Header Ads



தப்பிக் கொள்வதற்கு, ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர் - அநுரகுமார

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி அதனூடாக புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரதமர் முன்வைத்திருக்கும் பிரேரணையானது பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும், இது தொடர்பாக நடத்திய கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் பிரதமர் தன்னிச்சையாக நடந்துகொண்டிருந்ததாகவும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

தற்பொழுது நாட்டில் காணப்படும் சமூக முறையை பாதுகாக்கும் வகையிலேயே அரசியலமைப்பு அமையவேண்டும். அதனைவிடுத்து சமூக முறையை பாதிக்கும் வகையில் அரசியலமைப்பு அமையக் கூடாது. நாட்டின் சகல பிரச்சினைக்கும் அரசியலமைப்பே காரணம் எனக் கூறி தப்பிக் கொள்வதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

சமூக மற்றும் பொருளாதார முறையை மாற்றியமைக்காமையே அதிகமான பிரச்சினைக்குக் காரணமாகும். தற்பொழுது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு பழமையானது. இதனை மாற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லையென்றும் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

இருந்தபோதும் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது. தான் நினைத்தபடி அரசியலமைப்பை தயாரிப்பதற்கு பிரதமர் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். சகல தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சகலரின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான அரசியலமைப்பை தயாரிப்பதற்கு ஜே.வி.பி ஆலோசனைகளை முன்வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பை கொண்டுவர முயற்சித்தால் அதனை எதிர்ப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.