லண்டனில் ஹாபிள் பட்டம்பெற்ற 4 இலங்கையர்கள் - நிரம்பிவழிந்த பள்ளிவாசல்
கடந்த ஞாயிறு 20/02/2016 அன்று ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் - ஹரோ நகரில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் (SLMCC -UK) அல் பலாஹ் கல்வி நிலையத்தின் 08 ஆவது அல் குர்ஆன் மனன பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடை பெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ். குறித்த விழாவில் திரு குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்த 8 ஹாபிள்கள் பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப் பட்டார்கள். அவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு :
(01) Hafiz Muadh Hanook
(02) Hafiz Farzan Faizeen
(03) Hafiz Mirsab Majeedh
(04) Hafiz Ammar Munawar
(05) Hafiz Habibullah Omary
(06) Hafiz Ehtesham Yusuf
(07) Hafiz Unays Adam
(08) Hafiz Ibrahim Omar
குறித்த 08 ஹுப்பாள்களிலும் நால்வர் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்பதோடு இலங்கையை சாராத ஹுப்பாள்கள் நால்வரும் வழமை போலவே இவ்வருடமும் குறித்த விழாவில் பட்டம் சூட்டப் பட்டு கௌரவிக்கப் பட்டதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலாச்சார நிலையத்தின் ( SLMCC -UK ) சேவையானது ஹரோ நகரை சூழ வசிக்கும் அனைத்துலக முஸ்லிம் சமூகத்துக்கும் தனது விரிவான சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
பிரதம அதிதியாக லெஸ்டர் நகரில் இயங்கும் அல் கவ்ஸர் அகாடமி சார்பில் அழைக்கப் பட்டிருந்த அல் உஸ்தாத் ஷெய்க் றியாழுள் ஹக் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஹென்டன் நகர் மஸ்ஜித் இமாம் ஷெய்க் யூசுப் அஹ்மத் ராவத், அல் பலாஹ் கல்வி நிலையத்தின் முன்னாள் உப அதிபர் ஷெய்க் ரிழ்வான் முஹம்மத் மற்றும் விழாவில் கலந்து கொள்ள லிபியா நாட்டில் இருந்து வருகை தந்திருந்த ஷெய்க் அபு அப்திர் ரஹ்மான் ஆகியோர் ஏனைய அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
1000 பேர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இவ் விழாவில் அந் நூர் பள்ளிவாசல் மக்களால் நிரம்பி வழிந்தது. கடந்த ரமழானின் போதும் அல் பலாஹ் கல்விநிலையத்தின் 34 மாணவர்கள் கியாமுல் லைல் எனப் படும் இராத் தொழுகைகளை முன்னின்று நடாத்தியதுடன் அவர்களில் அதிககமானோர் தராவிஹ் தொழுகையையும் நடாத்தியிருந்தனர்.
2006 ஆம் ஆண்டு தனது கன்னி ஹாபிளை பெற்றெடுத்த அல் பலாஹ் கல்வி மையமானது இதுவரை 27 ஹுப்பாள்களை ஈன்றெடுத்திருப்பதன் மூலம் மிகச் சிறப்பான ஒரு அடைவை கண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. மேலும் குறித்த கல்வி நிலையத்தால் பகுதி நேர வகுப்புக்களாக நடாத்தப் பட்டு வரும் ஹிப்ழுப் பிரிவில் குர்ஆனை மனனமிட்டு வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை கல்வியிலும் அதி சிறந்த பெருபேற்றுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த விழாவானது சகோதரர் பாக்கிர் ஆரிப்தீனின் தலைமையில் நடைபெற்றதுடன் சகோதரர் முஹம்மத் நாபிஹ் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கலாச்சார நிலையத்தின் தலைவர் முபாரக் ஜுனைதீன் அவர்கள் தனதுரையில் அல் பலாஹ் கல்வி நிலையம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கலாச்சார நிலையம் ஆகியவற்றின் அன்றாட நடவடிக்கைகள், சேவைகள் பற்றி விளக்கியதுடன் அடுத்து உரை நிகழ்த்திய அஷ் ஷெய்க் யூசுப் அஹ்மத் ராவத் அவர்கள் குர் ஆனின் முக்கியத்துவத்தையும் எமது அன்றாட வாழ்க்கையில் நபிகளாரின் சுன்னாக்களை கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வழியுருத்தினார்கள்.
