மகிந்த தங்கவிருந்த மாளிகையில் தங்கம் புதைக்கப்பட்ட விவகாரம் பொலிஸாரை விரைந்து செயற்பட கோரிக்கை
தனது பீக்கொக் மாளிகையில் தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாடு ஒரு வாரம் ஆகியும் இதுவரை கவனத்தில் கொள்ளப்படவில்லை என பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்தார்.
பீக்கொக் மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விசாரணை தொடர்பில் பொலிஸார் விரைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எனது பீகொக் மாளிகையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கவிருந்தேன். எனினும் இறுதி தருணத்தில் அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். அதற்கிடையில் இந்த வளாகத்திலுள்ள நீச்சல் தடாகத்தில் மகிந்த ராஜபக்சவின் வாஸ்து நிபுணர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய கடல் மணல் நிரப்பப்பட்டது. இன்னும் அது அகற்றப்பட்டவில்லை.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தினமும் காலையில் இடம்பெறும் பத்திரிகை பார்வையின் போது இந்த நீச்சல் தடாகம் பற்றியும், இதனுள் மகிந்தவின் தங்கமும், பணமும் மூட்டையிட்டு புதைக்கப்பட்டிருப்பதாகவும் பிரசித்தமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து நான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன். இந்த மணலை தோண்டியெடுத்து சிலர் கூறுவதைப் போன்று அதனுள் தங்கம், பணம் உள்ளதா? என தேடிப்பார்க்கும்படி கோரியிருந்தேன். முறைப்பாடு பதிவு செய்து இன்றுவரை ஒருவாரகாலம் ஆகியிருந்தும்கூட பொலிஸார் கவனமற்று இருப்பது வருத்தமளிக்கின்றது.
மேலதிகாரத்திலுள்ள சிலரது அல்லது வேறு சிலரது அழுத்தங்களுக்கு பொலிஸார் கீழ்ப்படிந்து எனது முறைப்பாட்டை கவனிக்காமல் மறந்துவிட்டார்களா? என்ற சந்தேகம் எனக்குள் எழுந்துள்ளது. எனவே பொலிஸார் விரைந்து செயற்பட்டு எனது முறைப்பாட்டை ஏற்று, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் – என்றார்.
ஒரு வருடம் டைம் கொடுத்திங்லா தங்கம் எல்லாம் ஒளித்து வைக்க
ReplyDelete