Header Ads



‘வலி நிவாரணிகளை (pain killer) நம்ப வேண்டாம்"

தலைவலி, உடல் வலி, முதுகுவலி என வலிகளால் அவதிப்படுகிற பலரும் வலி நிவாரணிகளையே தேடி ஓடுகிறோம். உடனடியாக வலி குறைந்தால் போதும் என்று நிம்மதி அடைகிறோம். ஆனால், ‘வலி நிவாரணிகளால் பிரச்னை தீர்ந்ததாக நினைக்காதீர்கள். ஆபத்து  புதிதாகத் தொடங்குகிறது’ என்றே எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 

‘‘ஆமாம்... நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கும் பெரிய தவறுகளில் ஒன்று வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டிருப்பது’’ என்கிறார் மருந்துகளின் முதல்நிலைப் பரிசோதகரும் நீரிழிவு சிறப்பு மருத்துவருமான பரணிதரன்.

‘‘வலியைக் கொல்லும் மருந்துகள் என்ற அர்த்தத்திலேயே Pain killer என்கிறோம். இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. Opioid analgesics என்கிற வலி நிவாரணிகளை மருத்துவரே பரிந்துரைப்பார். பெரிய மருந்துக்கடைகளில், மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்பதால், இதனால் பெரும்பாலும் பிரச்னைகள் ஏற்படுவது இல்லை. ஆனால், மருந்துக்கடைகளில் மக்கள் நேரடியாக வாங்கும் வலி நிவாரணிகளான Non Steroidal Anti Inflammatory Drugs (NSAID) வகைதான் பிரச்னைகளை உருவாக்குகின்றன. 

விபத்துகளில் காயம் படுகிற நேரங்களிலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி தெரியாமல் இருப்பதற்காகவும், வலி தாங்க முடியாமல் அவஸ்தைப்படுகிற புற்று நோயாளிகளுக்காகவும் வலி நிவாரணிகள் பயன்படுகின்றன. அதை முறையாக, அளவாகப் பயன்படுத்த வேண்டும். அதுவும் குறைவான நாட்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் பயன்படுத்தச் சொல்வார்கள். 

வலி நிவாரணிகள் உடனடியாக சிறுநீரகங்களைப் பாதிக்கும் அபாயம் கொண்டவை. அதனால், சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கோ, சிறுநீரக நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கோ மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள். தொடர்ச்சியாக வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு என்பதால் குறைவான நாட்களுக்கே வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துவார்கள்.

இது போன்ற காரணங்களால்தான் மருத்துவர்கள் எல்லோருக்கும் வலி நிவாரணிகளைப் பரிந்துரைத்து விடுவதில்லை. அப்படி வலி நிவாரணிகளைப் பரிந்துரைத்தாலும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும் என்பது உள்பட பல வழிமுறைகளையும் பின்பற்றச் சொல்வார்கள்’’ என்பவர், வலி நிவாரணிகள் எப்போது பிரச்னையாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘மருந்துக்கடைகளில் சென்று கை, கால், உடல் வலி, வயிற்று வலி என்று நாம் கேட்டால் வலி நிவாரணிகளைத்தான் தருவார்கள். ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஸ்டீராய்டு மருந்துகளும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக் கூடாத ஆபத்து கொண்டவையே. இங்குதான் பிரச்னை தொடங்குகிறது. 

வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதில் ஆண்களைவிட பெண்களே முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதும் ஒரு கவலைக்குரிய செய்தி. ஒற்றைத் தலைவலி, மாதவிலக்கு, மூட்டுவலி, கை, கால் குடைச்சல் போன்ற பிரச்னைகளுக்குப் பெண்களே அதிகம் வலி நிவாரணிகளைத் தேடுகிறார்கள். மருத்துவரிடம் சென்றால் செலவாகும், பரிசோதனைகள் செய்யச் சொல்வார்கள் போன்ற பொருளாதாரம் சார்ந்த விஷயங்களையும் யோசித்துக் கொண்டு தினமும் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறவர்கள் உண்டு.  

வலி நிவாரணிகள் தற்காலிகத் தீர்வைக் கொடுத்தாலும், நாளடைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையிலோ, வேறு ஏதேனும் பெரிய அபாயத்திலோ கொண்டு சென்றுவிடலாம். அதனால், ஆண், பெண் யாராக இருப்பினும் நாள்பட்ட வலி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. இப்போது அரசு மருத்துவமனைகளிலேயே பல துறைகள் வந்துவிட்டன. சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதால் ஆலோசனை பெற்றுக் கொள்வது எளிதானதுதான்.’’

வலி நிவாரணிகளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? 

‘‘குடலைப் பாதுகாக்கும் Mucus membrane என்ற லேயரை அரித்து அல்சரை வலி நிவாரணிகள் உண்டாக்கும். வயிறு எரிச்சல், வயிறு புண்ணாவது போன்ற பிரச்னைகளும் ஏற்படும். அதற்குப் பிறகு நெஞ்செரிச்சல், வாந்தி என்று சாதாரணமாக ஆரம்பிக்கிற அறிகுறிகள் நாளடைவில் இரைப்பை அழற்சி, பக்கவாதம், மாரடைப்பு, கல்லீரல், சிறுநீரக செயலிழப்பு என்று பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். என்ன வகையான வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகிறார்கள், எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து விளைவுகளும் மாறும். இந்த வலிநிவாரணிகளில் பாதுகாப்பானவை என்று எதுவும் இல்லை. 

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், தவிர்க்க முடியாத நிலையில் மருத்துவர் வலி நிவாரணிகளைப் பரிந்துரைத்தால்கூட தேவையான விளக்கத்தை கேட்டுக் கொள்ள வேண்டும். சந்தேகம் கேட்கத் தயங்க வேண்டியதில்லை. நம் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் விளக்கம் கேட்கிற உரிமை நோயாளிகளுக்கு உண்டு. ‘நான் கொடுக்கிறதை சாப்பிடுங்க, கேள்வி கேட்காதீங்க’ என்று கறாராக மருத்து வர்களும் சொல்லக் கூடாது. நோயாளியின் உடல்நிலையைப் பல விதங்களிலும் கவனமாகப் பரிசீலித்தே மருத்துவர்களும் வலி நிவாரணிகளைப் பரிந்துரைக்க வேண்டும். 

இந்தப் பிரச்னையில் மருந்துக்கடைக்காரர்களுக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. வலி நிவாரணிகளை நேரடியாக வாங்கக் கூடாது என மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். வலி நிவாரணிகளை ‘ஓவர் தி கவுன்டர்’ முறையில் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்’’ என்கிறார் டாக்டர் பரணிதரன். ‘எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள். எது சரியானதோ அதையே செய்யுங்கள்’ என்பது கன்பூஷியஸின் பிரபல வாசகங்களில் ஒன்று. தற்காலிகமாகத் தீர்வு கிடைத்தால் போதும் என்று நமக்கு வசதியான வலி நிவாரணிகளைத் தேடுவதைத் தவிர்த்து, இனியேனும் சரியானதைச் செய்வோம்!

மருந்துக்கடைக்காரர்கள் மருத்துவர்கள் அல்ல !

மருத்துவர்கள் எல்லோருக்கும் வலிநிவாரணிகளைப் பரிந்துரைப்பதில்லை. நோயாளிக்கு உடல்ரீதியாக ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்று பார்த்துத்தான் கொடுப்பார்கள். நோயின் முந்தைய நிலை என்னவென்று ஹிஸ்டரியையும் கவனமாகப் பார்ப்பார்கள். மருந்துக்கடைகளில் இவற்றையெல்லாம் சரிபார்த்துக் கொடுக்க முடியுமா என்ன? மருந்துக்கடைகளில் இருப்பவர்களுக்கு மருந்துகளைப் பற்றித் தெரியாதா என்றும் பலரும் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். மருந்துகளின் தன்மை, அதன் பக்கவிளைவுகள், மருந்துகளைப் பயன்படுத்தும் விதம் பற்றி மருத்துவர்களுக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். 

சமீபத்தில், பாரசிட்டமால் மற்றும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை சுய மருத்துவமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று Indian Medical Association மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த மருத்துவரான கே.கே.அகர்வால், ‘‘ஆஸ்பிரின் மாத்திரைகளால் குழந்தைகளுக்குக் குடல் பகுதிகள் பாதிப்பதோடு மூளை மற்றும் நுரையீரல் பகுதியை சுருங்க வைக்கும் Reye’s syndrome என்ற அபாயகரமான நோயையும் ஏற்படுத்துகிறது’’ என்று கூறியிருக்கிறார். பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தி வரும் பாரசிட்டமால் கல்லீரலைப் பாதிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மது அருந்திவிட்டு பாரசிட்டமால் எடுத்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகலாம் என்று கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாமே…

உடலில் ஏதோ பிரச்னை இருப்பதால்தான், அது வலியின் மூலம் அறிகுறியாக தன் குறைபாட்டை நம்மிடம் கூறுகிறது. ஆனால், அடிப்படையான பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதை உணராமல் மேலோட்டமாக வலியை மட்டுமே தீர்த்தால் போதும் என்று வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமானது அல்ல. 

காரணம், வலி நிவாரணிகள் நம் மூளைக்குத் தெரியாமல் வலியை மறைக்கிறதே தவிர, அடிப்படையான பிரச்னையை சரி செய்வதில்லை. இது ஒருவகையில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற செயல். ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாவது, ஆர்த்ரைட்டிஸ், எலும்பு தேய்மானம், முதுகுத்தண்டுவடத்தில் டிஸ்க்குகள் விலகி இருப்பது என்று வலிகள் ஏற்பட மருத்துவரீதியாகப் பல காரணங்கள் உண்டு. 

ரத்தப்பரிசோதனை, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்து பிரச்னை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். அதனால், தொடர்ந்து வலிகளால் அவதிப்படுகிறவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மாதவிலக்கு நேரத்தில் அதிக வலி இருக்கும் பட்சத்தில் மகப்பேறு மருத்துவரை அணுகி பெண்கள் ஆலோசனை பெற்றுக் கொள்வதே சரியானது!

1 comment:

  1. Thanks Dr. & Jaffna muslim. excellent information. all should read....

    ReplyDelete

Powered by Blogger.