இலங்கையின் 68வது சுதந்திர தினத்திற்கு, ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செயதி
எமது தாய் நாடான இலங்கை சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளைத் தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைகிறது.
கடந்த 68 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்காக எமது நாடு வரலாறு நெடுகிலும் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்து வந்துள்ளது.
அனைத்து இலங்கையரும் சமாதானத்தோடும், சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று நல்லாட்சி அரசு உறுதி கொண்டுள்ள நிலையில் இவ்வருட சுதந்திர தினத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்.
பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு செழிப்புடனும் அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டுமெனில் அவரவர் சமயப் போதனைகளைக் கடைப்பிடிப்பதுடன், பிற சமயத்தவரை மதிக்கும் பண்பு வளர்க்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளுமாகும்.
ஒரு நாட்டின் அபிவிருத்தியும், முன்னேற்றமும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமையிலும், நாட்டுப்பற்றிலுமே பெரிதும் தங்கியுள்ளது. அந்த வகையில் நாட்டுப்பற்றையும், சமூகங்கள் மற்றும் சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும், சகவாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்க்கமான ஒரு சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் இருக்கின்றோம் என்பதையும், இதற்கான நடைமுறைச் சாத்தியமான சகல வழிகளையும் நாம் எடுப்பதே எமது கடமையாகும்.
எனவே இந்நாட்டில் ஒற்றுமை, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றைக் கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்பு, நம்பிக்கை என்பன மூலம் சமாதான இலங்கையைக் கட்டியெழுப்பி சகலரும் நல்வாழ்வு வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Post a Comment