"முஸ்லிம் சமூகத்திற்கு, தற்போது எஞ்சியிருப்பது" பகுதி -2
-நஜீப் பின் கபூர்-
இப்போதும் இந்த உள்ளுராட்சி மன்றத்திருத்தங்கள் என்ற இறுதிக்கட்ட நேரத்தில் அதற்கும் நம்மவர் ஒருவர்தான் பொறுப்பான அமைச்சர். அவர் நான் எப்படியும் ஜூலை மாதம் இந்தத் திருத்தங்கள் அனைத்தையும் செய்து முடித்து, தேர்தலுக்கு ஏற்பாடுகளைச் செய்வேன் என்று சாகசம் காட்டுகின்ற பாணியில் பேச, பிரதமர் ரணில் இந்த வருடம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி என்று ஆணி அரைந்திருக்கின்றார்.
ஆனால் பொறுப்பான அமைச்சரோ தொடர்ந்தும் அவர் நிலைப்பாட்டில் அடம் பிடிக்கின்றார். அமைச்சர் மஹிந்த யாப்பா பொறுப்பான அமைச்சர் கூறுகின்றவாறு இந்த வருடம் இந்தத் தேர்தலை எந்த வகையிலும் நடத்த முடியாது. 22 தேர்தல் மாவட்டங்களில் ஒரிரு (4-5) மாவட்டங்களின் திருத்தங்களே தற்போது நடந்திருக்கின்றது. என்று அடித்துக் கூறவதுடன் பொறுப்பான அமைச்சரின் பேச்சு பொறுப்பில்லாதது என்று கூறுகின்றார் போலும்.
நாம் இந்த விடயத்தை அவர் அமைச்சில் துருவிப் பார்த்த போது குறித்த அமைச்சு அதிகாரிகளின் நிலைப்பாடும் துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு உடன்பட்டதாக இல்லை என்பதனை நாம் உறுதியாகக் கூறுகின்றோம்.
பிந்திய தகவல்படி பொறுப்பான அமைச்சர் தனது கடும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பல்டியடித்திருக்கின்றார். எனவே இந்த வருடம் தேர்தல் இல்லை என்பது உறுதி.
போன ரயிலுக்கு பின்னால் ஓடும் நம்மவர்கள்
சில வாரங்களுக்கு முன்னர் தலைநகரில் தேர்தல் எல்லை நிர்னயம் என்ற விடயம் தொடர்பாக ஒரு கூட்டம் போட்டார்கள். இங்கு கடும் வார்த்தைகளில் பேசுகின்றவனுக்கும் ஒரு அழைப்பு கிடைத்திருந்தது.
நல்ல வசதியான மண்டபம் நல்ல சாப்பாடு. அங்கு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் பேசவேண்டிய விடயங்களை காலங் கடந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதிச் சந்தர்ப்பம் சில நாட்கள் மட்டும் இருக்கின்றது. அவசரமாக காரியம் பார்க்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அங்கு உபதேசம் பண்ணினார்கள்.
சமூகமே எட்டிப் பார்க்காத ஒரு விடயத்தை தூக்கத்தில் இருந்து எழுந்தவர்கள் போலாவது இவர்கள் காரியம் பார்க்கின்றார்கள் என்று ஒரு சின்ன சந்தோசம் மனதில் ஏற்பட்டாலும். எல்லை நிர்ணய விடயத்தில் இறுதி சந்தர்ப்பம், ஒரிரு நாட்கள் இதற்காக இருக்கின்ற நேரத்தில் காரியத்தை முடிக்க துணைக்காக சில புள்ளி விபரங்களைத் தகவல்களை ஏற்பாட்டாளர்கள் கொடுத்தார்கள். அவை 2001 ஆண்டு குடித் தொகை தொடர்பான புள்ளி விபரங்கள். ஆனால் 2015 புள்ளி விபரங்கள் கூட தற்போது வெளியாகி இருக்கின்றது. நம்மிடமும் இருக்கின்றது.!
அங்கு பல பேர் வளவாளர்களாக வந்திருந்தார்கள். நாம் முன் சொன்ன எல்லை நிர்னயக் குழு உறுப்பினர் நஹ்யாவும் இருந்தார். அன்று நாங்கள் இந்த எல்லை நிர்னயம் தொடர்பான தகவல்களைப் பெற இந்த நஹ்யாவை நாடினோம், அவர் இது பற்றிய எந்தத் தகவல்களையும் எமக்குத் தரவில்லை என்று நஹியாவின் முகத்திற்கே இவன் கூறிய போது சட்டத்தரணியான ஒரு நண்பரும் பக்கத்தில் நின்றார். அந்த சட்டத்தரணியும் சபையில் தனது மாவட்டம் சார்பில் பேசும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று அன்று சொன்ன எல்லை போடுபவர்! என்னதான் இருந்தாலும் அரசியல், அதிகாரம், மேலாண்மை என்று ஒன்று நடைமுறையில் இருக்கின்றது என்று சுருதியை மாற்றி அங்கு பாடினார்.
