Header Ads



ஹக்கீம் வழங்கப்போகும் வரம்..!

(சுலைமான் றாபி) 

நல்லாட்சி அரசின் கீழ் ஐக்கிய தேசிய முன்னணியால் முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப் பட்டியல்களுள் ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் நேற்றையதினம் (19) இராஜினாமா செய்துள்ள நேரத்தில் கிட்டத்தட்ட புதிதாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக விரைவில் நியமிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியுள்ள வேளையில், அதற்குத்தகுதியானவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. உண்மையில் இந்த கேள்விக்கான சகல விடைகளையும் மு.கா தலைவர் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பது மட்டும் நாம் எல்லோரும் விளங்க வேண்டிய ஒரு தேவைப்பாடாகும். 

இவ்விடத்தில் :

தேசியப்பட்டியல் விவகாரத்தில் கடந்த காலங்களைப் போன்றல்லாமல் தலைமைக்கு விசுவாசமாகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றியும் தலைமை சொன்ன நேரத்திற்கு தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Dr ஹபீஸ், தான் ஒரு நேர்மைத்துவம் மிக்கவன் என்பதனையும், தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவன் என்பதனையும் தெளிவாக நிரூபித்துள்ளார். உண்மையில் இந்த விடயமானது அவரிற்கு கிடைத்த கீர்த்தியாக இருப்பதோடு, கடந்த காலங்களில் தேசியப் பட்டியல்களை பெற்றுக் கொண்டு தலைமைக்கு துறோகம் செய்தவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரனத்தினையும் காட்டியுள்ளார். இது தவிர அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Dr ஹபீஸ் அமைச்சர் றிசாட் பதியுத்தீனின் பக்கம் தாவப் போகின்றார் என்கின்ற செய்திக்கும் முற்றுப் புள்ளி வைத்து வெளியேறியுள்ளார். 

இனி இந்த தேசியப்பட்டியல் விவகாரத்தில் மு.கா தலைமைக்கு அழுத்தம் கொடுத்து அவர் பின்னால் படையெடுத்து பதவியை எப்படியாவது பறித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தேசியப் பட்டியலுக்கு குறி வைத்துள்ள அனைவர்களும் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். ஆனால் இந்தப் பருப்புகள் ஒன்றும் இனி ஹக்கீமிடத்தில் வேகாது என்பதுதான் உண்மையான விடயமாகும். இதற்காகவே அவர் தனக்கு மிகவும் விசுவாசமான இருவர்களுக்கு முதல் இரு தேசியப்பட்டியல்களியும் வழங்கினார்.  

இது ஒரு புறமிருக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Dr ஹபீஸ் அவர்கள் தனது MP பதவியினை இராஜினாமா செய்த அதே நிமிடம் சமூக வலைத்தளங்களில் அவரின் இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான தௌபீக், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஆகியோர்களின் பெயர்கள் தீயாகப் பரவதுவங்கியுள்ளன. அந்த வகையில் முதலாவது  இராஜினாமா செய்யப்பட்ட தேசியப் பட்டியலானது இம்மூவர்களில் ஒருவரிற்குச் செல்லுமா அல்லது இம்மூவர்களும் வசிக்கும் மாவட்டத்தினை விட்டு வேறு மாவட்டத்திற்கு கை மாறுமா என்பதுதான் இங்கிருக்கின்ற முக்கியமான விசயமாகும். 

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் அரசியல் அதிகாரம் இல்லாமல் தவிக்கும் பிரதான மாவட்டமாக திருகோணமலை மாவட்டமும், அதே போன்று சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டும் ஒரு முஸ்லிம் MP யைக்கூட பெற முடியாமல் அனாதையாக கிடக்கும் குருணாகலும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. உண்மையில் இந்த விடயங்களானது எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லீம்களின் நிலையான இருப்பிற்கு துணை போகக்கூடிய பெறுமதி வாய்ந்த பதவியாக இருக்கப் போகின்றது. 

