25 ஆண்டுகளில் 2,297 பத்திரிகையாளர்கள் படுகொலை
கடந்த 25 ஆண்டுகளில் உலகெங்கிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் 2,297 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐ.எஃப்.ஜே.) தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர்கள் மிக அதிகமாக கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் இராக் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4-ஆம் இடத்திலும், இந்தியா 7-ஆம் இடத்திலும் உள்ளன.
இதுகுறித்து சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் கூறப்பட்டதாவது:
வெடிகுண்டு தாக்குதல்கள், திட்டமிட்ட கொலைகள், இருதரப்பு துப்பாக்கிச்சூட்டின்போது பலியாவது, போர் பகுதிகளில் இருந்து கடத்தப்படுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். மேலும், குற்றவாளிகளும், ஊழல் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களைக் கொலை செய்கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் உலகெங்கிலும் 2,297 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 2006-ஆம் ஆண்டில் 155 பத்திரிகையாளர்களும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 112 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் மிக அதிகமாக கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் இராக் (309) முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக பிலிப்பின்ஸ் (146), மெக்ஸிகோ (120), பாகிஸ்தான் (115), ரஷியா (109), அல்ஜீரியா (106), இந்தியா (95), சோமாலியா (75), சிரியா (67), பிரேசில் (62) உள்ளன.
அதேவேளையில், 10-இல் ஒரு கொலை குறித்துதான் விசாரணை நடைபெறுகிறது. பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதில் ஏற்படும் தோல்வியானது, அவர்களுக்கு எதிரான வன்முறையை மேலும் தூண்டுவதாக அமைந்துவிடுகிறது என்று ஐ.எஃப்.ஜே. தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகம் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட பிரான்ஸ் நாட்டின் வாரஇதழான "சார்லி ஹெப்டோ' பத்திரிகையின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதில் இஸ்ரேல் எத்தனையாம் இடம். இஸ்ரேலை பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்பது சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பின் எழுதப்படாத விதி
ReplyDelete