சவூதி அரேபியாவில் 20 நாடுகள் மேற்கொள்ளும், கூட்டு ராணுவப் பயிற்சி
சவூதி அரேபியாவில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொள்ளும் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு ராணுவப் பயிற்சியில் பாகிஸ்தான் பங்கேற்றுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சவூதி அரேபியாவில் நடைபெறும் மிகப் பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கூட்டு ராணுவப் பயிற்சியில் பாகிஸ்தான் பங்கேற்கிறது.
பாகிஸ்தானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் நீண்ட கால ராணுவ ஒத்துழைப்பு இருந்து வருகிறது.
இந்த கூட்டு ராணுவப் பயிற்சியின்போது பாகிஸ்தானும், சவூதி அரேபியாவும் ஒருங்கிணைந்து பல்வேறு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்கின்றன.
சவூதி அரேபியப் படையினருக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
பாகிஸ்தானிலும் சவூதி அரேபிய வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. "வடக்கின் இடி முழக்கம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் தரைப்படை, விமானப் படை, கடற்படை ஆகிய மூன்றும் பங்கேற்கின்றன.
இந்தப் பயிற்சியில், 5 வளைகுடா நாடுகள், சாட், எகிப்து, ஜோர்டான், மலேசியா, மொராக்கோ, பாகிஸ்தான், செனகல், துனீசியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போர்ப் பயிற்சிக்காக பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் படை வீரர்கள் சவூதி அரேபியாவில் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிரியாவுக்குள் நுழைந்து அவர்கள் தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சத்தை எழுப்பியதாக தகவல்கள் தெரிவித்தன.
ஏற்கெனவே, சவூதி அரேபியா அமைத்துள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான 34 இஸ்லாமிய நாடுகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.
எனினும், தங்களது ராணுவ வீரர்கள் அன்னிய மண்ணில் போரிட அனுப்பப்பட மாட்டார்கள் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Post a Comment