முஸ்லிம்களை தூண்டி, சண்டைக்கு வந்தபின் அழித்தொழிப்பதற்கான முயற்சி..!
சிங்ஹ லே, சொல்ல வருவதென்ன?
-ஏ.எல்.நிப்றாஸ்-
இலங்கையில் 'சிங்ஹ லே' என்று ஒரு புதுவகையான இரத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் இரத்தம் எல்லோருக்கும் பொதுவானது என்றும் அது இனத்தால் மதத்தால் வேறுபடுவதில்லை என்றும் நமக்கு சொல்லப்பட்ட விஞ்ஞான உண்மை, இன்று சில இனவாத சக்திகளால் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தை 'குறூப்' அடிப்படையில் வகைப்படுத்துகின்ற பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளின் கீழ் இத்தனை காலமும் எத்தனையோ வைத்தியசாலைகளில் சிங்களவர்களுக்கு தமிழனின் இரத்தமும், முஸ்லிமும் இரத்தமும் பாய்ச்சப்பட்டுள்ளன. அதேபோல் சிங்களவனின் இரத்தம் எத்தனையோ முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் உடம்பில் கலந்திருக்கின்றது. ஆனால், இனி ஆனால் 'சிங்ஹ லே' என்ற கொள்கை உள்ளவர்களுக்கு சிங்கத்தின் இரத்தத்தை ஏற்றுவார்களோ தெரியாது.
கடந்த பல மாதங்களாக 'சிங்ஹ லே' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் சிங்கள இனவாதிகளால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிங்க இலட்சினையுடன் கபிலம் சார்ந்த மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான எழுத்துக்களைக் கொண்ட இந்த ஸ்டிக்கர்கள் ஆட்டோக்கள், பஸ்களில் மட்டுமல்ல மோட்டார் சைக்கிள்களிலும் அதன் ஹெல்மட்டுக்களிலும் கூட ஒட்டப்பட்டிருப்பதை காண்கின்றோம். இவ்வாறான ஸ்டிக்கர்கள் 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அறிய முடிகின்றது. 35 ரூபா கூட பெறுமதியற்ற ஒரு ஸ்டிக்கருக்கு 100 மடங்கு அதிகமாக பணம் வழங்கப்படுமாக இருந்தால், அதில் ஏதோ மறைமுக பெறுமதி ஒன்று இருக்க வேண்டும். அதுதான் இனவாதம். ஆரம்பத்தில் சிறுபான்மை மக்கள் இதை ஒரு சர்வசாதாரணமான ஸ்டிக்கராகவே பார்த்தனர். ஆனால் இப்போது அது தமிழர்களையும் முஸ்லிம்களையும் பயங்காட்டும் அளவுக்கு வேறு ஒரு பரிணாமம் எடுத்திருக்கின்றது.
எவ்வாறிருப்பினும் இவ்வாசகத்தின் தோற்றுவாய் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது, பச்சைகுத்தும் கலைஞரான நாமல் பண்டார என்பவரால் பல வருடங்களுக்கு முன்னமே 'சிங்ஹ லே' என்ற வாசகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனது ஸ்டூடியோவை வியாபார ரீதியாக பிரபலப்படுத்துவதற்காகவே இந்த வாசகத்தை அவர் வெளியிட்டார். இவ்வாசகம் எவ்வித மறைமுக நோக்கங்களுக்காகவும் உருவாக்கப்பட்டதல்ல என்றாலும் இன்று சிலர் இதனை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர் என்று அவர் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
நாமல் பண்டார தரப்பில் இவ்வாறு சொல்லப்பட்டாலும், இவ்வாசகம் இன்று வேறு ஒருவிதமான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் இவ்வளவு நாளும் மறைமுகமாக செயற்பட்டு வந்த 'சிங்ஹலே' அமைப்பு இப்போது பகிரங்கமாக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றது. இதன் தலைவராக யக்கலமுல்ல பாவர தேரர் அறிவிக்கப்பட்டுள்ளார். செயலாளராக முன்னாள் பொதுபலசேனாவின் முக்கியஸ்தர் ஒருவர் செயற்படுகின்றார்.
