும் இராணுவ மயமாதலுக்கும் பங்களிப்பு நல்கியது, விசேடமாக அவர்களது சட்டபூர்வமான அபிலாஷைகளுக்கு சிங்கள தலைவர்கள் திமிரும் அலட்சியமும் காண்பித்தபோது. எனினும் மூன்றாவதாக பேசியவர் ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர், அவர் தனது பேச்சில் சில உள்வீட்டு உண்மைகளைச் சுட்டிக்காட்டினார், விசேடமாக வடக்கிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இனச்சுத்திகரிப்புக்கு ஆளான பின்னணியை, அவர்கள் கிட்டத்தட்ட அவர்களின் சொந்த அரசியல்வாதிகள் உட்பட எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் புத்தளம் மற்றும் வேறு இடங்களில் உள்ள அகதி முகாம்களில் கிடந்து வாடி வதங்குகிறார்கள்.

நல்லிணக்கம் ஒரு விரிவான செயல்முறை மற்றும் அது சிங்களவர்களுக்கும் மற்றும் தமிழர்களுக்கும் மட்டுமே என்று வரையறுக்கப் படவில்லை. இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். இதன்படி நாட்டில் உள்ள எல்லா சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டிய அதேசமயம் விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கும் மற்றும் முஸ்லிகளுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படவேண்டியது அவசியம். ஜனாதிபதி சிறிசேன தமிழர்களுக்கு நம்பிக்கையை வழங்கும் இந்த நேரத்தில், நல்லிணக்கம் என்பது அனைத்து சமூகங்களையும் விரிவாக உள்ளடக்குகிறது என்பதால் தமிழ் தலைவர்கள் இனச்சுத்திகரிப்பு காரணமாக அகதி முகாம்களில் வாடும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு சில நம்பிக்கைகளை வழங்கவேண்டிய நேரம் இதுவல்லவா? இனச்சுத்திகரிப்பால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இன்னல்களைக் களைய வேண்டியது தமிழர்களின் ஒரு தார்மீகக் கடமை இல்லையா? சிங்களவர்களின் நல்லிணக்கத்துக்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன்  எடுத்துவைப்பதாக வாக்களித்துள்ள பத்து அடிகளில் ஒரு  அடியையாவது யாழ்ப்பாண முஸ்லிம் அகதிகளின் துர்ப்பாக்கிய நிலையை சரிசெய்வதற்கு வேண்டி அவர் எடுத்து வைக்கவேண்டிய நேரம் இதுவல்லவா? தமிழ் அரசியல் தலைவர்கள், முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்கும் மற்றும் நிலங்களுக்கும் திரும்பி வருவதற்கும் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்குமான உதவிகளை மேற்கொள்வதற்கு  சில முன்முயற்சிகளை மேற்கொள்ளுவதற்குமான நேரம் இதுவல்லவா.

முஸ்லிம்கள் வடக்கின் மண்ணினோடும் மற்றும் சமூகத்தோடும் பிரிக்கமுடியாது இரண்டறக் கலந்தவர்கள். நூற்றாண்டுகளுக்கு மேலாக இதுதான் அவர்களுக்கான ஒரு இடமாகவும் மற்றும் அவர்களின் தமிழ் அயலவர்கள்தான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மக்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தீவின் தென்பகுதிக்கு பல்வேறு சமூகச் சூழ்நிலைகள் காரணமாக விஜயம் செய்யும் தருணங்களில் விசேடமாக சிங்களம் பேசவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும்போது அவர்கள் தங்களை வேற்றுக் கிரகவாசிகளைப் போல உணர்ந்துள்ளார்கள்.

அவர்களின் முக்கியமான செயற்பாடுகள்,விவசாயம் மற்றும் மின்பிடி என்பன தவிர, வன்பொருள் விற்பனையின் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம், பார ஊர்தி போக்குவரத்து, நகை மற்றும் ஆடை தைத்தல் என்பனவாகும். அவர்களுக்கு நெல்வயல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் என்பனவற்றை தவிர வீடுகள்,சொத்துக்கள், என்பனவும் சொந்தமாக இருந்தன. ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் விரிவான அளவில்  அதாவது காலம்சென்ற யாழ்பாண மேயர் அல்பிரட் துரையப்பா நிர்மாணித்த, யாழ்ப்பாணம் புதிய சந்தையில் இருந்த கட்டிடங்களில் முன்றில் இரண்டு பகுதிகளை சொந்தமாக்கி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான திரு.வீ. ஆனந்தசங்கரி இதைக் கண்டித்து ஒருமுறை சொன்னது, “ தமிழர்களின் பிரச்சினைகளில் வெற்றிவாகை சூடுவதற்காக எல்.ரீ.ரீ.ஈ ஒவ்வொரு முஸ்லிமையும் வட மாகாணத்தை விட்டு விரட்டியடித்தது. முஸ்லிம்கள், ஏனெனில் அவர்கள் வெறுமே முஸ்லிம்கள் என்கிற காரணத்தால் தங்கள் அனைத்து உடமைகளையும் மற்றும் பல தலைமுறைகளாக அவர்கள் தமிழர்களுடன் சமாதானமாக வாழ்ந்த நிலத்தையும் விட்டு வெளியேற நேர்ந்தது. இப்போது அவர்கள் தென்பகுதியில், சிங்களவர்களுடன், புத்தளம் மற்றும் அனுராதபுரத்தில் உள்ள அகதி முகாம்களில், அவர்களின் அந்தரங்க மற்றும் அடிப்படைத் தேவைகள் கூடக் கிடைக்காத நிலையில் கிடந்து வாடுகிறார்கள்.

எங்கள் நாட்டில் அகதி முகாம்கள் இருக்கின்ற வரையில் அதில் வசிப்பவர்கள் சிங்களவரோ, தமிழரோ மற்றும் முஸ்லிமோ  அல்லது வேறு குழுவை சேர்ந்த யாராக இருந்தாலும் சரி, அதுவரை ஜனநாயக கொள்கைகளைப் பற்றி பெருமை பேசுவதற்கு எங்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. எங்கள் மக்களில் ஒரு பகுதியினர் அவர்களின் ஜனநாயக அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சொல்லொணா துயரங்களை அனுபவிக்கையில் எங்கள் நாடு முழு ஜனநாயக உரிமைகளையும் அனுபவிக்கும் ஒரு நாடு என்று எங்களால் பெருமையடிக்க முடியாது. ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மற்றும் மனித உரிமைகள் என்பனவற்றை இழப்பது அடிமைத்தனத்துக்கு ஒப்பானது. சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தவர்கள் ஆகியோர் எற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வு ஒன்றை நாடு காணவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன்”. அவர்களது சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், அவர்களது சொந்த சமூகத்தவர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய அனைவராலும் அலட்சியப் படுத்தப்பட்டு, இற்றைக்கு கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக துரதிருஷ்டசாலிகளான இந்த முஸ்லிம்கள் அகதி முகாம்களிலேயே கிடந்து வாடுகிறார்கள் அங்கே அவர்கள் தங்களுக்கு கிடைப்பதை வைத்துக்கொண்டு அதன்மூலம் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments

Powered by Blogger.