Header Ads



மகிந்த ராஜபக்ஷ விசுவாசிகள், மேற்கொண்டுள்ள 5 முக்கிய தீர்மானங்கள்..!

தேசிய அரசில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும், கைதுவேட்டைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது உட்பட ஐந்து தீர்மானங்களை அதிரடியாக நிறைவேற்றியுள்ளனர் மஹிந்தவுக்கு சார்பான உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஹிந்தவுக்கு விசுவாசமான முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். பஸில் ராஜபக்ஷ உட்பட பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த அணியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதில் பங்கேற்ற அனைவரும் சு.கவின் தலைமைப் பதவியை மஹிந்த ஏற்கவேண்டும். இதற்கு தற்போதைய தலைவர் உடன்படாத பட்சத்தில் மஹிந்த புதியதொரு அரசியல் பயணத்தை மஹிந்த ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தாம் முழு ஆதரவையும் வழங்கி மஹிந்தவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்றும் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குறிப்பாக, சு.கவின் பொதுச் செயலாளர் பதவி வகிக்கும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராகவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சுதந்திரக் கட்சியையும் அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் கடுமையாக விமர்சித்த முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று எடுப்பதற்கு சு.கவின் மத்திய செயற்குழு எடுத்துள்ள முடிவுக்கு எதிராகவும் இந்தக் கூட்டத்தில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடன் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நிதி மோசடி விசாரணை பிரிவினரின்  விசாரணைகளுக்கு எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.