பிரதம அதிதியாக அழைக்கப் பட்டிருந்த அல் உஸ்தாத் ஷெய்க் றியாழுள் ஹக் அவர்கள் குர்ஆனும் அறிவும் எனும் தலைப்பின் கீழ் குர்ஆனை கற்பதன் முக்கியத்துவத்தை கற்றல், விளங்குதல், செயற்படுத்தல் ஆகிய அதன் முக்கிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியதாக தனதுரையை நிகழ்த்தினார்கள். தனதுரையை தொடர்ந்த ஷெய்க் அவர்கள் அள்ளாஹ்வின் பால் நெருங்குபவர்களுக்கும் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் புனித பணியை செய்பவர்களுக்கும் அள்ளாஹ் அவர்களின் வாழ்கையில் அபிவிருத்தியை வழங்குகின்றான் என சுற்றிக் காட்டினார்கள்.
ஷெய்க் அபு அப்திர் ரஹ்மான் அவர்கள் அல் பலாஹ் கல்வி நிலையத்தின் முன்னாள் ஆசிரியராக பணியாற்றியிருந்ததுடன் குறித்த கல்வி நிலையத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்புச் செய்திருந்தார். 2009, 2010, 2011 ஆகிய வருடங்களில் கல்வி நிலையத்தின் ஒருபகுதி மாணவர்களை அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக மதீனா நகரின் மஸ்ஜிதுந் நபவியிற்கு அழைத்து சென்றதானது மாணவர்களில் பெரும் தாக்கத்தை செலுத்தியிருந்ததுடன் கற்றல் நடவடிக்கைகளின் பின்பு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் உந்துசக்தியாக அமைந்தது.
அள்ளாஹ்வின் அருளால் இன்று பாரிய வளர்ச்சி கண்டுள்ள அல் பலாஹ் கல்வி மையமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் கலாச்சார நிலையத்தினூடாக ( SLMCC -UK ) 2002 ஆம் ஆண்டு ஹரோ பகுதியில் குர்ஆன் மத்ரஸா ஒன்றுடன் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. 2003 ஆம் ஆண்டு அல் ஹாபிழ் முனவ்வர் மற்றும் அஷ் ஷெய்க் அப்துல் ஹலீம் ஜலால் ஆகியோர்களால் குறித்த கல்வி மையத்தில் ஹிப்ழு பிரிவும் ஆரம்பித்து வைக்கப் பட்டது. தற்போது அல் பலாஹ் கல்வி மையமானது 37 ஆசிரியர்களுடனும் 555 மாணவர்களுடனும் தனது பணியை திறம்பட செய்து வருகின்றது. குறித்த மாணவர்களில் 80 பேர் திரு குர்ஆனை மனனமிடும் ஹிப்ழுப் பிரிவில் கற்று வருவதுடன் ஏனையோர் குர்ஆனையும் மார்க்க கல்வியையும் கற்று வருகின்றார்கள்.
விழாவின் இறுதியில் அல் பலாஹ் கல்வி மையத்தின் தலைவர் அல் ஹாபிள் முனவ்வர் அவர்கள் நன்றியுரையை வழங்கினார்கள் ( இரண்டு மாதங்களிற்கு முன்பு இருதய சத்திர சிகிச்சைகளுக்கு உற்படுத்தப் பட்ட ஹாபிள் முனவ்வர் அவர்களுக்கு அள்ளாஹ் வெகு விரைவில் பூரண சரீர சுகத்தை வழங்குவானாக )
தகவல் ஆங்கிலத்தில் : சகோதரரர் இர்ஷாத் வஹ்ஹாப்
தமிழாக்கம் : அஷ் ஷெய்க் அல் ஹாபிள் M Z M ஷபீக்.
Post a Comment