இலங்கை மத்திய வங்கிக்கு, வருடாந்தம் 32 பில்லியன் ரூபா நட்டம்
இலங்கை மத்திய வங்கி வருடாந்தம் 32 பில்லியன் ரூபா நட்டமடைவதாக மத்திய வங்கி பாராளுமன்றத்திற்கு இன்று 25.02.2016 அறிவித்துள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய கோப் குழு முன்னிலையில் இன்று மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுண் மஹேந்திரன் பிரசன்னமாகிய சந்தர்ப்பத்திலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் அரச அதிகாரிகள் 109 வீதத்தால் தமது சம்பளத்தை அதிகரித்துக் கொண்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்காக வருமான வரியை அரசாங்கமே செலுத்த வேண்டும் என அரசாங்கத்திலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோப் குழு மத்திய வங்கி ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் கட்டடங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ஆலோசனை வழங்கியவர்களுக்கு பில்லியன் கணக்கான நிதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுண் மஹேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை கோப் குழு முன்னிலைக்கு பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமத்திபாலவை கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகராக செயற்பட்டுவரும் திலங்க சுமத்திபால, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.
பிரதி சபாநாயகர் ஒருவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் தலைவர் பதவி வகிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் வகையிலேயே திலங்க சுமத்திபால கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.
Post a Comment