அங்கு நடந்த அடுத்த சுவாரஷ்யமான சம்பவம்! வன்னியிலும், புத்தளத்திலும் இந்த எல்லை நிர்னயத்தை நல்லபடியாக செய்து கொண்டார்கள் அதற்கு அமைச்சர் ரிஷாடும், பாயிசும் காரணம் என்று நஹ்யா சான்றிதழ் கொடுத்து, மு.காவைக் குறைபட்டுக் கொண்டார். அந்த விடயங்களுக்கு அவர் செய்த பங்களிப்புப் பற்றியும் சொன்னார். அதற்குப் பின்னால் பேசிய புத்தளத்து சகோதரர் நியாஸ் அண்மைக் காலம் வரை புத்தளத்தில் ஐந்து ஆறு பிரதேச சபைகள் வரை முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது நிலமையை தலைகீழாக மாற்றி இருக்கின்றார்கள். புத்தளம் நகர சபையைத் தவிர அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டது என்று ஒப்பாறி வைத்த போது, எல்லை போட்டவர் வாயடைத்து நின்றார்.
தீர்வு என்ன?
குற்றச்சாட்டுக்களை எழுப்பலாம், நையாண்டியாகப் பேசலாம் எழுதலாம். என்றாலும், இதனால் சமூகத்தின் அவலங்கள் ஒரு போதும் தீராது. அன்று எல்லை நிர்னயம் பற்றிய கூட்டத்திற்கு 125 பேர்வரை எதிர் பார்த்து ஆசனங்கள் போட்டிருந்தார்கள் .85 பேர்வரை அங்கு அமர்ந்திருந்தார்கள். ஏற்பாட்டாளர்களுக்கு கூட்டம் வெற்றி என்ற நிலை.
ஆனால் ஏற்பாட்டாளர்களைத் தவிர வந்தவர்களில் 95 சதவீதமானவர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக களமிறங்க இருப்பவர்கள். அவர்கள் இவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள் என்று தகவல் பெற வந்தவர்கள். அல்லது தனது நிலையைத் தெரிந்து கொள்ள வந்தவர்கள். அவர்களில் அனேகம் பேருக்கு இதில் எந்தவிதமான அனுபவங்கலோ அறிவும் கிடையாது என்பது தெளிவாகத் தெரிந்தது.
இந்த எல்லை நிர்னய விடயத்தில் நிச்சயமாக முஸ்லிம் சமூகம் பாரிய இழப்பை சந்திக்க இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். இந்த விடயத்தை கையாள்வதற்குத் தேவையான அனுகுமுறைகளையோ ஆளணியையோ முஸ்லிம் சமூகம் இனம் கண்டு கொள்ளவில்லை. எனவே வரைபடங்கள், தகவல்கள், புள்ளி விபரங்கள் இல்லாமல் இந்த விடயத்தில் நல்ல அறுவடைகள் முஸ்லிம் சமூகத்திற்குக் கிடையாது. கூட்டம் போட்டு சாப்பாடு கொடுத்து மண்டபங்களை நிறைப்பதை விட காரியம் பார்க்கக்கூடிய ஒரு 10-15 பேர் இருந்தால் சாதிக்கலாம். இப்படித்தான் மலையக சமூகம் இந்த காரியத்தை திறம்பட செய்து முடித்தது. ஆனாலும் உயிர் ஊசலாடுகின்ற கடைசி கட்ட நேரம்தான் முஸ்லிம் சமூகத்திற்கு இதில் தற்போது எஞ்சி இருக்கின்றது. அவர்கள் இன்றும் இது விடயத்தில் வெறும் கைகளுடன் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
சமூகம் சார்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் என்ன? அவை உறுப்படியாக நடந்திருக்கின்றதா? இன்னும் பார்க்க வேண்டிய வேலைகள் என்ன? கடுமையான சேதங்கள் எங்கு நடந்திருக்கின்றது.?
இந்தப் பணியை திறம்பட குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்யக் கூடிய ஆளணியை இனம் காண்பது-திரட்டுவது எப்படி? இதற்குத் தேவையான வளங்களை கொடுப்பது யார்.? இவைதான் இன்னும் சில நாட்களுக்குள் தீர்மானிக்க வேண்டிய முதல் விடயம். கடினமாக உழைத்தால் கடைசி நேரத்திலாவது சேதங்களைக் குறைக்கலாம்.
மிகவும் முக்கிய விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களும், இதற்கான கவனயீர்ப்பை ஏற்படுத்தக் கூடியவர்களும் காலம் தாழ்த்தாது செயற்படுமாறு பணிவாய் கேட்டுக் கொள்கிறோம். நஜீப் பின் கபூருக்கு எமது நன்றிகள்.
ReplyDelete