O/L பரீட்சை எழுதிய மாணவர்கள், A/L இல் எதை தெரிவுசெய்வது..?
-முஸ்தபா முர்ஸிதீன்,
சிறீஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்-
2015ல் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எழுதிய மாணவர்கள் உயர்தரத்துக்கு எந்த துறையை தெரிவு செய்வது பொருத்தம் என்று எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் அது தொடர்பான கருத்துக்களையும், வழிகாட்டுதல்களையும் பகிர்ந்து கொள்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.
உயர்தர துறையை தேர்வு செய்வது என்பது ஒரு பரீட்சைக்கு ஆயத்தமாவதற்கான துறையை தெரிவு செய்கிறோம் என்பதை விடவும் தங்கள் வாழ்க்கையில் எந்த திசையில் பயணித்து, பணியாற்ற போகிறோம் என்பதை தீர்மானிக்கும் ஒரு தருணம் என்பதே உண்மை. ஆனால் மாணவர்கள் தங்கள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து உயர்தர துறையை தேர்வு செய்வது என்பது பொதுவாக எல்லோரும் விடும் தவறாக உள்ளது. சரியான வழிகாட்டுதலும் அத்துறை தொடர்பான புரிந்துணர்வும் இல்லாமல் அல்லது பெற்றோரின், குடும்பத்தின் வற்புறுத்தலால் தெரிவு செய்யப்படும் துறைகள் இறுதியில் தோல்விக்கே வழிவகுக்கும்.
மாணவர்கள் உயர்தர துறை ஒன்றை தெரிவு செய்யும் போது பின்வருவனவற்றை கருத்திற் கொள்வது மிக முக்கியமானது.
1. துறை தொடர்பான அவர்களது விருப்பம்: துறை தொடர்பான விருப்பம் எனும் போது எதிர்காலத்தில் அத்துறை தொடர்பாக வரக்கூடிய தொழில்வாய்ப்புக்களில் பணியாற்றக்கூடிய விருப்பமும் உள்ளடங்கும்.
2. துறை சார்ந்த அவர்களது இயலுமை: இதனுல் அவர்களது க.பொ.த (சா/த) பெறுபேறு, குடும்ப வருமான நிலை என்பன உள்ளடங்கும்.
துறை தொடர்பான விருப்பமும், இயலுமையும் பொருந்தி வர உள்ள துறைகளை தெரிவு செய்தோரே இன்று சாதனையாளர்களாக பெயர் பதித்துள்ளனர்.
அத்தோடு இன்றைய கால கட்டங்களில் மாணவர்கள் அவர்களுக்காக நடத்தப்படும் வழிகாட்டல் கருத்தரங்குகள், ஆலோசனை பெறுவதற்காக சந்திக்கும் நபர்கள் தொடர்பிலும் புத்திசாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். யார் எதை சொன்னாலும் ஏற்று உடனடியாக துறை தொடர்பான தீர்மானத்துக்கு வந்து விடாது, அக்கருத்துக்களை ஒன்றுக்கு இரண்டு தடவை தர்க்கரீதியாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இத்தோடு சம்பந்தப்பட்ட நபர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளை மட்டுமே தொழில் வாய்ப்புக்கள் கொண்ட சிறந்த துறைகளாக விளக்கிடவும், ஏனைய துறைகளை இழிவாக நோக்கிடவும் வாய்ப்புக்கள் அதிகம்; அதுதான் உண்மையும் கூட. ஆனால் சிறந்த துறையை தேர்வு செய்வதை விட மாணவர்கள் பொருத்தமான துறையை தெரிவு செய்வதிலேயே அவர்களின் வெற்றி தங்கியுள்ளது.
இவ்வாறான வழிகாட்டல் கருத்தரங்குகளை நடத்துபவர்களும் தங்கள் சுயலாபங்களுக்காக, தாங்கள் கற்பிக்கும் துறைகளுக்கு மாணவர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக வளர்ந்துவரும் அம்மாணவர்களை பொருத்தமற்ற துறைகளுக்கு வழிகாட்டி அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாது, மிகப்பொருத்தமான துறைகளுக்கு அவர்களை வழிநடத்துவது உங்கள் பொறுப்பும், கடமையும் ஆகும்.
குறிப்பாக பெண் மாணவிகள் தங்கள் விருப்பம், இயலுமையுடன் சேர்த்து தங்கள் பாதுகாப்பையும், மார்க்கவரையரைகளையும் உறுதிப்படுத்தக் கூடிய துறைகளை தேர்வு செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எமது சமூகம் எவ்வாறான துறைகளில் பெண்களின் பங்களிப்புக்களை எதிர்பார்த்து நிற்கின்றதோ அந்த துறையினூடாக தங்களை வளர்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பாகும். ஏன் இந்த துறையில் எனக்கு முடியாது என சிந்திப்பதை விடுத்து இந்த துறையை கொண்டு என்னால் என்ன பங்களிப்பை சமூகத்துக்கு வழங்க முடியும் என சிந்திப்பது பெண்களை எதிர்காலத்தில் சமூகத்திற்கு பயனுள்ள துறைகளில் சேவையாற்ற வழிவகுக்கும். ஆண்களின் பங்களிப்புக்களே போதும் என்று ஒரு சில துறைகள் இருக்க இன்னும் சில துறைசார்ந்த தொழில்வாய்ப்புக்கள் பெண்களின் பங்களிப்பை எதிர்பார்த்திருப்பதை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, பெற்றோர்கள் தங்கள் பெயர் புகழுக்காக தாங்கள் விரும்பும் துறைகளை தங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்காது அவர்களின் எதிர்காலத்துக்கும், அவர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குகளுக்கு பொருத்தமான துறையை தெரிவு செய்வதற்கு வழிவிட வேண்டும். மட்டுமல்லாது அவர்கள் எதை தெரிவு செய்தாலும் பரவாயில்லை என்றும் இருந்து விடாதீர்கள். அதுவும் அவர்களின் எதிர்காலத்திற்கு பொருத்தமில்லாமல் அமைந்துவிடலாம். எனவே பெற்றோர் எந்த இடத்தில் உங்களது வழிகாட்டுதலும் தலையீடும் தேவையோ அவ்விடத்தில் வழிகாட்டிட தவறிவிடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் திறன்களையும், இயல்புகளையும் அறிந்த நீங்கள், நடு நிலையாய் சிந்தித்து அவர்களை செம்மை படுத்திடுங்கள்.
எனவேதான் மாணவர்களே! நாளைய எம் சமூகத்தின் தலைவர்களே! உயர்தர துறையின் பெறுமதியை உணர்ந்து ஏற்கனவே துறைகளை தெரிவு செய்தோர் மீண்டும் ஒரு கனம் பொருத்தமான துறையைத்தான் தெரிவு செய்துள்ளோமா என சிந்திப்பதோடு, இதுவரை எதை தெரிவு செய்வது என்பதை எதிர்பார்த்திருந்தோர் மேற்குறிப்பிட்டவற்றை கருத்திற் கொண்டு மிகச்சிறந்த துறையை தெரிவு செய்து அதில் சாதனையாளர்களாக பெயர் பதித்திட வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்...!!
Post a Comment