இலங்கையின் புராதன பெயர் சிங்ஹலே என்றும் அதன்படி இலங்கையில் பிறக்கின்ற எல்லோரும் சிங்களவர்களே என்றும் ஒரு ஆய்வாளர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். சிங்ஹலே பௌத்தர்கள், சிங்ஹலே தமிழர்கள், சிங்ஹலே முஸ்லிம்கள் என்றே மக்கள் அழைக்கப்பட வேண்டும் என்பது அவர் போன்றவர்களின் நிலைப்பாடாகும். இது அடிப்படையற்ற ஒரு வாதமாகும். இனம் என்று வருகின்ற போது, இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர் என்ற வேறுபடுத்தலே இருக்கக் கூடாது என்றும் 'இலங்கையர்' என்றே எழுதப்பட வேண்டுமென்றும் மக்களுக்கு பல வருடங்களுக்கு முன்னமே அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இது நகைப்புக்கிடமான ஒரு கோரிக்கையும் ஆகும். அமெரிக்காவில் பிறக்கும் சிங்களக் குழந்தை ஒன்றை 'அமெரிக்க சிங்களவன்' என்றும் சிங்கள தம்பதியினருக்கு சவூதியில் வைத்து பிறக்கும் குழந்தைக்கு 'அராபிய சிங்களவன்' என்றும் அழைப்பதற்கு சிங்கள அடிப்படைவாதிகள் எப்போது முன்வருகின்றார்களோ, அப்போது மேற்படி சிங்ஹலே முஸ்லிம்கள் என்ற கோரிக்கை பற்றி சிந்திக்கலாம்.
முஸ்லிம்களை தூண்டிவிட்டு அவர்களாக சண்டைக்கு வந்த பின்னர் அடியோடு அழித்தொழிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற புதுமாதியான சீண்டுதல்களே இவையாகும். முஸ்லிம்கள் கிளர்ந்தௌ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படி நடந்தால் முஸ்லிம்களை தேசவிரோதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்டி ஒருகை பார்ப்பதற்கு பேரினவாதம் மனக்கணக்கு போடுகின்றது. தமிழர்கள் ஏற்கனவே அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டார்கள். இப்போது அவர்கள் மீது கை வைத்தால் சர்வதேச அழுத்தங்கள் ஏற்படும். எனவே தமிழர்களைப் போன்று முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருக்க வேண்டுமென்பதே சிங்கள அடிப்படைவாதிகள் ஆசையாக இருக்கின்றது.
இதுதவிர இதில் அரசியல் நோக்கமும் இருக்கின்றது. முன்னைய ஆட்சி தோல்வியடைவதற்கு இனவாதமும் முக்கிய காரணமாக இருந்தது. எனவே, அதே ஆயுதத்தைக்கு கொண்டு இன்றைய அரசியலிலும் ஸ்திரமற்ற ஏற்படுத்துவற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. ஏனெனில், அரசியலில் பிழைப்பு நடாத்துவதற்கு சிலருக்கு, மிகக் குறைந்த செலவில் கிடைக்கத் தக்கதாகவுள்ள ஒரு கருவியாக இனவாதமே இருக்கின்றது. எந்த சிறுபான்மை மக்கள், நல்லாட்சிக்கு ஆணை வழங்கினார்களோ அவர்கள் மனதில் இன்றைய ஆட்சிச் சூழல் குறித்த வெறுப்பையும் நம்பிக்கையீனத்தையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் ஆரம்ப இலக்காக இருக்கும்.