இது தவிர திருகோணமலை மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால் காலங்காலமாக முஸ்லிம் காங்கிரசின் ஆழுகைக்கு உள்ளான ஒரு மாவட்டம் என்று சொன்னாலும் தவறில்லை.  இருந்தாலும் அண்மைக்காலமாக இந்த மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வருகையால் முஸ்லிம் காங்கிரஸ் நிலை தடுமாறி விட்டது. அதில் ஆட்சியுடன் அதிகாரத்திலிருந்த பிரதியமைச்சர் தௌபீக் அவர்கள் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தது இதற்கு மிகவும் சான்று பகிரும் ஒரு விடயமாகும். தனது ஆழுகைக்கு உள்ள ஒரு மாவட்டத்தில் தனது கட்சி ஒரு ஆசனத்தினைக் கூட பெற முடியாமையானது அந்த கட்சிக்கும் அதன் தலைமைக்கும் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. எனவே இந்த நிலை இங்கு தொடருமாயின் வன்னியில் உள்ள நிலைமை போன்றே திருமலையிலும் மு.காவிற்கு தோற்றுவிக்கக்கூடிய சூழ் நிலைகளும் உருவாகும். எனவே தேசியப்பட்டியல் விவகாரத்தில் திருகோணமலை  முன்னிலைப்படுத்தப்படவேண்டியதில் ஒரு தவறும் இல்லை என்பதுதான் மிகவும் தெளிவான விடயம். 

இது இவ்வாறு இருக்க முஸ்லிம் காங்கிரசானது இந்த தேர்தலோடு விஸ்பரூபம் எடுத்துக் கொண்ட இரண்டு மாவட்டங்களில் தனது தேசியப் பட்டியலினை வழங்குமா என்ற கேள்விகள் தொடுக்கப்படும் இந்த நேரத்தில், மறு பக்கம் சில நியாயமான கேள்விகளும் மக்களிடத்தில் எழாமலில்லை. அந்த வகையில் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் தந்திரமாக காய்களை நகர்த்தக் கூடிய ஆற்றல் கட்சியின் செயலாளர் ஹசன் அலியைத் தவிர வேறு எவரிடத்திலும் இல்லை. ஏனென்றால் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்றபட்ட அநீதிகளை ஐ.நா வரை கொண்டு செல்வதில் ஹசன் அழியப் போன்றோர்களுக்கு மிகவும் முக்கிய பங்குண்டு. ஆனால் தற்போது மு.கா சார்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சும்மாவேனும் அறிக்கைகளை விடுவதற்கும், முஸ்லீம்களின் காணிகள் பற்றி கதைப்பதற்கும், கரையோரம் பற்றிக் கதைப்பதற்கும் திரானியற்றவர்களாகவும், அதுபற்றிய போதிய அறிவின்மையாகவும், தெளிவின்மையாகவும் காணப்படுகின்றார்கள். 

இதேவேளை பாராளுமனத்தில் மு.கா தலைவரோடு சேர்ந்து திட்டங்களை வகுப்பதற்கும், அவைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஹசன் அலியைப் போன்றோர்களை தலைவர் ஹக்கீம் தன்னகம் வைத்துக் கொள்வாரா  என்பது சந்தேகமே. எனவே இவ்விடத்தில் ஹசன் அலிக்கு கட்டாயம் தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமா எனும் கேள்விக்கணைகள் தொடுக்கப்படும் போது அதன் விடை இல்லை என்றே எல்லோராலும் சொல்லப்படகூடிய சூழ் நிலையும்  காணப்படுகின்றது. ஏனென்றால் அம்பாறை மாவட்டம் சார்பாக ஹசன் அலிக்கு வழங்கினால் அட்டாளைச்சேனையின் கதி என்னாவது? ஏனென்றால் அம்பாறைக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படுவதாக இருந்தால் அது அட்டாளைச்சேனைக்கே வழங்கப்படும் என மு.கா தலைவர் கூறியுள்ளார். எனவே இவ்விடத்தில் தேசியப்பட்டியலானது மிகப்பெரும் சவாலான ஒரு பங்கீட்டுப் பிரச்சியையாக மாறப் போகின்றது என்பது மட்டும் உண்மையாகும். 

