உலகளவில் 50 லட்சம் கார்களைத் திரும்பப் பெற முடிவு
வாகனங்களில் பயணிகள் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்ட காற்றுப் பைகளில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக உலகம் முழுவதும் 50 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன.
காற்றுப் பைகள் தயாரிப்பில் கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் காற்றுப் பைகள் பல்வேறு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, அந்த காற்றுப் பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அளித்த ஆவணங்கள், தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கான்டினென்டல் நிறுவனம் கூறியுள்ளதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பிறகு தயாரித்து விற்பனை செய்யப்பட்ட காற்றுப்பை கட்டுப்பாட்டு கணினியில் ஈரப்பதம் உள்ளே புகுவதற்கு வழி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், காற்றுப்பை விரியாமல், ஓட்டுநருக்குப் பாதுகாப்பு குறைய வாய்ப்புள்ளது.
எனவே, இதனை எந்தவித கட்டணமுமின்றி மாற்றிதரத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு விற்பனை செய்த கார்களை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பிரச்னைக்காக, ஹோண்டா, ஃபியட் கிரைஸ்லர், வோக்ஸ்வேகன் மற்றும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 20 லட்சம் வாகனங்கள் இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கான்டினென்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment