சிவப்பு நிறம் தவிர்ந்த, வேறு இரத்தம் உள்ளவர்கள் உடனடியாக என்னை சந்திக்கவும் - ரன்முத்துகல தேரர்
(சுலைமான் றாபி)
மனிதனாப் பிறந்த ஒவ்வொருத்தரின் உடம்புகளில் ஓடும் இரத்தம் எல்லாம் ஒரே இரத்தமாகும். அதன் நிறமும் சிவப்பாகும். இதுதவிர இந்நாட்டில் வேறு இரத்தம் உள்ளவர்கள் உடனடியாக என்னை சந்திக்கவும் என கல்முனை ரன்முத்துகல விகாரையின் பொறுப்பதிகாரி ரன்முத்துகல தேரர் இன்றைய தினம் (11) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் :
இலங்கையில் சிவப்பு நிறம் தவிர்ந்த வேறு இரத்தங்கள் உள்ளவர்களை நான் கண்டது கிடையாது. ஒரே இரத்தம், ஒரே நாடு, ஒரே மக்களாக நாம் வாழும் நேரத்தில் இவ்வாறான மரநடுகை நிகழ்வுகள் நடைபெறுவது மனதிற்கு மகிழ்ச்சி தருகின்றது. விசேடமாக நல்லாட்சியில் எல்லோரும் இன மத மொழிகளை கடந்து நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம். இதே நிம்மதிகள் தொடர்ந்தும் நிலவ வேண்டும். ஒரு அலுவலகத்தில் மூன்று இன மக்களும் செறிந்து வேலை செய்கின்ற போதுதான் அந்த அலுவலகத்தில் சந்தோசம் மகிழ்ச்சிப் பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும்.
அதேபோன்று கடந்த ஒருவருடத்திற்கு முன்பு நாம் பெற்ற நல்லாட்சியை தொடர்ந்தும் பேணிக்காப்பற்றுவது ஒவ்வொரு அரச ஊழியர்களின் தலையாய கடமையாகும். ஏனென்றால் அரச அலுவலகங்களிளிருந்தே இந்நாட்டிற்கான சகல நிர்வாக செயற்பாடுகளும் முன் கொண்டு செல்லப் படுகின்றன. எனவே இந்த விடயத்தில் வேற்றுமையகளை கழைந்து எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுவதுடன், மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை இன்றைய தினம் நல்லாட்சியின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு இன்று காலை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் "நாட்டிற்கு வனம்" எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மரநடுகை மற்றும் சர்வமத பிரார்த்தனைகள் என்பன இடம்பெற்றதோடு நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிரினால் மரக்கன்றும் நட்டுவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இரத்தம் மட்டுமா மனிதனை வாழ வைக்கிறது??
ReplyDelete