அடுத்ததாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமுண்டு எனும் கதை பரவலாக அடிபடுகின்ற போது இவ்விடயத்தில் அவரிற்கு அவசியம் வழங்கப்படவேண்டுமா எனும் கேள்விக்கணைகளும் எழத்தான் செய்துள்ளன. ஏனென்றால் மிகப்பெரும் ஒரு அரசியல் அதிகாரத்திலுள்ள ஒருவரிற்கும், அரசியல் அதிகாரம் கிடைத்த ஒரு தொகுதிக்கும் மீண்டுமொரு அரசியல் அதிகாரம் ஒன்று வழங்கப்படுவதானது மு.காவின் எந்த போராளியாலும் சகித்துக் கொள்ள முடியாததொன்றாகும். ஏனென்றால் மிக நீண்ட காலத்தின் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கு இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் கிடைத்தது மிகப்பெரும் வெற்றியாக கணிக்கப்படுவதோடு அந்த தொகுதியில் கிழக்கு முதல்வர் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டால் அங்கு தன்னாதிக்கம் தலை தூக்கி மீண்டுமொரு பிழவு ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படும். எனவே மு.கா விற்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியலினை மட்டக்களப்பிற்கு வழங்குவதற்கான  எந்தவித தேவைப்பாடுகளும் கட்சிக்கும் தலைமைக்கும் இருக்காது என்பதுதான் யதார்த்தமான விடயமாகும். 

அடுத்ததாக குருநாகல். இந்த மாவட்டமானது கடந்த காலங்களில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொண்டு வந்த மாவட்டம். ஆனால் இம்முறை அது கை நழுவி மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த  ஒருவர் இங்கு வாழும் முஸ்லீம்களின் பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். உண்மையின் இந்த விடயமானது அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன் ஆகியோர்களுக்கிடையில் நடந்த பனிப்போரின் உச்சக் கட்டமாக இலகுவாக முஸ்லீம்களுக்கு கிடைக்கவிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கை நழுவிப்போனது. ஆனால் இந்த விடயத்தில் பல்வேறு குளறுபடிகளும், குத்து வெட்டுக்களும் இரு சாரார்களாலும் செய்யப்பட்டதுதான் வேதனைப்படவேண்டிய தொன்றாகும். மேலும் தற்போதய சூழ்நிலையில் இந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள்  பற்றி பாராளுமன்றத்தில் பேசக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதுதான் நாம் கவலைப்படக் கூடியதொன்றாகும். எனவே இந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தினையும் வழங்க வேண்டியது தேர்தல் காலங்களில் இங்கு சண்டை பிடித்து திரிந்த இரண்டு அமைச்சர்களின் கடமையாகும். எனவே இவ்விடயத்தில் மு.கா விற்கு வழங்கப்பட்டுள்ள தேசியப் பட்டியலில் ஒன்றையாவது குருநாகலுக்கு வழங்க வேண்டியது அம்மக்களுக்கு செய்யும் பேருபகாரமாகும். அப்போதுதான் இனிவரும் தேர்தல் காலங்களில் தொடர்ச்சியாக இம்மாவட்ட மக்களை தன்னகத்தே வைத்துக் கொள்ளக் கூடிய மிகப்பெரும் சந்தர்ப்பமாக மு.கா விற்கு மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

இறுதியாக மு.காவிற்கு கிடைத்துள்ள இரண்டு தேசியப் பட்டியல்களுள் ஒன்று காலியான நிலையில் அதனை அடைவதற்கு அலைந்து திரியும் தறுவாயில், அந்த இடத்திற்கு மு.கா தலைவர் யாரை நியமிக்கப்போகின்றார் என்பதும், கட்சிக்குள் இருக்கும் அடிமட்ட போராளிகளையும், அதன் அடிவருடிகளையும் எவ்வாறு திருப்திப்படுத்தப் போகின்றார் என்பதுமே மூடு மந்திரமாக இருக்கின்றது. 

எனவே இவை எல்லாவற்றிக்கும் பொதுவாக மு.கா சார்பாக அரசியல் அதிகாரம் அற்றுக் கிடக்கும் திருமலை மாவட்டதிற்கும், குருநாகல் மாவட்டத்திற்கும் எப்படியாவது தேசியப்பட்டிய வரம் ஒன்றினை வழங்குவது அமைச்சர் ஹக்கீமின் கடமையாகும்! 

1 comment:

  1. Don't give publicity to this shit foxy hakeem and garbage slmc.these culprits ruin the party that late mr.ashraf build.hakeem get lost..

    ReplyDelete

Powered by Blogger.