முஸ்லிம் வன்முறைகளுடன், ஞானசாரரை குற்றவாளியாக்க சூழ்ச்சி - மைத்திரியிடம் BBS முறையீடு
-ARA.Fareel-
தற்போது விளக்கமறியலில் இருக்கும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை அளுத்கமயில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் உட்பட பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்படுத்தி குற்றவாளியாக நிரூபிக்க சூழ்ச்சிகள் நடைபெறுவதாக அவ் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளது.
பொதுபல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே தலைமையிலான பெளத்த குருமார்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்து இம்முறைப்பாட்டினை முன்வைத்தது.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில் நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரர் தொடர்பான பழைய சம்பவங்கள் இப்போது தேடிப்பார்க்கப்பட்டு சோடிக்கப்பட்டு வருகின்றன.
அளுத்கமயில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்கு ஞானசார தேரரே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளோம்.
இதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதற்கான காரணத்தை அறியவேண்டுமென தொடராக கோரிக்கை விடுத்து வந்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதியிடமும் தற்போதைய ஜனாதிபதியிடமும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை.
தற்போது ஞானசார தேரருக்கு சொந்தமாக வாகனம் இருக்கிறது. இந்த வாகனம் எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டது. யாரினால் நிதிவழங்கப்பட்டது என்றெல்லாம் தேடிப்பார்க்கிறார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் உண்மையான குற்றவாளிகளையே கைதுசெய்ய வேண்டும். நாட்டுக்காகவும் பௌத்தத்துக்காகவும் தேசிய பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்த ஞானசாரர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என பொது பல சேனாவின் குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு அவரது செயலாளரிடம் தெளிவுபடுத்தியதுடன் இவ்விடயங்கள் உள்ளடக்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்தது.
அவர் குற்றமற்றவர் எனில் ஏன் இவர்கள் இவ்வளவு அஞ்ச வேண்டும்?
ReplyDeleteஒட்டுண்ணிப்பேன் கடித்ததைப் பார்ப்பதற்கு வேண்டுமானால் உருப்பெருக்கி தேவைப்படலாம். ஆனால் ஒன்பதடி நாகம் தீண்டியதைப்பார்க்க அதெல்லாம் தேவையில்லை.
ReplyDeleteHi Pro. Dilan take the challenge and go to court!!!!
ReplyDelete