மஹிந்தவிற்கு செல்வாக்கு குறையவில்லை - அமைச்சர் தயாசிறி ஒப்புதல்
கிராம மட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அதிகளவு ஆதரவு காணப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்பில் அமைச்சா தயாசிறி ஜயசேகர மேலும் கருத்து வெளியிடுகையில்,
நாட்டினதும், கட்சியினரும் தலைவராக மைத்திரிபால சிறிசேன திகழ்கின்றார் என்ற போதிலும், கிராம மட்டத்தில் மஹிந்தவிற்கு அதிக செல்வாக்குக் காணப்படுகின்றது.
இந்த இருவரும் இணைந்து ஒரு பயணத்தை ஆரம்பித்தால் கட்சிக்கு பாரியளவில் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க கடமையாற்றிய போதிலும், பிரபல்யமான தலைவராக சஜித் பிரேமதாச திகழ்ந்தார்.
இந்த இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றதனால் ஒர் நிகழ்ச்சியில் கூட ஒன்றாக அமர்ந்து இருக்காத சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
எனினும், விரும்பியோ விரும்பாமலோ இருவரும் ஒன்றிணைந்து கடந்த தேர்தலின் போது செயற்பட்டதனால் ஏனைய கட்சிகளை விடவும் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன் போது பிரபல்யமான தலைவரான சஜித் பிரேமதாச ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தார்.
இதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியடைச் செய்ய வேண்டுமாயின் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவும் பிரபல்யமான தலைவரான மஹிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment