Header Ads



IS தீவிரவாதிகளுடன் இலங்கையர் உள்ளது தொடர்பில், எனக்கு தகவல் கிடைக்கவில்லை - மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அக்கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமன்றி அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிப்பவர்கள் மனிதர்களே. இதனால் கட்சிகளில் பிரச்சினைகள் இருப்பது இயல்பு. பிரச்சினைகள், முரண்பாடுகள் இல்லாத கட்சிகள் உலகில் எங்கும் கிடையாது. பிரச்சினைகளின் வகை மற்றும் பாரதூரம் வித்தியாசமானதாக இருக்கலாம். நமது பாராளுமன்றத்தில் பெருமளவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மத்தியிலும் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். இவற்றை நாம் பூதாகரமாக நோக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கட்சி என்ற வகையில் பேச்சு வார்த்தைகள் மூலம் இவற்றை சுமுகமாக்கலாம். அதேவேளை, கட்சிக்குள் அனைவருக்கும் சுதந்திரம் அவசியம். அவர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை, சுதந்திரம் கொண்டவர்கள், கட்சிக்குள் ஜனநாயகம் அவசியம். இதனால் கட்சி என்ற ரீதியில் அதன் அங்கத்தவர்கள் கருத்துக்களை வெளியிடலாம். சர்ச்சைக்குரிய விடயங்களும் இதில் அடங்கலாம்.

கேள்வி: - அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இது பாதிப்பு ஏற்படுத்தாது என நினைக்கின்றீர்களா?

பதில்: இல்லை, அவற்றை நாம் பெரிய விடயமொன்றாகக் கருதவில்லை. எந்த பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் நிவர்த்திக்க முடியும். அரசியல் கட்சி என்பது மன்னர் ஒருவரது உரிமையல்ல. கருத்துச் சுதந்திரமும் பணியாற்றும் சுதந்திரமும் அவர்களுக்குள்ளது. கட்சியில் ஜனநாயகம் முக்கியமானது. இன்று கட்சியில் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. அவர்களது கூற்றுக்கள் தர்க்க ரீதியானதாகவும் காணப்படுகின்றன. இது கட்சியில் இருப்பது இயல்பே.

கேள்வி: - எதிர்வரும் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிய முடிகிறது. அது பற்றி சற்று கூற முடியுமா?

பதில். - அது பற்றி இப்போதைக்கு தீர்மானமில்லை தேர்தலின் போதே தேவையான வகையில் தீர்மானங்கள் செயற்பாடுகள் அமையும்.

கேள்வி: ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பில் இலங்கையர்களும் இடம்பெறுவதாகக் கூறப்படுவது தொடர்பில் என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில்: அது பற்றி எனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

கேள்வி: உங்கள் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் மீதே அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது என்ற தெற்கு மக்களின் ஆதங்கம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்:அவ்வாறு ஒன்றுமில்லை. கடந்த ஜனவரி மாதம் தேர்தலில் அறுபத்திரெண்டரை இலட்சம் வாக்குகளை நான் பெற்றேன். அதனையடுத்து ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளோம். இதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அரசாங்கத்துக்கு எதிரான சிலரின் கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அப்படியொரு பிரச்சினையும் இல்லை.

கேள்வி: - மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது எதிர்கொள்ள நேரும் எதிர்ப்புகள் பற்றி...

பதில்: - எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த மக்களுக்கு அவர்களது காணிகளை வழங்க வேண்டும் என்று. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது முறையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காணியை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும். அவர்களின் வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் தொடர்பில் நாம் கவனமெடுக்க முடியாது. இதனை நாம் செயற்படுத்துவது முக்கியம்.

கேள்வி: மீள்குடியேற்ற பிரச்சினை இழுபறி நிலையிலேயே கடந்த காலங்களில் இருந்தது. அது தொடர்பில் பல விமர்சனங்களும் எழுகின்றன. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: விமர்சிப்போர் விமர்சிக்கட்டும் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். வேலையில்லாமல் வெறுமனே திரிவோரே விமர்சிப்பர். நாம் வேலை செய்ய வேண்டும். அரசாங்கம் சும்மா இருக்க முடியாது அது செயற்பட வேண்டும். செய்ய வேண்டியவற்றை அது செய்யும்.

கேள்வி: - எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பில் கூற முடியுமா?

பதில்: - தொகுதிகள் பிரித்து நிர்ணயிக்கப்பட வேண்டியுள்'ளது. 2000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றைச் சரி செய்வதற்கு குறைந்தது மூன்று மாத காலமாவது எடுக்கும். அந்த நடவடிக்கை முடிவுற்றதும் தேர்தலை நடத்துவதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் வெற்றி தோல்வியை மக்களே தீர்மானிப்பர்.

1 comment:

Powered by Blogger.