காட்டு யானையை சுட்டுக் கொன்றவர், தன்னைத்தானே சுட்டு தற்கொலை
காட்டு யானை ஒன்றை சுட்டுக் கொன்ற நபரொருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வனாதவில்லு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எளுவன்குளம் - ரால்மடுவ பகுதியைச் சேர்ந்த செல்வராசா சிவபாதசுந்தரம் எனும் 46 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாகும்.
மேலும் தனது மனைவியைப் பிரிந்து பிள்ளைகளுடன் இவர் வாழ்ந்து வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, செல்வராசா சிவபாதசுந்தரம் அப் பகுதி சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி புரிந்து வந்ததோடு, சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தந்தமுடைய யானை ஒன்றை சுட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த யானை உயிரிழந்ததை அறிந்த அவர், ஹோட்டலுக்கு அருகிலுள்ள இடமொன்றில் வைத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, இதன்போது தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட அவர், தன்னால் ஒரு யானை சுடப்பட்டதாகவும் அந்த யானை இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது எனவும் அதனால் தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் அவரது சகோதரர் வனாதவில்லு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி ரால்மடுவ பகுதிக்கு சென்ற பொலிஸார், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், செல்வராசா சிவபாதசுந்தரத்தின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் அந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த யானையின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த யானையே செல்வராசா சிவபாதசுந்தரத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Post a Comment