சிறுபான்மை முஸ்லிம்களும் தமிழர்களும் இது குறித்து குழப்பமடையவோ கலவரமடையவோ தேவையில்லை. ஏனென்றால், சாமான்ய சிங்கள மக்கள் இனவாதத்திற்கு துணைபோகின்றவர்கள் அல்லர். அவர்கள் இன ஐக்கியத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். இலங்கையின் அனுபவத்தில் எந்தவொரு இனத்தையும் புறந்தள்ளிவிட்டு மற்றைய இனத்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பதை வரலாறு அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றது. எவ்வாறிருப்பினும் சிங்கள மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் மிகப் புத்திசாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்டுச் சொல்வதென்றால், 'சிங்ஹ லே' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களில் ஏறுவதற்கு முஸ்லிம்களுக்கு சற்று தயக்கமும் பயமும் ஏற்படுகின்றது. இதனால் முஸ்லிம்கள் யாரும் தமது முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்யாமையால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக பல ஆட்டோ சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று நுகோகொடை பகுதியில் 'சிங்ஹ லே' என்ற வாசகம் எழுதப்பட்ட சுவர்களில் இருந்து அதனை அழித்துவிட்டு, புதிதாக பெயின்ட் பூசுவதற்கு தாம் தயாராக இருப்பதாக சில சிங்கள முற்போக்கு இளைஞர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்வந்துள்ளனர்.
நல்லாட்சிக்கான ஆணையை வழங்கிவிட்டால் இனவாதிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விடுவார்கள் என்றே சிறுபான்மை மக்களின் பெரும்பாலானோர் எண்ணியிருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இன்றும் ஏதோ ஒரு அடிப்படையில் இனவாத கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முஸ்லிம்களும் தமிழர்களும் அவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. சிங்கள பௌத்த பிக்குகள் மீது அல்லது அடிப்படைவாதிகள் மீது சட்டத்தை பிரயோகிப்பது, அரசாங்கத்திற்குஎவ்வாறான எதிர்விளைவுகளைக் கொண்டுவரும் என்ற யதார்த்தத்தை சிறுபான்மையினர் விளங்கி வைத்திருப்பதால், இன்னும் நம்பிக்கையிழக்காமல் இவ்வாறு பொறுமையுடன் உள்ளனர். இதனை அரசாங்கம் சரியாக எடைபோட வேண்டும். முன்னைய அரசாங்கம் செய்த அதே தவறை நல்லாட்சியும் செய்துவிடலாகாது.
'சிங்ஹ லே' பிரச்சாரம் என்பது உண்மையில் மிகச் சிறிய ஒரு விடயம்தான். அது முஸ்லிம்களை இலக்காகக் கொண்டதன்றி, வேறு நோக்கத்தை கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், இனவெறுப்புப் பேச்சை தடைசெய்யும் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக் கொண்டுள்ள ஒரு பின்புலத்தில், இன்று நாட்டில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்த்தால்;, இவையெல்லாம் வேறு நோக்கங்களை கொண்;டவை என நம்புவது கடினமாக உள்ளது. நாட்டுப்பற்று, தேசியவாதம் என்ற தோரணையில் வேறு வேறு முகமூடிகளை அணிந்து கொண்டும் நான்கைந்து பிக்குகளை உறுப்பினராக்கிக் கொண்டும் புதிதுபுதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் அமைப்புக்கள் எதை நோக்கி தமது காய்களை நகர்த்துகின்றன என்பதும், அது எங்குவந்து நிற்கப் போகின்றது என்பதும், ஊகிக்க முடியாத விடயங்கள் அல்ல. எனவே அரசாங்கம் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
தனது மார்புக்கச்சையை கழற்றி எறிகின்ற பெண்ணை விட, ஒட்டுமொத்தமாக இன்னுமொரு இனத்தின் மானத்தை காக்கும் கச்சையை (கோவணத்தை) உருவியெடுக்கின்ற பேர்வழிகள், கிருமிநாசினிகளை விட அபாயகரமானவர்கள்!
Why not JM make a translation of this and handover to HE President and Hon. PM who are co0nsidered to be the Custodians of Minorities.
ReplyDelete