கட்டார் விமானத்தில் 25 பேருடன் ஜேர்மன் பறந்தார் மைத்திரி - ஒஸ்ரியாவுக்கும் செல்வார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு ஜேர்மனி நோக்கியும் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஒஸ்ரியா நோக்கியும் இன்று (15) முற்பகல் பயணமானார்.
ஜனாதிபதி அவர்கள், கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR 655 விமானத்தில் நாட்டிலிருந்து புறப்பட்டார்.
ஜேர்மன் அதிபர் எஞ்சலா மர்கல் அவர்களின் அழைப்பின்பேரில் இலங்கைக்கும் ஜேர்மனிக்குமிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் ஜேர்மனி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் இவ்விஜயத்தின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருளாதார மற்றும் அபிவிருத்தி அனுகூலங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜேர்மனிக்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை வரவேற்பதற்கான ஒரு விசேட வைபவம் ஜேர்மன் அதிபர் எஞ்சலா மர்கல் அவர்களின் தலைமையில் 17ஆம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி அவர்களுக்காக ஜேர்மன் அரசு விசேட அணிவகுப்பு மரியாதையினை செலுத்தவுள்ளது.
ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி அவர்கள், ஜேர்மன் பாராளுமன்றத்தின் முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள், ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் மற்றும் ஜேர்மன் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஆகியோரை சந்தித்து இரண்டு நாடுகளினதும் பொருளாதார ஒத்துழைப்பினை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
ஜேர்மனிக்கான தனது மூன்று நாள் விஜயத்தை பூர்த்தி செய்யும் ஜனாதிபதி அவர்கள், 19ஆம் திகதி ஒஸ்ரியா நோக்கி பயணமாகவுள்ளார்.
ஒஸ்ரியாவுக்கான தனது இரண்டுநாள் விஜயத்தின்போது ஒஸ்ரிய ஜனாதிபதி ஹெயின்ஸ் பிஸ்கர் அவர்கள் உள்ளிட்ட அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
அவ்வாறே ஜனாதிபதி அவர்கள் ஒஸ்ரிய வர்த்தக சங்கத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Post a Comment